மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

மேடை

அக்கரைப் பச்சை 28
ஜரினா ஜமால், 1-15 டிசம்பர் 2025


சல்மானுக்கு மறுமணம் செய்வதாக சாலிஹா சொன்ன பிறகு சல்மான் கோபப்படவும் இல்லை. கொந்தளிக்கவும் இல்லை. சம்மதம் கூறவும் இல்லை. மௌனமாகி விட்டான்.

சாலிஹாவிடம் பேசுவதும் இல்லை; கேட்பதும் இல்லை. திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகளில் சல்மானை அவள் இப்படிப் பார்த்ததில்லை.

வழிய  வழியப்  போய்  பேசிப் பார்த்தாள். அவன் எதற்குமே முகம் கொடுத்துப் பேசவில்லை. அமைதியாகக் கடந்து போய்விடுவான். தன்னிடம் பேசாமலும் தன்னைப் பார்க்காமலும் இருப்பது மிகப் பெரும் கொடுமையாக இருந்தது சாலிஹாவுக்கு! ஒரு வாரம் பத்து நாள் இந்த நாடகம் கழிந்தது.

அன்றிரவு சாலிஹா தன்னை அலங் கரித்துக் கொண்டாள். இரவு உணவு உண்ட பிறகு புதுமணப் பெண்ணைப் போல் அறைக்குள் நுழைந்தாள். நீண்ட நாளைக்குப் பிறகு இந்தக் கோலத்தில் பார்த்த சல்மான் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். சல்மானின் அருகில் போய்  அமர்ந்தாள்.  நேரடியாகவே பேசினாள்,  ‘ஏங்க!  நான்  என்ன தப்பு செஞ்சேன். உங்களையே நம்பி இருக்கும் என்னை இந்த மாதிரி நடத்துறீங்களே? ஞாயமா?’

‘நீ மட்டும் எனக்கு மறுமணம் செய்யச் சொன்னாயே? அதுமட்டும் ஞாயமா?’

‘எல்லாம் நம்ம நல்லதுக்கு தானே? பிள்ளை என்று ஒன்று கிடைக்குமே! அதுக்குத்தான் சொன்னேன்’

‘நீ என்னுயிர் சாலிஹா! உயிரைப் பிரிந்து உடல் வேறெங்கும் வாழ முடியாது. குழந்தைக்காக எனக்கு நீ மறுமணம் செய்து வைத்தால் உனக்கு நானும் கிடைக்க மாட்டேன். குழந்தையும் கிடைக்காது’

அன்று முதல் சாலிஹா இரண்டாவது திருமணத்தைப் பற்றி பேசுவதும் கிடையாது, பிள்ளையில்லாக் குறை பாடுவதும் கிடையாது.

‘சாலிஹா! சாலிஹா..! என்ன யோசனை?’ ஆமினாவின் குரலினால் திடுக்கிட்டு பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வந்தாள் சாலிஹா.

‘ஒன்னும் இல்லைக்கா..பழைய நினைவுகள் எல்லாம் வந்துவிட்டது’

‘சரி! நாம ரெண்டு பேரும் நாளைக்கு பெரியவன் வீட்டுக்குப் போய் வருவோமா?’ வளர்த்த பாசம் சாலிஹாவின் குரலில் ஏக்கமாக வெளிப்பட்டது.

‘உனக்குச் சொன்னாலும் புரியுறது இல்லை. நான் என்ன சொல்ல? நாம போகலாம் என்றால் அவள் மதிக்கவே மாட்டாள். நீ நினைப்பது போல பழைய மகன் கிடையாது’.

‘பரவாயில்லை அக்கா! இந்த ஒரு தடவை போய்ப் பார்த்து வரலாம்’

மறுநாள் புறப்பட்டுச் சென்றார்கள். அக்கா மகனின் வீட்டிற்காகவும், மருமகளுக்கும் சில பொருள் களை சாலிஹா வாங்கிக் கொண்டாள். ஸலாம் கூறி வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

‘ஜன்னத் நல்லா இருக்கியா மா?’ சாலிஹா கேட்டாள்.

‘ம்’ என்ற ஒற்றை பதில் வந்தது.

யாரையும் வாருங்கள் என்று சொல்லவில்லை. தன் மாமியாரைக் கூட, ‘மாமி வாங்க’ என்று கூட கூறவில்லை.

‘சத்தார் எங்கேம்மா?’ ஆமினா கேட்டாள்.

‘வெளியூர் போயிருக்காங்க!’ ஒற்றை பதிலளித்தாள். உள்ளே போய்விட்டாள். உட்கார்ந்து உட்கார்ந்து பார்த்து ஆமினா அக்கா கேட்டாள், ‘நான் உனக்கு டீ போட்டுக் கொண்டு வருகிறேன்’

‘வேணாம் அக்கா! கொஞ்ச நேரம் இருந்து விட்டுப் போய் விடுவோம்’.

‘எங்கே போவாய்? இனி பஸ் இரவு எட்டு மணிக்கு மேல் தான் வரும். நீ நினைத்தது போல் நினைத்த நேரத்திற்கு எல்லாம் இந்த ஊருக்கு வர முடியாது, போக முடியாது. இரவு இங்கு தங்கித்தான் ஆக வேண்டும்’.

இருவரும் அடுப்பறையில் நுழைந்தார்கள். அடுப்படி பார்க்க பளிச்சென்று இருந்தது. ஏதும் செய்து சாப்பிட்டதுபோல, ஏதாவது புழங்கியது போலில்லை. புது வீடு போல் புத்தம்புது பாத்திரம் போல் காட்சி அளித்தது.

டீ போட்டார்கள். ஷெல்ஃபில் தேடி பிஸ்கட் டப்பாவை எடுத்து வந்தார்கள். இருவரும் குடித்து முடித்தார்கள். உள்ளே இருந்து மருமகள் வெளியில் வரவும் இல்லை என்ன ஏது என்று கேட்கவும் இல்லை. சாலிஹா உள்ளே சென்று அறைவாசலில் நின்று குரல் கொடுத்தாள்.

‘ஜன்னத்! ஜன்னத்மா..!’

திரைச்சீலையை விலக்கிக் கொண்டு வெளி யில் வந்தாள். ‘என்னம்மா நாங்கல்லாம் வந்திருக்கோம். நீ பாட்டுக்கு உள்ள போய் உட்கார்ந்து இருக்கே! நைட்டுக்கு என்ன செய்யப் போற?’

‘என்ன செய்யணுமோ, என்ன சாப்பிடுவீங்களோ அதைச் செஞ்சுடுங்க உங்களுக்கு இஷ்டப்பட்டதை’

மாமி என்று கூட அவள் வாயில் வரவில்லை. சொன்னால் வாய் வலித்துக் கொள்ளுமோ என்பது போல இருந்தாள். இப்படியும் ஆட்கள் இருப்பார்களா என்று வியப்பாக இருந்தது சாலிஹாவுக்கு. என்னவோ போல் இருந்தது சாலிஹாவுக்கு! ஏன் வந்தோம்? என்ற சிந்தனை தலை தூக்கியது.

இவனுடைய வீட்டிற்கு வரவே கூடாது என்று எவ்வளவு வைராக்கியமாக ஆமினா இருந்தாள். சாலிஹாவினால் இன்று வந்து மாட்டிக்கொண்டாயிற்று.

காலையில் வெளியூரிலிருந்து சத்தார் வந்து சேர்ந்தான். அம்மாவிடம் ஓரிரு வார்த்தையும் சாச்சியிடம் ஓரிரு வார்த்தையும் பேசி னான். அதில் ஒரு ஆர்வமோ, நீண்ட நாள் சந்திக்கின்ற ஒரு குதூகலமோ இல்லை.

சாலிஹாதான்  ஆர்வத்தோடு விழுந்து விழுந்து பேசினாள். ‘நல்லா இருக்கியா சத்தார்? இந்தச் சாச்சியை மறந்துட்டியா? என்னைப் பார்க்க வந்தா என்ன? ஒருமுறை மெட்ராசுக்கு ஜன்னத்தைக் கூட்டி வா!’

‘பார்ப்போம்’ ஒற்றை பதிலளித்தான்.ஜன்னத் மாவு பிசைந்து பூரி தயாரித்தாள்.
சாலிஹா உடன் நின்று கிழங்கு அவித்து மசால் செய்தாள்.

‘ஜன்னத்! உன் புருஷனை நான் எப்படி வளர்த்தேன் தெரியுமா? சாச்சி..சாச்சின்னு பிரியமாக இருப்பான். கல்யாணம் கட்டி நான் போன பிறகு, என் நாத்தனார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தாலும் இவன் நினைவு மாறவே இல்லை. ஆனால் இப்போ யாரோ போல, தெரியாத மாதிரி போறான்’

அப்படி ஒரு வார்த்தையைக் கேட்காத மாதிரி பூரி உருட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தாள் ஜன்னத்.

சத்தார் சாப்பிட்டான். சாப்பிட்டுவிட்டு போய் வருகிறேன் என்று கூறினான். ஆமினா அக்கா சொன்னாள், ‘எப்பா! உன்ன பார்க்கணும்னு உன் சாச்சி தான் புழுவா கொடஞ்சி, பாடாப் படுத்தி கூட்டி வந்தாள். அதான் வந்தேன். நாங்க சாப்பிட்டு விட்டுப் போகிறோம்’ என்று சொன்னாள்.

சிறிது நேரம் மோட்டை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். ‘சில நாள்கள் இருந்து போங்களேன்’ என்று சொல்லப் போகிறானோ என்று சாலிஹா நினைத்தாள். ‘சரி போயிட்டு வாங்க!’ என்று சொல்லிவிட்டு விறு விறு வென்று போய்விட்டான். விக்கித்து நின்றாள் சாலிஹா!

சத்தாரா? அக்காவின் மகனா? நான் தூக்கி வளர்த்த பிள்ளையா? சாச்சி.. சாச்சி! என்று சுத்தித் சுத்தி வருவானே? தாவணியின் முனையைப் பிடித்துக் கொண்டு ஒரு விரலை வாயில் வைத்து சப்பிக் கொண்டு தூக்கு தூக்கு எனப் பாடாய் படுத்துவானே அவனா இவன்?
பீவியம்மா சொல்வது நினைவுக்கு வந்தது. ‘கூடப் பொறந்தது கூட்டுக்குள் இல்ல! ஒக்கப் பொறந்தது ஒறவுக்குள் இல்ல! இடையில் வருவதா நெலைக்கப் போவுது?’

‘சாலிஹா! சத்தார், சத்தார்ங்காதே! பெத்த தாய்க்கே அங்கே மருவாதியில்லை. நீ ஏன் கெடந்து ஆலாப் பறக்குறே?’

நல்ல வேளை தனக்கென்று ஒன்றும் பிறக்கவில்லை. எப்படித்தான் ஆமினாக்கா பொறுமையாக இருக்காங்களோ? ‘அக்கா பொறப்படலாமே?’ இருவரும் புறப்பட்டார்கள்.
அக்காவும், தங்கையும் பஸ் ஸ்டாண்டை நோக்கி மௌனமாக நடந்தார்கள். சாலிஹாவிடம் ஆமினா கேட்டாள், ‘மனசு இப்போ சந்தோசமா?’

‘என்னால்  நம்பவே  முடியவில்லை. நீங்க எப்படித்தான் தாங்கிக் கொண்டிருக்கீங் களோ?’

‘தாங்க முடியாமத்தானே மச்சான் நெஞ்சு வெடித்து மூக்கிலும் வாயிலும் ரத்தம் வந்து செத்துப் போனாங்க!’

‘எங்கிருந்து வந்து சேர்ந்தா இவ?’

‘அத ஏன் கேக்குற? வேலை செய்யுற இடத்துல யார்ட்டயும் பேச மாட்டாளாம். காவாளிப் பயலுவ அவகிட்ட சிலுமிசம் பண்ணியிருக்காங்க! இவன் அந்த செக்சனுக்குப் போன நேரம் இவன் முதுகுப் பின்னாலே வந்து நின்னு சட்டைய பிடிச்சிட்டு காப்பாத்துங்கன்னாளாம்.
உடனே இவருக்கு வீரம் வந்து தாட்டு பூட்டுன்னு சத்தம் போட்டுருக்கான். மறுநாளிலிருந்து ரெண்டு பேரையும் எணச்சி, எணச்சி பேசிருக்காங்க. ஒரு நாள் வீட்டுக்கு வந்து அத்தாட்ட பேசினான். ஜன்னத்தைத்தான் நிக்காஹ் பண்ணனும்னான். அவங்களோடு போய் பாத்தோம்.
தாய் மாமாவும் மாமியும் இருந்தாங்க. உம்மா, வாப்பா, அண்ணன், தம்பி, அக்கா எல்லாரும் 2004இல் வந்த சுனாமில மொத்தமா போய்ட்டாங்களாம். அதனால் துக்கத்துல அமைதியாயிட்டான்னாங்க’

சரின்னு இரக்கப்பட்டு தானே முடித்தோம். மச்சான் எத்தனையோ தடவ இனி உனக்கு  நாங்கதாம்மா  பெத்தவங்கன்னு சொல்லுவாங்க. அதயும் காதுல வாங்க மாட்டா. இரண்டு மாதத்தில் சத்தார் வேலை மாற்றிவிட்டார்கள். பதவி உயர்வு என்று கிளை ஆஃபிசுக்குப் போனான். ஒரே வாரத்தில் வீடு பிடித்து பொஞ்சாதியைக் கூட்டிப் போனானே அதுதான்.

என்னத்த சொல்லிக் கொடுத்தாளோ, என்ன வசியம் பண்ணாளோ மொத்தத்தில் பெத்தவ புள்ளய எழந்தா, பிறவி தொணைய எழந்துச்சி’ கைக்குட்டையினால் கண்களைத் துடைத்துக்கொண்டாள் ஆமினா. பஸ்ஸின் ஜன்னல் வழியாகக் காறித் துப்பினாள்.

‘பொறுமை செய்யுங்க அக்கா! ஒரு பிள்ளை பெத்தா சரியானாலும் ஆகும்’.

‘இனி சரியாகி என்ன? சரியாகாம இருந்து என்ன? பிள்ளையப் பிரிந்த வேதனையில் என் ராசா போய் சேர்ந்திட்டார். இது பச்ச மண்ணு சாலிஹா. ஒட்டாது. சுட்ட மண்ணுன்னா ஒட்டும். ஒட்டாத உறவ ஓடி ஓடி தொரத்தி என்ன பிரயோஜனம். நான் விட்டுட்டேன்’

ஆமினாக்கா மறக்கின்றாளோ இல்லையோ, சாலிஹாவின் நெஞ்சில் பாரமாக ஏறி அமர்ந்தது அக்கா மனதின் கவலைகள். வீட்டிற்கு வரவும் இரண்டாவது மருமகள் கைப்பிள்ளையுனும், நடைப்பிள்ளையுடனும் வர சரியாக இருந்தது.

‘சின்ன மாமி! எப்போ வந்தீங்க?
சொகமா இருக்கீங்களா? மாமி சொல்லவே இல்லையே!’

‘நல்லா இருக்கேன் சாதிக்காமா! இன்னைக்கு உன்னப் பாக்க உங்கம்மா வீட்டுக்கு வர இருந்தேன். நீயே வந்துட்டே’

‘குட்டிச் செல்லங்களா.. வாங்க.. வாங்க!’ சாலிஹா இரண்டாமவன் கரீமின் பிள்ளைகளைக் கொஞ்ச ஆரம்பித்தாள். ஆமினா, பையை எடுத்துக்கொண்டு மார்க்கெட் புறப்பட்டாள்.

தொடரும்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்