காலை ஏழு மணிக்கெல்லாம் பெருமூச்சு விட்டபடி பாண்டியன் கூடல் நகருக்குள் நுழைந்தது. வைகை நதியின் பாலத்தின் மேல் ரயில் போகும்போது சாலிஹா எட்டிப்பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை சொட்டுத் தண்ணீர் இல்லை. நுங்கும் நுரையுமாகப் பொங்கிப் பெருக்கெடுத்து கரையைத் தொட்டு ஓடாவிட்டாலும், கால்கள் நனைய நடந்தாவது செல்லும் அளவில் தண்ணீர் ஓடும். இன்று, ‘கை வை’ என்ற நிலைக்கு ஆளாகிவிட்டது.
மதுரை நிலையத்தில் மூச்சிரைத்தடி வண்டி நின்றது. முதல் பிளாட்ஃபாரத்தில் கேட்டிற்கு முன் நின்றதில் பெருமகிழ்ச்சி. ஜன்னலுக்கு வெளியே யாரும் அழைத்துப்போக வந்துள்ளõர்களா? என்று ஒவ்வொருவராய் இறங்கும் வரை காத்திருந்தாள்.எல்லோரும் இறங்கிய பிறகு கதவுக்கருகில் ஒவ்வொரு பெட்டியாய்க் கொண்டு வந்து வைத்தாள். லக்கேஜ்களை வண்டியை விட்டுக் கீழே இறக்கி வைத்தாள்.
ஆள்கள் போகப் போகக் கூட்டம் குறைந்தது. நடைமேடை காலியானது. சாலிஹாவைத் தொடர்ந்து போர்ட்டர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.ரயில் ஏறும்போது சைதா மேடம் கேட்டது நினைவிற்கு வந்தது. ‘வீட்டிற்குச் செõல்லிட்டியா சாலிஹா?’ யோசித்தாள். இன்று வருவதைப் பற்றிச் சரியாகத் தானே சொன்னேன். தம்பியோ, அண்ணனோ வர வேண்டியதுதானே? வண்டி ஏறும் போது சூழ நின்றவர்களின் முகங்கள் ஒரு கணம் நினைவிலாடியது. அந்த நினைவைத் தட்டி விட்டாள்.
தோள்ப் பையிலிருந்து ஃபோனை எடுத்து டயல் செய்தாள். அந்தப்பக்கம் ரிங் போய்க்கொண்டே இருந்தது.
‘அம்பது ரூபாய் தாங்கம்மா! ஆட்டோ ஸ்டாண்ட் வரை தூக்கி வாரேன்’. சொல்லிக் கொண்டே தலையில் சூட்கேசை வைத்து அதன்மேல் பேக், தோளில் ஒரு பை, வலது கை, இடது கை என்று பொருள்களை வாரிக் கொண்டுவாங்கம்மா என்று நடந்தார்.
சாலிஹா பின்னால் நடந் தாள். ஆட்டோ அருகில் வந்த வுடன் போர்ட்டருக்கு பணம் கொடுத்துவிட்டு, ஆட்டோ பேசி ஏறி அமர்ந்தாள். மதுரையைப் போல, சென்னை வராது. ரயில்வே ஸ்டேசனை விட்டு, பெரியார் ஸ்டாண்ட் தாண்டி ஆட்டோ பாய்ந்தது. மக்கள் சாரை சாரையாகத் தலையில் சும்மாடோடும், சுமை களோடும் நடந்தார்கள். மதுரையைத் தூங்கா நகரம் என் பார்கள். எந்நேரமும், எந்தப் பொருளையும் வாங்கி விடலாம். அதிகாலையிலேயே பெட்டிக்கடை முதல், பலசரக்கு(மளிகை) கடை, டீ கடை வரை திறந்து விடுவார்கள்.
சென்னையிலோ அவசரத்திற்கு ஒரு பொருள் வாங்க முடியாது. போகும் இடமும் தூரமாக இருக்கும். தெற்குவாசல் வழியாக அவனியாபுரம் செல்லும் பாலத்தில் ஆட்டோ ஏறியது. ரஹ்மானியா பள்ளிவாசலுக்கு எதிர் தெருவில் நுழைந்தது. வீட்டுக்கருகில் வர வர, ஒருவிதமான உற்சாகம் தொற்றிக் கொண்டது. வண்டி நின்றவுடன் சில வீடுகளில் தலைகள் எட்டிப்பார்த்தன. வீட்டிற்குள்ளிருந்து சின்னத் தம்பி ஓடி வந்தான்.
‘அக்கா வாங்கக்கா!’ அழுகை வந்தது.
‘ஏண்டா கூப்பிட வரவில்லை?’
‘அண்ணே வர்ரேன்னாரு! அதான் நான் மெஜுரா காலேஜ் கிரவுண்டுக்கு ஃபுட்பால் விளையாடப் போய்ட்டேன்’ பேசிக்கொண்டே எல்லாப் பொருட்களையும் உள்ளே கொண்டு போனான். அக்கா மீது மிகப்பெரும் அன்பு கொண்டவன்.
‘அஸ்ஸலாமு அலைக்கும்!’ என்று முகமன் கூறிகொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.
‘என் தங்க மகளே! வந்தியாமா? வா! சொகமாயிருக்கியா!?’
‘நீங்க எப்படிமா இருக்கீங்க? ரொம்ப மெலிஞ்சிட்டீங்களேமா!’
மாடியிலிருந்து அண்ணன் மனைவி, தம்பி மனைவி பிள்ளைகள் எல்லோரும் வந்தார்கள். பிள்ளைகள் ‘மாமி, மாமி’ என்று சுற்றிக் கொண்டார்கள். அண்ணன் வந்து நுழைந்தான்.
‘சாலிஹா கொஞ்சம் வெயிட் பண்ணக் கூடாதா!? தேடி அலைந்து வீட்டிற்கு வந்தால் இங்கே இருக்கே!’
‘போன் போட்டேண்ணே.. ரிங் அடித்துக் கொண்டே இருந்தது’
‘போனை வீட்டில் வைத்துவிட்டு வந்துட்டேன்’ டீ வந்தது. குடித்தாள். முபீனின் டீ நினைவிற்கு வந்தது. இஞ்சி ஏலக்காய் வாசனையுடன் கட்டியாகப் போட்டுத்தருவாள். மற, மற என்றது உள்ளம். யாரையும் நினைக்காதே! மனதை அடக்கினாள்.அண்ணன் சாதிக் கேட்டான். ‘எத்தனை நாளைக்கு சாலிஹா வந்திருக்கே?
‘அண்ணணை ஏறிட்டுப் பார்த்தாள். அம்மா இடையில் புகுந்தாள்.
‘இப்பதான் வந்திருக்கா. அதுக்குள்ள போறதைப் பற்றி பேசுறியேப்பா?’
‘அதுக்கில்லம்மா! அத்தா இறந்த வீட்டில் வந்தபோதே அந்தப் பிள்ளைகள் எப்போ வாரீங்கன்னு கேட்டு ஃபோனப் போட்டு குடைந்ததுகள். அவளுக்கு என்னமா குறை அவள் கணவர் வீட்டில் எவ்வளவு சொத்து இருக்கிறது. பேசாமல் உங்களோடு துணைக்கு இருந்து உங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கலாமே? மெட்ராஸில் போய் தனியா கிடக்கணுமா? அப்புறம் சாலிஹாவை என் வீட்டிற்கும் விருந்திற்கு அழைக்கத் தான். சாலிஹா! இரண்டு நாளை எங்களுக்கும் ஒதுக்கி வை!’
‘இரண்டு நாளா? இரண்டே நாள் தானா?’
இரவு அம்மாவிடம் சொன்னாள். ‘அம்மா நான் உங்களிடமே வந்து விட்டேன்.’
‘ஏம்மா! அந்த வேலை பிடிக்கவில்லையா? வேலையை விட்டுவிட்டாயா?’ ரகசியமாகக் கேட்டாள்.
‘இல்லம்மா! கணவர் இறந்த பெண்களின் பொறுப்பு, தந்தை அல்லது சகோதரர்கள் தானேமா?’ அம்மா மௌனமானாள்.
‘என்னம்மா பேச மாட்டேங்கிறீங்க!’
‘கொண்டவன் கஞ்சி கொதிக்கக் கொதிக்க! ஆமக்கா கஞ்சி ஆற ஆறங்குவாங்க! அத்தா போனபிறகு இவனுடைய நிலை வேற மாதிரி ஆகிடுச்சு. அருமையான வேலையை என்னை நம்பி விட்டு வராதம்மா! என் நிலையே இங்க சொல்ல முடியவில்லை. எங்குட்டும் போயிறலாமான்னு சில நேரம் ஆயிடுது. இவனுகளை நம்பி வந்துடாதே! கவுரவமாக உன் காலில் நிற்கப் பார்’.அம்மா ஏதேதோ சொல்லிக் கொண்டே போனாள். சாலிஹாவின் எண்ணக்கோட்டை சரிய ஆரம்பித்தது. சாலிஹா தூக்கம் வராமல் பாயில் புரண்டு கொண்டிருந்தாள். லேசில் தூக்கம் வர மறுத்தது. பக்கத்தில் கட்டிலில் படுத்திருந்த அம்மா கேட்டாள். ‘ஏம்மா தூக்கம் வரவில்லையா? என் பக்கத்தில் வந்து படுமா’
ஒரு காலத்தில் குடும்பத்தில் பிரச்னைகள் தலை தூக்கியபோது, மாமியார் ‘பிள்ளை உண்டாகத் துப்பற்றவள்’ என்று வசைபாடிய போது, அம்மா சாலிஹாவிடம் கூறினாள், ‘வந்துவிடம்மா! தாயோடு பிள்ளையாய் வந்துவிடு! கட்டியாய் தின்பதைக் கரைத்து இருவரும் கஞ்சியாய்க் குடித்து உயிர் வாழலாம்’ என்று சொன்ன அம்மாவா? சாலிஹாவிற்கு ஏதும் புரியவில்லை.
சாலிஹாவின் கணவன் இறந்த பிறகு கூட தன்னிடம், ‘போதும் இந்த வீட்டில் ஓடாய்த் தேய்ந்து, ஓய்வில்லாமல் உழைத்தது. வந்துவிடு பிறந்த வீட்டிற்கு. கொடிக்குக் காய் பாரமில்லை!’ என்று பேசிய அம்மாவா?’ நம்ப முடியவில்லை.
எப்போது உறங்கினாள் என்றே தெரியவில்லை. காலையில் தம்பி மனைவி பிள்ளைகளைத் தொழ எழுப்பிக்கொண்டிருந்தாள்.
‘ஆசிக்! எந்திரிடா, ஜமாத்து ஆரம்பிச்சிரும், ஏய் ஆசிஃபா எந்திரி!’ பிள்ளைகளை எழுப்பிய சத்தத்தில் எழுந்தாள். நடுஇரவுத் தொழுகைக்காக எழுபவள் எப்படி உறங்கினேன். பிள்ளைகள் எழுந்தபாடில்லை.
‘தினமும் எழுபவர்கள் தானே ரஷீதா, ஏன் இப்படிக் கஷ்டப்படுகிறாய்!?’
‘இதே வேலைதான் மச்சி! ராவானால் படுங்க! படுங்க என்ற பாட்டும், காலையிலே எந்திரிங்க! எந்திரிங்க என்ற பாட்டும் பாடுவதே என் பொழப்பாப் போச்சி! உங்க தம்பி எந்திரிச்சா, புள்ளைங்களும் பயந்து எந்திரிப்பாங்க! பண்ணெண்டு மணி வரை பந்தும் மட்டையும், விளையாட்டை பாத்துக் கிட்டு இருக்காங்க! இதுங்களும் கூட உக்காந்து கொட்டக் கொட்ட முழிச்சிப் பாக்குதுங்க!’
‘கொஞ்சம் மறுமையைப் பற்றி அச்சப்படுத்து ரசீதா. ஒரு தாயின் மடி நூறு ஆசிரியர்களுக்குச் சமம்’
அண்ணன் மனைவி அந்நியம். தம்பி மனைவி கொஞ்சம் தூரத்துச் சொந்தம். தம்பி மனைவியிடம் வைத்துக் கொள்ளும் நெருக்கத்தை அண்ணன் மனைவியிடம் வைக்க மாட்டாள் சாலிஹா. மரியாதையாக ஒதுங்கிக் கொள்வாள்.
தொழுகைப் பாயில் இருக்கும் போது டீ கொண்டுவந்து தரும் சரோஜாமா, முபீன் நினைவில் வந்து போனார்கள். ஸ்விட்ச் போட்டார் போல ஒரே சத்தத்தில் எழுந்து தொழுகைக்கு ரெடியாகும் பிள்ளைகளும், ஒருவரை ஒருவர் எழுப்பி தயார் செய்யும் முறைகளும், இங்கு நேர்மாறாக இருந்தது. இவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது. அன்பு, அரவணைப்பு, வசதி, பெற்றோர், உணவு, சுதந்திரம் எல்லாமே கிடைப்பதால், செல்லமும், உரிமையும், எடுத்துக்கொள்கிறார்கள். தொடரும் எண்ணங்களைத் துடைத்தெறிந்தாள். இது என்ன ஒப்பீடு. அது அவர்கள் விதி. இது இவர்களுக்கு இறைவன் வகுத்தது. எதை வேண்டாம் என்று வெறுத்து வந்துவிட்டு அதையே மனம் நினைக்கிறது. அது முடிந்து போன ஒன்று. இனி நினைக்கவே கூடாது என்று தனக்குத்தானே கட்டளையிட்டுக் கொண்டாள்.
(தொடரும்)