வாழ்க்கைப் பாடங்கள் 70
மறுமை நம்பிக்கைக்கு முன்னால் மனிதர்களில் மூன்று பிரிவினர் இருக்கின்றார்கள். ஒரு சாரார் மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்வை நம்பாதவர்கள்; அதனை நிராகரிப்பவர்கள். இரண்டாம் சாரார் மறுமையை நம்புபவர்கள். ஆனால் அதனை மறந்து அலட்சியமாக வாழ்பவர்கள். மூன்றாவது பிரிவினர் மறுமையை நம்பி அதனை எப்போதும் நினைவில் வைத்து அதற்காகத் தம்மைத் தயார் செய்பவர்கள்.
இந்த மூன்று பிரிவினரில் மூன்றாமவர்கள் தான் வெற்றியாளர்கள்; ஈடேற்றம் பெறுபவர்கள். நானும் நீங்களும் இந்த மூன்றாம் சாராராக இருக்க வேண்டும். தினமும் அந்த மகத்தான தினத்தை நினைவு கூர வேண்டும்; அதற்காக நம்மை நாம் தயார்படுத்த வேண்டும்.
திருக்குர்ஆன் கூறுகின்றது: ‘(அவர்கள்) எத்தகையோர் எனில், இறைவனை நினைவுகூருவதை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத் கொடுப்பதை விட்டும் வியாபாரமும் கொள்வினை கொடுப்பினையும் அவர்களைப் பாராமுகமாக்கி விடுவதில்லை; இதயங்கள் நிலைகுலைந்து, பார்வைகள் நிலைகுத்தி விடக்கூடிய ஒருநாள் குறித்து அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள்.’ (24:37)
மறுமை பற்றிய சிந்தனை உள்ளத்தில் எப்போதும் பசுமையாக இருக்கின்றபோது கிடைக்கின்ற நன்மைகள் பல. மறுமை பற்றிய சிந்தனை பொறுமை, திருப்தி, பிறரை மன்னிக்கும் மனப்பான்மை முதலான பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் பெருமை, அகம்பாவம், பொறாமை, மித மிஞ்சிய உலக ஆசை, வெறுப்பு, பகைமை, அடுத்தவருக்கு அநியாயம் செய்தல் முதலான பாவச் செயல்களிலிருந்து விலகவும் துணை செய்யும். மறுமையை நினைக்கின்ற அளவுக்கு உள்ளம் அமைதி காணும்.
அல்லாஹ்வை, அவனது கட்டளைகளை மறந்து, அலட்சியமாக நடந்து கொள்ளும் கப்லா எனும் ஆபத்தான போக்கிலிருந்து ஒருவர் விடுபடவும் மறுமை பற்றிய நினைவு துணை நிற்கும். எனவே, எந்த நினைவு தினத்தை மறந்தாலும் உலக முடிவு தினத்தை, அதனையடுத்து வரும் மறுமை நாளை மறவாமல் என்றும் எப்போதும் அதனை நினைவு கூர்வோம்; அந்த தினத்திற்காக நம்மை நாம் தயார்படுத்துவோம்!