மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஸபா
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், 1-15 டிசம்பர் 2025


அத்தியாயம் 34

முன்னுரை

பெயர்: பதினைந்தாவது வசனத்தில் இருக்கின்ற ‘லகத் கான லிஸபபின் ஃபீ மஸ்கனிஹிம் ஆயதுன்’ என்கிற வாசகத்திலிருந்து இதன் பெயர் பெறப்பட்டுள்ளது. அதாவது ஸபா பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ள அத்தியாயம் என்று பொருள்.

அருளப்பட்ட காலம்: இந்த அத்தியாயம் எப்போது அருளப்பட்டது என்பதைத் துல்லியமாக எந்தவொரு நம்பகமான அறிவிப்பிலிருந்தும் அறிந்து கொள்ள முடியவில்லை. அதே சமயம் இதில் கருத்துகள் எடுத்துரைக்கப்படுகிற பாணி யிலிருந்து இது மக்காவின் மத்திய காலத்திலோ அல்லது தொடக்கக் காலத்திலோ அருளப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.

மத்திய காலக்கட்டம் எனில் அதன் தொடக்க நாள்களில் கொடுமையும் அக்கிரமும் அநீதியும் உக்கிரமடையாதிருந்த நாள்களில் கேலி, கிண்டல் செய்தல், மிகப் பெரும் அளவில் வதந்திகளைப் பரப்புதல், பொய்க் குற்றச்சாட்டுகள், விதவிதமான தவறான ஐயங்களை விதைத்தல் போன்றவற்றைக் கொண்டு இஸ்லாமிய இயக்கத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த நாள்களில்தான் இது அருளப்பட்டிருக்க வேண்டும்.

விவாதப் பொருளும் கருத்துரையும்: இறைமறுப்பாளர்கள் எழுப்பி வந்த ஆட்சேபங்களுக்கு பெரும்பாலும் நபிகளார்(ஸல்) எடுத்துரைத்து வந்த ஏகத்துவக் கோட்பாடு, மறுமை ஆகியவற்றின் மீதும், நபிகளாரின் தூதுத்துவம் மீதும் நையாண்டி, கேலி, பரிகாசம், அபத்தமான, அறிவுக்குச் சற்றும் பொருந்தாத குற்றச்சாட்டுகள் போன்றவற்றின் வடிவில் கிளப்பப்பட்டு வந்த ஆட்சேபங்களுக்கு இந்த அத்தியாயத்தில் பதில் தரப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த ஆட்சேபங் களைக் குறிப்பிட்டு அவற்றுக்குப் பதில் தரப்பட்டுள்ளது.

இன்னும் சில இடங்களிலோ உரையின் தொனியும் கருத்துமே அவை எந்த ஆட்சேபத்துக்கான பதில் என்பதை வெளிப்படுத்திவிடுகின்றன. பதில்களில் பெரும்பாலானவை கருத்தைப் புரிய வைக்கின்ற, இதமாக விளக்கிச் சொல்கிற, ஆதாரங்களை எடுத்துரைத்து தெளிவுபடுத்துகின்ற தொனியில் அமைந்துள்ளன. ஆனால் இங்குமங்கும் ஒரு சில இடங்களில் இறைமறுப்பாளர்களின் முரட்டுப் பிடிவாதமும் விதண்டாவாதமும் அவர்களை எத்தகைய கதிக்கு ஆளாக்கிவிடும் என்பது பற்றிய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாவூத்(அலை), சுலைமான்(அலை), ஸபா சமூகம் போன்றோரின் வரலாறும்  விவரிக்கப்பட்டிருக்கின்றன. ‘வரலாற்றிலிருந்து  உங்களுக்கு  இந்த இரண்டு எடுத்துக்காட்டுகள் எடுத்துரைக்கப்படுகின்றன. ஒரு பக்கம் தாவூத்(அலை), சுலைமான்(அலை) ஆகியோர் இருக்கின்றார்கள். அவ்விருவருக்கும் அல்லாஹ் மிகப் பெரும் அரசாங்கங்களையும் வரலாற்றில் இதற்கு முன்பு வெகுசிலருக்கே தரப்பட்ட மகத்தான மாண்பையும் சிறப்பையும் மாட்சிமையையும் அருளினான். ஆனாலும் அவர்கள்  அவையனைத்தையும் பெற்றுக் கொண்ட பிறகும் ஆணவத்திலோ அகம்பாவத்திலோ  தற்பெருமையிலோ  விழவில்லை; அதற்கு மாறாக தம்முடைய அதிபதிக்கு எதிராகக் கலகம் செய்வதற்குப் பதிலாக அவனுக்கு நன்றி செலுத்துகின்ற அடியார்களாகவே இருந்தார்கள்.

மேலும் மறுபக்கம் ஸபா சமூகத்தார் இருந்தார்கள். அல்லாஹ் அந்தச் சமூகத்தாருக்கு வெகுமதிகளையும் அருட்கொடைகளையும் வழங்கிய போது அவர்கள் பூரித்துப் போனார்கள். இறுதியில் எந்த அளவுக்குச் சின்னாபின்னப்படுத்தப்பட்டு சீரழிந்து போனார்கள் எனில், அவர்களைப் பற்றிய கதைகள் மட்டும்தாம் உலகத்தில் எஞ்சி இருக்கின்றன.

ஏகத்துவ, மறுமைக் கோட்பாடுகளின் மீது அழுத்தமான நம்பிக்கை வைத்தவாறு அருட்கொடைகளுக்கான நன்றி உணர்வால் நெஞ்சம் நிறைந்த நிலையில் மலர்கின்ற வாழ்க்கை சிறந்ததா? இறைமறுப்பு, இணைவைப்பு, மறுமை மறுப்பு, உலகமோகம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகின்ற வாழ்க்கை சிறந்ததா? இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளையும் முன்னால் வைத்துக்கொண்டு நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். எது சிறந்தது?

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்