மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை பொருளாதாரம்

திராவிட தேசியமா? தமிழ் தேசியமா?
சேயன் இப்ராகிம், 01-15 - December - 2021


திராவிட தேசியம் தமிழ் தேசியத்துடன் முரண்படுகிறதா? திராவிட தேசியத்துடன் தமிழ் தேசியத்துக்கு எந்த முரண்பாடுமில்லை. தமிழ் தேசியத்தை உள்ளடக்கியதே திராவிட தேசியம். இரண்டும் தமிழ் தேசியத்தையே தூக்கிப் பிடிக்கின்றன. தமிழகத்திலுள்ள திராவிட இயக்கங்கள் தமிழர்களின் நலனிற்காகவும், உரிமைகளுக்காகவுமே போராடி வருகின்றன. திராவிட நிலப்பரப்பிலுள்ள பிற மொழி பேசும் மக்களுக்காகப் பரிந்து பேசி அவை தமிழக மக்களின் நலன்களைப் புறக்கணிக்கின்ற எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அன்றைய சென்னை மாகாணத்தின் அனைத்து அரசுத் துறைகளிலும் பிராமணர்களே மிகப் பெருமளவில் இருந்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளின் உயர் பதவிகளையும் அவர்களே வகித்து வந்தனர்.

பிராமணர்களின் மேலாண்மையைக் குறைப்பதற்காகத் தொடங்கப்பட்ட இயக் கங்கள் (குறிப்பாக தி.க; திமுக), பிராமணரல்லாத மக்களை ஒன்று திரட்டுவதற் காகத் தங்களைத் திராவிட இயக்கங்கள் என அடையாளப்படுத்திக் கொண்டன. இந்தச் சொற்றொடர் பிராமணரல்லாத மக்களை அணி திரட்ட உதவி புரிந்தது. அன்றைய சென்னை மாகாணம் தென்னிந்தியாவின் நான்கு நிலப்பரப்புகளை யும் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்) உள்ளடக்கிய ஒரு பெரிய மாகாணமாக விளங்கியதால் திராவிடம் என்ற சொல் மிகப் பொருத்தமானதாகக் கருதப்பட்டது. திராவிட இயக்கங்களை மக்கள் ஏற்கவில்லையா? 1967 ஆம் ஆண்டிற்குப் பிறகு, தமிழ்நாட்டை திராவிடக் கட்சிகளே ஆண்டு வருகின்றன.

மக்களின் ஆதரவுடனே அவை தொடர்ந்து வெற்றி பெற்று வருகின் றன. ஈவேரா. பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. எனவே திராவிடக் கொள்கைகள் தோற்றுப் போய்விட்டன என பாஜகவினர் கூறி வருகின்றனர். ஒரு தலைவரின் கருத்துகள் அனைத்தையும், அனைத்துப் பிரிவு மக்களும் ஏற்க வேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்ல. பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்காத மக்கள், அவரின் சமூகநீதிக் கொள்கைக்கு இன்றைக்கும் ஆதரவாகத்தானே இருக்கிறார்கள். திருக்குறளிலும் வேறு பல நூல்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ள அறநெறிக் கருத்துகளை மிகப் பெரும்பாலான மக்கள் ஏற்கவில்லை அல்லது பின்பற்றவில்லை என்பதற்காக, அந்த நூலாசிரியர்களை மக்கள் ஏற்கவில்லை என்று கூறுவது அறிவுடமையாகுமா? சமூக நீதிக்கு ஒன்றுமே செய்யவில்லையா? திராவிட இயக்கங்கள் சமூக நீதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என இந்துத்துவ அமைப்புகளும், தமிழ் தேசிய அமைப்புகளும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. பெரியாரை விடவும் பிரதமர் நரேந்திர மோடி தான் சமூக நீதிக்கு அதிகம் பாடுபட்டவர் என 15.9.21 தினமணி நாளிதழில் அர்ஜுன் சம்பத் எழுதியுள்ளார்.

(பெரியாரின் பிறந்த நாளன்று அந்தக் கட்டுரை வருகிறது; அன்று தான் மோடியின் பிறந்தநாள்) இதை விட வஞ்சக மான, உண்மைக்குப் புறம்பான கருத்து வேறு இருக்க முடியாது. திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக் கட்சி ஆட்சியிலும், சுதந்திர இந்தியாவில் பெரியாரின் ஆதரவைப் பெற்றிருந்த பெருந் தலைவர் காமராஜர் ஆட்சியிலும், 1967 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திராவிடக் கட்சிகளின் (திமுக, அதிமுக) ஆட்சிகளிலும்  நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக நீதித் திட்டங்களைக் கீழே பட்டியலிட் டுள்ளேன்.

நீதிக்கட்சி ஆட்சியில்

1. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் பிராமணர்கள் உள்ளிட்ட அனைத்துச் சாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப் பட்டது. (இதில் முஸ்லிம்களுக்கும் 16 விழுக்காடு இடஒதுக்கீடு இருந்தது).

2. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப் பட்டது.

3. கோவில்களில் தேவதாசி முறை ஒழிக்கப் பட்டது.

4. பட்டியலின மக்களை ஆதி திராவிடர்கள் என அழைக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

5. மருத்துவக் கல்வி பயில சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமென்ற விதி நீக்கப் பட்டது.

6. இந்து அறநிலையப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்து அறநிலையத்துறை உருவானது.

7. அரசுப் பணிகளுக்கு ஆள்களைத் தேர்வு செய்ய ஒரு தேர்வாணையம் அமைக்கப் பட்டது. (தற்போதைய TNPSC)

8. சென்னை மாகாணத்தில் முஸ்லிம்கள் நடத்தி வந்த மக்தப் மதரஸாக்கள் தொடக் கப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.

9. சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவானது.

காமராஜர் ஆட்சியில்

1. புதிய இந்திய அரசியல் சட்டப்படி, பிற் படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்யும் வண்ணம் 1951 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. இதுதான் முதலாவது திருத்தமாகும். பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் முயற்சிகள் காரணமாக பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு இந்தச் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

2. 1954 ஆம் ஆண்டு இராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித்திட்டம் முறியடிக்கப் பட்டது.

அண்ணா ஆட்சியில்

1. கலப்புத் திருமணங்களுக்கு சட்ட அங்கீ காரம் வழங்கப்பட்டது.

கலைஞர் ஆட்சியில்

1. 1972 ஆம் ஆண்டில் பட்டியலின, மலை சாதி மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது.

2. 1989 ஆம் ஆண்டு வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்பட்ட சாதி யினருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

3. 2006  2011 ஆட்சியின் போது முஸ்லிம் களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப் பட்டது.

4. இதே காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரு பிரிவினரான அருந்ததி யர்களுக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 5. உயர் கல்வி பயிலும் முதல் பட்டதாரி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில்

1. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு  ஐம்பது  சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.

ஜெயலலிதா ஆட்சி யில் இந்த இடஒதுக்கீடு பாதுகாக்கப் பட்டது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்

1. மருத்துவப் படிப்புகளுக்கு  அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப் பட்டது.

மு.க.ஸ்டாலின் ஆட்சியில்

1. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக லாம் என்கிற சட்டம் கொண்டு வரப் பட்டு  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2. பொறியியல் கல்வி, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு, இம்மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும். சொல்லிக் கொண்டே போகலாம். விரிவு கருதி மிக விளக்கமாக எழுத முடியவில்லை.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்