நாள்தோறும் பல்வேறு கூட்டங்கள் நடைபெறுகின்றன. அக்கூட்டங்களில் நிகழ்த்தப்படும் உரைகளில் சிறந்தவற்றை இப்பகுதியில் தொடர்ந்து பிரசுரித்து வருகிறோம். உரை நிகழ்த்தியவரோ, கேட்டவர்களோ இப்பகுதிக்கு உரைகளை அனுப்பலாம். உரையுடன் புகைப்படத்தையும் உரை இணைப்பையும் samarasam.article@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் நடத்திய வக்ஃபைப் பாதுகாப்போம் என்கிற முழக்கத்துடன் தில்லியில் 11.10.2025 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி ஆற்றிய உரை இந்த இதழின் மேடையை அலங்கரிக்கின்றது.
இந்த அரசாங்கம் இந்த ஒட்டுமொத்த பண்பாட்டையே முற்றாக அழித்தொழித்துவிட நாடுகின்றது. வக்ஃபைப் பாதுகாப்பது என்பது ஒரு சில சொத்துகளைப் பாதுகாப்பதாகாது. அதற்கு மாறாக அது இஸ்லாமியப் பண்பாட்டைப் பாதுகாப்பதாகும். இஸ்லாமியப் பண்பாட்டுமாண்புகளைப் பாதுகாப்பதாகும்.
நான் இந்த வேளையில் மூன்று விஷயங்களை மிகவும் இரத்தினச் சுருக்கமாக வைக்க விரும்புகின்றேன். முதலாவதாக வக்ஃப் என்பது ஒரு சில சொத்துகளின், ஒரு சில கட்டிடங்களின் பெயர் அல்ல. இது ஒட்டுமொத்த முஸ்லிம் பண்பாட்டின் அடையாளம் ஆகும். மனிதநேயப் பண்பாட்டின் பெயர் ஆகும். சகோதரத்துவப் பண்பாட்டின் பெயர் ஆகும். வள்ளல் குணம் செழித்தோங்குகின்ற பண்பாடு. பரிவும் கனிவும் நிறைந்த இரக்கம் நிறைந்த இதயத்தின் பண்பாடு. ஏழைகளை ஆதரித்து, பராமரிக்கின்ற பண்பாடு.
முஸல்மான் கே லஹூ மே ஹே சலீகா தில் நவாசி கா
முரவ்வத் ஹுஸ்னே ஆலம்கீர் ஹே மர்தானே காஜி கா
இதயங்களை வெல்கின்ற திறனும் திட்டமும் முஸ்லிம்களின் இரத்தத்திலேயே ஊறி இருக்கின்றது. பெருந்தன்மையும் உலகளாவிய மனிதநேயமும்தாம் போராளிகளின் அழகு குணங்களாக மிளிர்கின்றன.
உலகளாவிய அழகின் வெளிப்பாடுதான் வக்ஃப். ஒவ்வொரு பள்ளிவாசலும், ஒவ்வொரு மதரஸாவும், ஒவ்வொரு கபருஸ்தானும், ஒவ்வொரு கான்காஹ்வும், ஒவ்வொரு லங்கர் கானாவும், ஒவ்வொரு யதீம் கானாவும் எல்லாமே இஸ்லாத்தின் இந்த மகத்தான பண்பாட்டின் அடையாளங்களாக இருக்கின்றன.
இந்த அரசாங்கம் இந்த ஒட்டுமொத்த பண்பாட்டையே முற்றாக அழித்தொழித்துவிட நாடுகின்றது. வக்ஃபைப் பாதுகாப்பது என்பது ஒரு சில சொத்துகளைப் பாதுகாப்பதாகாது. அதற்கு மாறாக அது இஸ்லாமியப் பண்பாட்டைப் பாதுகாப்பதாகும். இஸ்லாமியப் பண்பாட்டு மாண்புகளைப் பாதுகாப்பதாகும். இந்தக் கோணத்தில்தான் நாம் இந்தப் பிரச்னையை அணுக வேண்டும்.
இரண்டாவதாக வக்ஃப் சிஸ்டத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டிருக்கின்ற இந்த வக்ஃப் திருத்தச் சட்டம் பாஜக அரசாங்கம் இந்த நாட்டில் இடைவிடாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற அத்துணை கொடுமை களின் வெளிப்பாடாகத்தான் உள்ளது.
நம்முடைய நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல், அரசியல் அமைப்புச் சட்டம் கொண்டாடுகின்ற அடிப்படையான மாண்புகளை முற்றாக ஒழிப்பதற்கான முயற்சி, முதல் நாளிலிருந்தே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வக்ஃப் திருத்தச் சட்டமும் அந்த முயற்சியின் வெளிப்பாடாகத்தான் இருக்கின்றது.
நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டத்தில் நீதித்துறை, நிர்வாகம், சட்டமன்றம் ஆகியவற்றின் அதிகாரங்கள் தனித் தனியாக பகுக்கப்பட்டிருக்கின்னறன.
அரசாங்கம் இந்தப் பகுப்பையே முற்றாக ஒழித்து விட விரும்புகின்றது. வக்ஃப் திருத்தச் சட்டம் அதன் வெளிப்பாடு ஆகும்.
கலெக்டர் ராஜ்
இந்த நாட்டில் ஆங்கிலேயர்கள் இருந்த போது கலெக்டர்களின் இராஜ்ஜியம் தான் கொடி கட்டிப் பறந்தது. மாகாணங்களின் மாவட்டங்களின் இராஜாக்களாகத் தான் கலெக்டர்கள் வலம் வந்தார்கள். அவர்களுக்கு அந்த அளவுக்கு எல்லையில்லா அதிகாரங்கள் தரப்பட்டிருந்தன.
இந்திய விடுதலைக்குப் பிறகு நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டம் இந்தக் கலெக்டர்களின் இராஜ்ஜியங்களைத்தான் ஒழித்துக் கட்டியது. இப்போது இந்த அரசாங்கமோ மறுபடியும் அதே கலெக்டர் ராஜ்ஜையே கொண்டு வர விரும்புகின்றது. இப்போது நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைக் கொண்டு இதே கலெக்டர் ராஜ் மீதுதான் தடை விதிக்கப்பட்டது.
இதே போன்று மதங்களின் உரிமை, சிறுபான்மையினரின் உரிமைகள் ஆகிய அனைத்தையும் இந்த அரசாங்கம் ஒழித்துவிட விரும்புகின்றது. இந்த அரசாங்கம் இந்த நோக்கத்துடன்தான் வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
மக்களாட்சிக்கு சாவுமணி
நம்முடைய நாட்டில் இருக்கின்ற அத்துணை நிறுவனங்களிலும் ஜனநாயக மாண்புகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. மக்களின் வாக்குகளின் அடிப்படையில்தான் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். ஆனால் இந்த வக்ஃப் திருத்தச் சட்டம்தான் தொடர்புடைய தளத்தில் அத்துணை பதவிகளும் நியமனப் பதவிகளாக ஆக்கப்பட்டிருக்கின்ற முதல் சட்டம் ஆகும். ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நடைமுறையைக் கொண்ட நிறுவனங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
இப்படி ஒரு நீண்ட பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்தக் கருப்புச் சட்டம் இந்த அரசாங்கம் இந்த நாட்டில் கொண்டு வர விரும்புகின்ற கொடுமைக்கார, ஏகாதிபத்திய சிஸ்டத்தின் வெளிப்பாடுதான் வக்ஃப் திருத்தச் சட்டமாகும். அந்த சிஸ்டத்தை, கட்டமைப்பைத் தடுக்க விரும்புகின்றோம் எனில், அந்த ஏகாதிபத்திய சிஸ்டத்தைத் தடுக்க விரும்புகின்றோம் எனில் முதலாவதாக நாம் இந்தக் கருப்புச் சட்டத்துக்கு எதிராகக் களம் இறங்க வேண்டி இருக்கும்.
மூன்றாவதாக இன்று நாடு இருக்கின்ற சூழலில் வக்ஃப்பைப் பாதுகாப்போம் வக்ஃப் அமைப்போம் என்கிற வக்ஃப் பரப்புரையை நாடு முழுவதும் நடத்த வேண்டி இருக்கும். Reclaim Waqf. Rebuild Waqf.
ஏற்கனவே வக்ஃப் செய்யப்பட்டு இருப்பில் இருக்கும் வக்ஃப் சொத்துகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். ரீக்ளைம் செய்ய வேண்டும். நமக்குச் சாத்தியமான அத்துணை வழிமுறைகளையும் சட்டரீதியான, அரசியல் அடிப்படையிலான அத்துணை வழிவகைகளையும் மேற்கொள்ள வேண்டும். மறு கட்டமைப்பு செய்ய வேண்டும். அவற்றை மறுபடியும் புதிதாகக் கட்ட வேண்டும். நம்முடைய நோக்கங்களை வென்றடைகின்ற வகையில் அவற்றை வலுவானவையாய் ஆக்க வேண்டும்.
இந்தக் கருப்புச் சட்டத்துக்கு எதிரான நம்முடைய இந்தப் போராட்டத்தை நாம் இடைவிடாமல் மேற்கொள்வோம் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தீர்மானித்திருக்கிறது. இந்தப் போராட்டம் எல்லாக் களங்களிலும் நடக்கும். நீதிமன்றங்களிலும் இந்தப் போராட்டம் தொடரும். அங்கும் இன்னும் போராட்டம் முடியவில்லை. இடைக்கால உத்தரவு தான் வந்துள்ளது. எனவே நீதிமன்றத்திலும் நம்முடைய போராட்டம் தொடரும்.
நீதிமன்றத்தில் போராட்டத்தைத் தொடர்கின்ற அதே வேளையில் அரசியல் களங்களில், வீதிகளில், மக்கள் மன்றங்களில், ஊடகங்களில், மக்கள் கருத்தை உருவாக்குகின்ற மாமன்றங்களில் எல்லாக் களங்களிலும் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்வது நம் அனைவர் மீதும், ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.
வாருங்கள். நாம் சபதமேற்போம். அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைமையில் முழு உத்வேகத்தோடும் பேரார்வத்தோடும் எல்லாக் களங்களிலும் எல்லா மட்டங்களிலும் இந்தப் போராட்டத்தை வீரியத்துடன் தொடர்வோம், இன்ஷா அல்லாஹ். இந்தக் கருப்புச் சட்டம் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வரையில் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து மேற் கொள்வோம்.