இன்னும் ஒரு வாரத்தில் ஆதரிக்க ஆளில்லாத பிள்ளைகள் அஞ்சுமன் போய்விடுவார்கள். அது மிகப்பெரிய ஆதரவு நல்கும் இடம். சாலிஹாவும், முபீனைக் கூட்டிக்கொண்டு, தாம்பரம் போய் ஊரில் உறவினர்களுக்குக் கொடுக்க துணிமணிகள், பாசிமணிகள், ஹேர் கிளிப்புகள், வளையல்கள், பேண்டுகள், ஸ்கூல் பேக்ஸ், பென்சில் பாக்ஸ், வாட்டர் பாட்டில்கள், சேலைகள், கைலிகள், சின்னப்பிள்ளைகளுக்குத் தொப்பிகள் வாங்கினாள். போகும் முன் திண்பண்டங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று ஒத்திவைத்தாள்.
சாலிஹா ஊருக்குப் போக இன்னும் இரண்டே நாள்கள் தான் இருந்தன. முபீனின் உதவியால் எல்லாம் கச்சிதமாகக் கட்டியாயிற்று. பண்டங்கள் வைத்த பெட்டி,தன்னுடைய துணி சூட்கேஸ், பரிசு கொடுக்கும் பொருட்கள் வைத்த இரண்டு பேக்குகள். இத்தனையையும் தனியாகக் கொண்டு போய் எப்படி ஊர் போய்ச் சேர்வது என்ற கவலை எட்டிப் பார்த்தது. தலையில் தட்டி அடக்கினாள். பயம்தான் கோழையாக்கும் எதிரி.
‘சரோஜாமா! நம்ம நான்கு பேருக்கு மட்டும் இரவு சப்பாத்தி போடுங்க! சாயந்தரம் பிள்ளைகள் அங்கே டவுனிலிருக்கும் ஹோமுக்குப் போய்டுவாங்க!’
‘ஆண்ட்டி! வாட்ச்மேன் தாத்தா அவுட் ஹவுஸில் தங்குவார். நம்ம மூணு பேரும் இந்த பங்களாவில் இருக்க பயமாக இருக்கு ஆண்ட்டி’
‘என்னடி பயம்? அந்தச் சின்னப்பிள்ளைகளை நாம தானே பார்த்துக்கொண்டோம். இப்ப நம்மை நாமே பார்க்க முடியாதா? இன்று ஓர் இரவு. நாளை சரோஜாமா நம்மை அனுப்பிவிட்டுப் போய்விடுவாங்க! உன்னை மேடம் வீட்டிற்குக் கூட்டிப் போய்டுவாங்க!’
‘ஆண்ட்டி! நீங்க போய்ட்டு வந்திடுங்க ஆண்ட்டி!’
‘முபீன்! உனக்கும் கல்யாணம் ஆகிவிட்டால் நீயும் என்னை விட்டுப் போவாய்தானே?’
‘அத அப்ப பார்க்கலாம் ஆண்ட்டி! நீங்க சீக்கிரம் வந்துடுங்க ஆண்ட்டி’
‘சரி! சரி! பார்க்கலாம். நான் வீட்டிற்கு முதலில் போகிறேன். அம்மா, தம்பி, தங்கைககள் எல்லாம் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம். இங்கேயும், சைதா மேடத்தோடு எனக்குச் சரிப்பட்டு வருமா என்று தோணவில்லை. அல்லாஹ் எப்படி வைத்துள்ளானோ அப்படித்தான் நடக்கும்’
நான்கு மணிக்கு ஹோமிலுள்ள பிள்ளைகள் அஞ்சுமன் புறப்பட்டார்கள். கேட் வரை காரில் அவர்களை அனுப்பிவிட்டு வாட்ச்மேனிடம் பேசினாள்.
‘கொய்யா, மா, சப்போட்டாவிற்கெல்லாம் தண்ணீர் விட மறந்துடாதீங்க! தெரியாதவங்க வந்தா மெய்ன் கேட்டைத் திறக்க வேண்டாம். மேடங்களின் கார்கள் வந்தால் மட்டுமே திறக்க வேண்டும். உங்களுக்குக் காலை, மதிய சாப்பாடு வந்துவிடும். இரவு அதையே மீதம் வைத்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்குத் துணைக்கு வேறொரு ஆளை அனுப்புவாங்க’
‘சரிமா! சரிமா..! நீங்களெல்லாம் இருந்தது நல்லா இருந்துச்சிமா சீக்கிரம் வந்துடுவீங்கல்ல மா!’
தலையை ஆட்டி வைத்தாள். அஹமதாபாத் போகும்போது பிள்ளைகள் வேறு, கழுத்தைக் கட்டி, கன்னத்தில் முத்தமிட்டு, அழுது கொஞ்சி சீக்கிரம் வந்திடுங்க ஆண்ட்டி என்று கட்டளை பிறப்பித்துச்
சென்றது நினைவிற்கு வந்தது. எல்லோரும் என்னை விலைக்கு வாங்கிக்கொண்டது போல வந்துடுங்க, வந்துடுங்கங்குறாங்களே? நானென்ன யாருமில்லாதவளா? இல்லை ஒன்றுமில்லாதவளா?
விருட்டென்று உள்ளே நுழைவதிலிருந்து சாலிஹாவிற்குக் கோபம் வந்ததைப் புரிந்துகொண்டாள் முபீன்.
‘சரோஜாமா! ஆண்டிக்கு ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுங்க! கோபம் குறையுற மாதிரி இருக்கணும் டீ ருசி’
‘போ முபீன்! அம்மா கோபம் சோப்புக் குமுளி மாதிரி! கொஞ்ச நேரத்தில் போய்விடும்’
சாலிஹா, முபீனை முறைத்துப் பார்த்தாள்.
‘ஆண்டி! நீங்க முறைத்தால் உங்க கண்ணு ரெண்டும் பெருசாகி அழகா இருக்கு!’
சாலிஹா சிரித்து விட்டாள். முபீன் சரோஜாவின் கையிலிருந்த டீயை வாங்கி சாலிஹாவிடம் கொடுத்துவிட்டு பக்கத்தில் அமர்ந்தாள்.
‘ஆண்ட்டி! என் பங்கிற்கு நானும் சொல்றேன். சீக்கிரம் வந்துருங்க!’ கால் விரல்களுக்குச் சுடக்கு விட்டுக்கொண்டே முபீன் பேசினாள்.
‘எனக்கும் உன்னைத் தேடும் முபீன். எனக்குக் கை, கால் அமுக்கி விடுவது. நான் டீ குடிக்கும் நேரம் பார்த்து டீ தருவது நீதானே! ஏன் முபீன் நீ யார் வீட்டில் தங்குவாய்?’
‘பரிதா மேடம் வீட்டில், என் வயசுப் பிள்ளைங்க இருக்காங்க! வெளியில், காரில் கூட்டிப்போய்டுவாங்க. வீட்டிலிருந்தாலும் பயமில்லை. ஆனால், சைதா மேடம் வீட்டில் யாரும் இல்லை, மேடம் ஆஃபிசில் இருப் பாங்க...’ மென்று முழுங்கினாள்.
‘சொல்லு! வேற யாரெல்லாம் அங்கே இருக்காங்க?’
‘தாத்தா இருப்பாரு!’
‘தாத்தாவா?’
‘ஆமாம் ஆண்ட்டி! மேடத்தோட ஹஸ்பண்டு’
‘அன்னிக்கு வெள்ளைக்காரன் மாதிரி வந்தாரே அவரா?’
‘ஆமாம் ஆண்ட்டி!’
‘அவரிடம் நல்லாத் தானே பேசினாய்?’
‘கஷ்டம் ஆண்ட்டி! அவரு ஒரு ‘ஜொள்ளு!’ எனக்குப் பெரும்பாலும் அங்கே இருக்கப் பிடிக்காது. பரிதா மேடம் வீட்டில் தான் நிறைய நாள் இருப்பேன்’
இரவு படுக்கையில் சில விசயங்களை அவள் சொன்னபோது பகீரென்றது. பாலியல் கொடுமைகள் என்பது வெளியிலிருந்துதான் வர வேண்டுமென்பதில்லை. அது சொந்த மென்றும் பார்க்காது அநாதையென்றும் பார்க்காது என்ற உண்மை சாலிஹாவிற்குப் புரிந்தது.
சனிக்கிழமை. சாலிஹா ஊர் கிளம்பும் நாள். சைதா மேடம் டிரைவரிடம் ஒரு பார்சல் அனுப்பியிருந்தாள். முபீன் வியந்தாள். ‘ஆண்ட்டி! கல்லையும் இளக வச்சிட்டீங்க!’
பார்சலின் உள்ளே ஜிலேபியின் வாசம் வந்தது. நெய் மணம் கமழ்ந்தது. டிரைவர் காத்திருந்து சாலிஹா, முபீன் இருவரையும் ஏற்றிக்கொண்டு எழும்பூர் நோக்கிச் சென் றார். வண்டலூர் தாண்டியது கார். இனி தாம்பரம். எக்மோர் போக இரண்டு மணி நேரமாகிவிடும்.
எழும்பூரில் இன்னொரு அதிசயம் காத்திருந்தது. லக்கேஜ்களைச் சுமந்து கொண்டு பிளாட்பாரத்தில் நடக்கலானார்கள். டிரைவரும் சேர்ந்து பெட்டிகளைத் தூக்கி வந்தது சாலிஹாவிற்குக் கூச்சமாக இருந்தது.
‘வைங்க, நான் போர்ட்டரிடம் கொண்டு வரச்சொல்கிறேன்’ என்றாள்.
‘இருக்கட்டுங்க அம்மா!’ என்று தூக்கி வந்தார். அவள் ஏறக்கூடிய பெட்டிக்கு வரும் முன்னாலேயே, அங்கே சைதா மேடம், சாஜிதா மேடம், பரிதா மேடம் இன்னும் பல டிரஸ்டிகளும் நின்றிருந்தனர். சாலிஹா அருகில் சென்றதும் புன்னகைத்தனர். ஆங்கிலத்திலும், அரபியிலும் முகமன் கூறினார்கள். சாலிஹாவிற்கு வெட்கமாக இருந்தது. காதோரம் முபீன் கிசுகிசுத்தாள். ‘ஆண்ட்டி மால போட்டாலும் போடுவாங்க!’
‘சும்மா இருடி! எதையாவது சொல்லி, குத்தம் வந்துவிடப் போகிறது’
எல்லோரும் கைக்குலுக்கினார்கள். விடை கொடுத்தார்கள். அவரவர் கையில் கொண்டுவந்த பார்சல்களை சாலிஹாவின் கையில் திணித்தார்கள். இதெல்லாம் எதற்கு என்று நெளிந்தாள். திரும்பிப் பார்த்தாள். முபீனைக் காணவில்லை. எல்லோருக்கும் பின்னால் நின்று கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். ‘ஆண்ட்டி! வண்டி கிளம்பப்போகுது.. ஏறுங்க வண்டியிலே’
சைதா மேடம் வாய் திறந்தாள். ‘பத்திரமாகப் போய் வாமா! பீ கேர்ஃபுல்’ முகம் வாடி இருந்தது. எதையோ சொல்ல நினைக்கிறாள் என்பது சாலிஹாவிற்குப் புரிந்தது. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. ஈகோ தடுக்கிறது. மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். இந்த ஈகோவினால் எத்தனை உள்ளங்கள் ஒட்டாமல் விலகிக் கிடக்கின்றது.
பாண்டியன் துரித வண்டி புறப்படத் தயாரானது. முபீனைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். படியில் ஏறி வாசலில் நின்று எல்லோருக்கும் கை அசைத்தாள். புர்காவின் துப்பட்டாவினால் கண்ணீரைத் துடைக்கும் முபீனைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே எல்லோரும் மங்கலானார்கள். ஓ! நானும் அழுகிறேன். நான் ஏன் அழ வேண்டும்.எதற்காக அழ வேண்டும். தன்னையே தேற்றியவளாக தன் இடத்தில் வந்தமர்ந்தாள். வண்டி பிளாட்பாரத்தைக் கடந்து வேகமெடுத்தது.
தொடரும்