மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

நட்சத்திர முற்றம்

இஸ்தித்ராஜ்: விட்டுப் பிடித்தல் எனும் ஆபத்து
அஷ்ஷெய்க் A.C. அகார் முஹம்மது, 1-15 டிசம்பர் 2025


வாழ்க்கைப் பாடங்கள் 84



நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டு நற்காரியங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அருள்களைப் பெற்றுக் கொண்டால் நீங்கள் மகிழலாம். ஏனெனில் அவை அல்லாஹ் உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக உங்கள் மீது சொரிந்தவையாகவே இருக்கும். அவற்றுக்காக அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துங்கள்; மேலும் மேலும் நற்கருமங்களில் ஈடுபாடு காட்டுங்கள். இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் பெற்ற அருள்களை பாதுகாத்துக் கொள்ளலாம்; மேலும் பல அருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டிருக்கும் நிலையில், பாவங்களில் ஈடுபட்டிருக்கும் போது உங்களுக்கு அருள்கள் வந்து குவிந்தால் நீங்கள் விழிப்படைய வேண்டும். அது ஆரோக்கியமான ஒரு நிலையல்ல; அது ஓர் எச்சரிக்கை மணி; அவன் உங்களை விட்டுப் பிடிக்கப் போகின்றான் என்பதற்கான அறிகுறி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இது ‘இஸ்தித்ராஜ்’ எனப்படுகிறது.இஸ்தித்ராஜ் என்பது, ஒருவர் பாவங்களில் மூழ்கி இருக்கும் போது அல்லாஹ் அவருக்கு வெளிப்படையான  பல  அருள்களைக் கொடுத்து, அவர் தன்னிலை மறந்து, மதி மயக்கத்தில் இருக்கும் நிலையில் அவரைத் திடீரென பிடித்துக் கொள்வதைக் குறிக்கும்.

இது தொடர்பாக திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது: ‘பின்னர், அவர்களுக்கு போதிக்கப்பட்ட நல்லுரைகளை அவர்கள் மறந்துவிட்டபோது,  அருள்வளங்களின் அனைத்து வாயில்களையும் அவர்களுக்காக நாம் திறந்து விட்டோம். எதுவரையெனில், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இன்ப நலன்களில் அவர்கள் திளைத்திருந்தபோது திடீரென்று அவர்களை நாம் பிடித்தோம். அப்போது அவர்கள் முற்றிலும் நிராசை கொண்டோராய்  ஆகிவிட்டனர்!’  (திருக்குர்ஆன் 6:44)

இது குறித்து விளக்கும் ஒரு நபிமொழி பின்வருமாறு: ‘ஓர் அடியானுக்கு அல்லாஹ் அவனது பாவங்களிடையே அவன் விரும்பும் உலக நன்மைகளை அளிக்கிறான் என்றால், அது ‘இஸ்தித்ராஜ்’ (விட்டுப் பிடித்தல்) ஆகும்’. (அஹ்மத்)

எனவே பல பாவங்களைச் செய்து கொண்டு பொடுபோக்கான ஒரு வாழ்வு வாழும் ஒருவர் தான் பெற்றிருக்கும் அல்லது தொடர்ந்து பெற்று வரும் அருள்களைக் கண்டு ஏமாந்து விடலாகாது. மாறாக விழிப்படைய வேண்டும்; உடன் அல்லாஹ்வை நோக்கித் திரும்ப வேண்டும்; அவனுக்கும் தனக்கும் இடையிலான உறவைச் சீர் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் தண்டனைகளிலிருந்து தப்பிக் கொள்ளலாம்; பெற்ற அருள்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்; மேலும் பல அருள்களைப் பெறும் பாக்கியமும் கிட்டும்.

சுருக்கமாகச் சொல்வதானால், நற்கருமங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில் கிடைக்கும் அருள்கள் அல்லாஹ்வின் அன்பின் அடையாளம்! பாவங்களில் ஈடுபட்டு அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டிருக்கும் போது கிடைக்கும் அருள்கள் எச்சரிக்கை மணி!

பின்வரும் நபிமொழியும் நமது கவன ஈர்ப்பைப் பெறத்தக்கதாகும்: ‘அல்லாஹ், ஒருவனுக்கு நன்மையை விரும்பினால் அவன் செய்த பாவத்தின் தண்டனையை உலகிலேயே விரைவாக அனுபவிக்கச் செய்வான்; அவனுக்குத் தீமையை விரும்பினாலோ, அவன் செய்த பாவத்தைப் பிடித்து வைத்து (இவ்வுலகில் தண்டனை வழங்காமல்) மறுமை நாளில் முழுவதுமாக அவனைத் தண்டிப்பான்’ (திர்மிதி)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்