கால்கள்
நமது உடல் உறுப்புகளில் ஒவ்வொன்றும் முக்கியமானது தான். அதே சமயம், நாம் இடம் விட்டு இடம் நகரக் காரணமாக அமையும் கால்கள் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. குதிகால் எலும்பும் வளைந்த பாதமும்தான் நமது எடையைத் தாங்குகின்றன. மனிதர்களாகிய நாம் இரு காலிகள். அதாவது டூ வீலர்ஸ். விலங்கினங்களுக்கு நான்கு கால்கள். அதாவது ஃபோர் வீலர்ஸ். விலங்கினங்கள் இரண்டு கைகளையும் கால்களாகவே பயன்படுத்துகின்றன. புவியின் ஈர்ப்பு விசையை எதிர்த்து செயல்பட்டு நம்மைக் கம்பீரமாக எழுச்சி நடை போட வைப்பது இந்தக் கால்கள் தான். நாம் நடக்கும்போது இரண்டு கால்களும் ஒரே நேரத்தில் நகருவதில்லை. மாறி மாறிச் செயல்படுவதால் தான் நடக்கவே முடிகிறது.
சாதாரணமாக ஒரு நிமிடத்தில் 50 முறை காலை எடுத்து வைத்து நடக்கிறோம். நமது வாழ்நாளில் கிட்டத்தட்ட 1,00,000 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறோம். இருந்தாலும், பொதுவாக பாதம், குதிகால், பெருவிரல் மூட்டுகள் அவ்வளவு எளிதில் பழுதாவதில்லை. நமது கால்களின் பாதுகாப்புக்காகச் செருப்புகள் வாங்கி அணிகிறோம். ரப்பர் செருப்பு, தோல் செருப்பு இப்படி பல்வேறு காலணிகளை அணிகிறோம். சிலர் கட்டைகளில் கூட காலணி அணிகிறார்கள். ஆனால், அவை எல்லாம் ஒரு கட்டத்தில் தேய்ந்து விடுகின்றன. இரும்பிலே காலணி செய்து போட்டாலும் நிலை அதுதான். அதுவும் ஒரு கட்டத்தில் தேய்மானம் அடையும். ஆனால், நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நமது பாதங்களால் நடந்து கொண்டே இருக்கிறோம். அதன் மூலம் பாதங்கள் காய்க்குமே தவிர, ஒருபோதும் தேயவே தேயாது. ஆக, இவ்வளவு மென்மையான கால்கள் தொடர்ந்து நடந்தும் தேயாமல் இருக்கிறதென்றால், இறை படைப்பின் மகத் துவம்தான் என்ன? என்று என்றைக்காவது நாம் சிந்தித்து இருக்கிறோமா?
இரைப்பை
நமது உடலுக்குள் நடைபெறும் இயக்கம் குறித்து நாம் சற்றே சிந்திக்கவேண்டும். நாம் நமது வாயில் வைக்கின்ற உணவு இரைப்பையைச் சென்றடைகிறது. அந்த உணவு அங்கு அரைக்கப்பட்டு அதன் நல்ல பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு மெல்லிய நரம்புகள் வழியாக இதயம் வரை கொண்டு சேர்க்கப்படுகிறது. அதை மீண்டும் மெல்லிய நரம்புகள் வழியாக உடல் முழுவதும் தேவைக்கேற்ப விநியோகிக்கிறது. பிறகு இரைப்பையில் உள்ள கழிவுகள் மலம், சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது. இவ்வாறான நடவடிக்கையைச் செய்யச் சொன்னது யார்? செய்ய வைத்தது யார்? என்று நாம் என்றைக்காவது யோசித்தோமா? அதற்காக அந்த ஏக இறைவனுக்கு நன்றி செலுத்தினோமா?
உணவுக் குழாய், மூச்சுக் குழாய்
எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் உண்பதற்கும் சுவாசிப்பதற்கும் உடலுக்குள் வெவ்வேறு குழாய்களை அமைத்துள்ளான். உணவுக்குழாய் இரைப்பையுடனும் சுவாசக் குழாய் நுரையீரலுடனும் தொடர்புடையது. நாம் உண்ணும் போதும் பருகும் போதும் இயல்பாக சுவாசக் குழாய் மூடிக் கொள்ளும். உணவுக் குழாய் வழியாக உணவு இரைப்பையைச் சென்றடையும். இதே உணவு சுவாசக் குழாய் வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து விட்டால், நாம் உயிர் வாழ முடியாது. இருவகையான குழாய்களும் அருகருகே இருந்தாலும் அவை முரண்படாமல் செயல்படுவது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பரிய ஆற்றல் என்பதை நாம் என்றைக் காவது யோசித்தோமா? அதற்காக நாம் அந்த ஏக இறைவனுக்கு நன்றி செலுத்தினோமா?
அறிவோம்