‘மறுமை நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?’ என்று நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள். கூறுங்கள்: ‘மறைவானவற்றை அறியக் கூடிய இறைவன் மீது ஆணையõக! அது உங்கள் மீது வந்தே தீரும்.வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்க வில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.7 மேலும், இந்த மறுமை வருவது நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவதற்காகத்தான்! அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான நற்பேறும் இருக்கின்றன. எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச் செய்திடக் கடுமையாக முயற்சி செய்தார்களோ அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய மிக மோசமான வேதனை இருக்கின்றது.8 (நபியே!) உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கியருளப்பட்டிருப்பது எதுவோ அது முற்றிலும் உண்மையானதென்றும், அதுவே, ஆற்றல் மிக்கவனும் மாபெரும் புகழுக்குரியவனுமான இறைவனின் பாதையைக் காண்பிக்கின்றது என்றும் ஞானமுடையவர்கள் நன்கறிகின்றார்கள்.9
· அத்தியாயம் 34 ஸபா · திருவசனங்கள் : 3 - 6
7. மறுமை நிகழ்வது சாத்தியமே என்பதற்கான சான்றுகளுள் இதுவும் ஒரு சான்று ஆகும். இதற்குப் பிறகு வசன எண் 7இல் சொல்லப்பட்டிருப்பதைப் போன்று மறுமை மறுப்பாளர்கள் இந்த உலக வாழ்வுக்குப் பிறகு மற்றுமொரு வாழ்வை அறிவுக்கு அப்பாற்பட்டதாகக் கருதுவதற்கான காரணங்களில், ‘எல்லா மனிதர்களும் மண்ணோடு மண்ணாகிப் போய்விட்ட பிறகு, அவர் களின் துகள்கள் அனைத்தும் சிதறிப் போய்விட்ட பிறகு, அந்தக் கணக்கற்ற உதிரிப் பாகங்கள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்படுவதும், அவற்றை ஒன்றோடு ஒன்று கோர்த்து மீண்டும் இந்த உலக வாழ்வில் வளைய வளைய வந்த அதே உடலுடன் படைக்கப்பட்டு எழுப்பப்படுவதும் எவ்வாறு சாத்தியமாகும்’ என்கிற வாதமும் ஒன்று. அவர்களின் இந்த ஐயத்துக்கு, ‘ஒவ்வோர் அணுவும் சிதறிப் போய்ச் சேர்ந்த இடம் எது என்பது இறைவனின் ஆவணத்தில் பதிவாகியிருக்கின்றது.
எது எங்கே எந்த நிலையில் இருக்கின்றது என்பது இறைவனுக்குத் தெரியும். அவன் மறுபடியும் படைக்க நினைக்கின்ற போது ஒவ்வொரு மனிதனின் அத்துணை தனித் தனி உதிரிகளையும் அணுக்களையும் அடையாளம் கண்டு அவற்றை ஒன்று சேர்ப்பதில் அவனுக்கு எந்தச் சிரமமும் இருக்காது’ என்று பதில் சொல்லப்பட்டது.
8. மேலே மறுமை நிகழ்ந்தே தீரும் என்பதற்கான சான்று தரப்பட்டது. இது மறுமை நிகழ்வதற்கான காரணத்தைப் பற்றிய சான்று ஆகும். அதாவது கொடுமைக்காரர்களுக்கு அவர்கள் இழைத்த கொடுமைகளுக்கான தண்டனை தரப்படுவதற்காகவும், உத்தமர்களுக்கு அவர்கள் செய்த நல்லறங்களுக்கான நற்கூலி வழங்கப்படுவதற்காகவும் ஒரு நாள் அவசியம் வந்தே ஆக வேண்டும். நல்லறங்களில் ஈடுபடுபவர்களுக்கு வெகுமதிகளும் பரிசுகளும் கிடைத்தாக வேண்டும்; தீய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கோ தண்டனை தரப்பட்டாக வேண்டும் என்பதுதான் அறிவுக்குப் பொருத்தமானதாகும்; நீதி, நியாயத்துக்கு நெருக்கமானதும் அதுதான்.
ஆனால் உலகத்தின் தற்போதைய வாழ்வில் தீயவர்களின் தீய செயல்கள் அனைத்துக்கும் அவற்றுக்கான முழுமையான தண்டனை தரப்படுவதுமில்லை; அதே போன்று நல்லவர்களின் நல்லறங்கள் அனைத்துக்கும் அவற்றுக்கான முழுமையான நற்கூலி வழங்கப்படுவதுமில்லை. இன்னும் சொல்லப் போனால் சில போது நல்லறங்களில் ஈடுபட்டதற்காக நல்லவர்கள் தண்டிக் கப்படுவதும், தீய செயல்களில் திளைத்த தீயவர்களுக்கோ வெகுமதிகளும் பரிசுமழைகள் பொழிவதுமாக எல்லாமே தலைகீழாக நடப்பதையும் இந்த உலகத்தில் பார்க்க முடிகின்றது.
இந்த அலங்கோலம் சரி செய்யப்பட்டு நீதி நிலைநாட்டப்படுவது அவசியம் ஆகும். அதுதான் அறிவுக்குப் பொருத்தமானதும்கூட. அந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குப் பெயர் தான் மறுமை ஆகும். அது வராமல் போவதுதான் அறிவுக்குப் பொருத்தமற்றதாக, நீதிக்கு அப்பாற்பட்டதாக ஆகுமே தவிர, அதன் வருகை அல்ல.
இந்த விவகாரத்தில் மற்றுமொரு குறிப்பும் மேற்படி வசனங்களிலிருந்து தெள்ளத்தெளிவாகி விடுகின்றது. இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்களில் ஈடுபடுபவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான உணவும் இருக்கின்றன என்றே இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இறைவனின் வாக்கைத் தோல்வியுறச் செய்வதற்காக ஓயாமல் ஒழியாமல் கடுமையாகப் பாடுபடுகிற மக்களுக்கோ மிக மிகக் கேவலமான, மோசமான வேதனை இருக்கின்றது என்றும் சொல்லப்பட்டுள்ளது. எவரெல்லாம் வாய்மையான உள்ளத்தோடு ஈமான் கொள்கின்றாரோ, அவருடைய நல்லறங்களில் ஏதேனும் குறை இருந்தால் கண்ணியமான நற்பேறு அவருக்குக் கிடைக்கின்றதோ இல்லையோ அவருக்கு மன்னிப்புக் கிடைப்பது உறுதி என்பது இதிலிருந்து தாமாகவே தெள்ளத் தெளிவாகிவிடுகின்றது.
அதே போன்று ஒருவர் இறைமறுப்பாளராக இருந்து சத்திய மார்க்கத்துடன் பகையோ, வன்மமோ கொண்டிருக்கவில்லை எனில், இறைவனின் வேதனையிலிருந்து அவரால் தப்ப முடியாமல் போனாலும் மோசமான வேதனைக்கு அவர் ஆளாக மாட்டார் என்பதும் இதிலிருந்து தாமாகவே தெள்ளத் தெளிவாகிவிடுகின்றது.
9. நீர் எடுத்துரைக்கின்ற சத்திய மார்க்கத்தை அசத்தியமானது எனச் சாதிக்க இந்தப் பகைவர்கள் என்னதான் தலைகீழாக நின்று பாடுபட்டாலும்கூட அவர்களின் இந்தச் சூழ்ச்சிகள் எதுவும் ஒருபோதும் வெற்றி பெறாது. ஏனெனில், அவர்களின் பேச்சுகளால் அறிவிலிகள்தாம் கவரப்பட்டு ஏமாந்து போவார்களே தவிர, ஞானமுடையவர்கள் அவர்களின் மாய வலையில் சிக்கவே மாட்டார்கள்.
(தொடரும்)