
இஸ்லாத்தின் மூன்றாவது தூண் ஜகாத்.புனித குர்ஆனின் பல வசனங்களில் ஈமானுக்குப் பிறகு இரண்டு நற்செயல்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.ஒன்று தொழுகை, மற்றொன்று ஜகாத்.தொழுகைக்கும் ஜகாத்திற்கும் இடையே ஆழமான தொடர்பு உள்ளது என்பதற்கும்,ஒரு முஸ்லிமின் ஈமான் முழுமை அடைவது இரண்டின் மூலமே என்பதற்கும் இது சான்றாகும்.ஆனால் இன்று நம் சமுதாயத்தில் தொழுகையை நிலைநாட்ட எவ்வாறு முயற்சி எடுக்கப்படுகிறதோ,அதே அளவில் ஜகாத் கொடுப்பதில் போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை.இதற்கு ஒரு முக்கிய காரணம்,ஜகாத்தின் கூட்டு முறை அதன் உண்மையான நோக்கம் பற்றிய தவறான கருத்தாகும்.
1.மக்களிடம் ஜகாத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லை
பொது மக்கள் பெரும்பாலும் ஜகாத் விஷயத்தில் குழப்பமடைந்து,சரியான புரிதல் இல்லாதவர்களாக உள்ளனர்.இதன் விளைவாக,அவர்கள் ஜகாத்தை தவறாகச் செலுத்துகிறார்கள் அல்லது மிகவும் கவலைக்குரிய வகையில் இந்தக் கடமையை நிறைவேற்றுவதில்லை.
2. ஜகாத் என்பது வெறும் ஸதகா(தர்மம்) மட்டுமல்ல; இது ஒரு கூட்டு முறையாகும்.
பெரும்பாலான மக்கள் ஜகாத்தை,ஓர் ஏழைக்குச் சிறிது பணம் கொடுத்து விட்டு கடமை நிறைவேற்றப்பட்டதாகக் கருதுகிறார்கள்.உண்மையில் ஜகாத் என்பது வெறும் தர்மம் மட்டுமல்ல;அது ஒரு முழுமையான கூட்டு வழிமுறையாகும்.அதன் நோக்கம் தற்காலிக உதவியை வழங்குவது மட்டுமல்ல; கொடுப்பவரின் ஈமானை வலுப் படுத்துவதும்,வாங்குபவரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதுமாகும்.
3. தவறான விநியோகத்தின் விளைவு
ஜகாத்தின் உண்மையான பயனாளிகள் யார் என்பதைக் குர்ஆன் தெளிவாகக் கூறியுள்ளது (அதில் எட்டு வகைகள் உள்ளன).ஆனால் பெரும்பாலான மக்கள் இதுகுறித்து தீவிரமாக விசாரிப்பதில்லை.ஏதோ தேவையுள்ள ஒருவருக்குச் சிறிது தானியம்,சில ஜோடி ஆடைகள் அல்லது ஒரு சிறிய தொகையை வழங்குவதில் தங்களது கடமை நிறைவேற்றப்பட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள்.இதன் விளைவாக ஏழை அந்தச் சிறிய உதவியைப் பயன்படுத்துகிறார்.ஆனால் அவரது வறுமை முடிவுக்கு வருவதில்லை.சொந்தக் காலில் நிற்கப் போதுமான உதவி கிடைக்காததால் அவர் ஏழையாகவே தொடர்கிறார்.
சுருக்கமாகச் சொன்னால் ஜகாத்தின் உண்மையான நோக்கம் தற்காலிகமாகப் பசியைப் போக்குவது மட்டுமல்ல;வறுமையை வேரோடு ஒழிப்பதாகும்.ஜகாத் முறையாகச் சேகரிக்கப்பட்டு முறையாக விநியோகிக்கப்பட்டால்,சமூகத்திலிருந்து வறுமையை ஒழிக்க முடியும்.ஜகாத்தைப் பெறுபவர்களும் ஒரு நாள் ஜகாத் கொடுப்பவர்களாக மாறலாம்.குர்ஆன்,ஹதீஸின் அடிப்-படையில்,ஜகாத்திற்கு மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளன என்று மௌலானா சத்ருதீன் இஸ்லாஹி கூறுகிறார்.
உள்ளத்தைத் தூய்மைப்படுத்துதல்
ஜகாத்தின் உண்மையான,அடிப்படையான முதலாவது நோக்கம்,அது அந்த நபருடன் முழுமையாகத் தொடர்புடையதாகும்.அதாவது,ஜகாத் கொடுப்பவர் உலகப் பேராசையிலிருந்து விடுபட்டு,உள்ளம் தூய்மையடைந்து,நற்செயல்கள் செய்பவராக,இறையச்சம் உடையவராகத் திகழ வேண்டும்.திருக்குர்ஆன் கூறுகிறது:‘மேலும், அதனைவிட்டுத் தொலைவில் வைக்கப்படுவார்,மிகுந்த இறையச்சம் உடையவர்.அவரோ தூய நிலை அடையும் பொருட்டு தம் செல்வத்தை வழங்குகின்றார்' (திருக்குர்ஆன் 92:17,18)
‘(நபியே!) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை வசூல் செய்துகொண்டு அதன் மூலம் அவர்களைத் தூய்மையாக்குவீராக;(நல்வழியில்) அவர்களை முன்னேறச் செய்வீராக!' (திருக்குர்ஆன் 9:103)
ஏழைகளுக்கு உதவுதல்
ஜகாத்தின் இரண்டாவது நோக்கம்,சமூகத்தின் ஏழை மக்களுக்கு உதவுவதும்,அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதும் ஆகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:‘நிச்சயமாக அல்லாஹ்,அவர்களின் செல்வத்தில் சதகாவை(ஜகாத்) கடமையாக்கி உள்ளான்; அது அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு,அவர்களின் ஏழைகளுக்குத் திருப்பித் தரப்படும்'.
மார்க்கத்தைப் பாதுகாத்தல்
ஜகாத்தின் மூன்றாவது நோக்கம்,மார்க்கத்தைப் பாதுகாப்பதும்,உதவுவதும் ஆகும்.ஜகாத் பணத்தை யாருக்காக,எங்கு செலவிட வேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் இவ்வாறு விளக்குகிறது:‘இந்த தானதர்மங்களெல்லாம்,ஏழைகள்,வறியவர்கள்,இந்த தானதர்மங்களை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள்,உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள்,பிடரிகளை விடுவிப்பதற்கும்,கடனாளிகளுக்கும் இறைவழியில் செலவு செய்வதற்கும் பயணிகளுக்கும் உரியனவாகும்' (திருக்குர்ஆன் 9:60)
ஜகாத்தின் கூட்டு முறை
குர்ஆன்,சுன்னாவில்,ஜகாத் என்ற கருத்து தனிப்பட்ட தர்மம் அல்ல;மாறாக,அது ஒரு கூட்டு,அரசு முறையாகும்.சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்,நம்பிக் கையாளர்களின் பண்புகளைப் பற்றி இவ்வாறு கூறுகின்றான்:‘எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்பணிகள் ஆற்றி,தொழுகையையும் நிலைநாட்டி,ஜகாத்தும் கொடுத்து வருகின்றார்களோ,அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு' (திருக்குர்ஆன் 2:277)
அல்லாஹ்வின் இந்தத் தெளிவான வார்த்தைகள்,நம்பிக்கைக்கான வாக்குறுதிக்குப் பிறகு,ஒரு முஸ்லிம் அல்லாதவரை முஸ்லிமாக ஏற்றுக்கொள்வது இரண்டு விஷயங்களைப் பொறுத்தது என்பதைக் குறிக்கிறது:முதலாவதாக,அவர் தொழுகையை நிலைநாட்ட வேண்டும்;இரண்டாவதாக,அவர் ஜகாத் செலுத்த வேண்டும்.
‘ஆயினும்,இவர்கள் பாவமீட்சி பெற்று,தொழுகையை நிலைநாட்டி,ஜகாத்தையும் கொடுத்தால்,தீனில் (மார்க்கத்தில்) இவர்கள் உங்கள் சகோதரர்களாவர்'(திருக்குர்ஆன் 9:11)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) கூறு கிறார்கள்:‘தொழுகையை நிலைநாட்டவும்,ஜகாத் கொடுக்கவும் நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.யார் ஜகாத் கொடுக்கவில்லையோ,அவருடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது' அதனால்தான்,அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிலர் ஜகாத் கொடுக்க மறுத்தபோது,அவர் களுக்கு எதிராகப் போரை அறிவித்து,‘அல்லாஹ்வின் மீது ஆணையாக,தொழுகைக் கும் ஜகாத்துக்கும் இடையில் வேறுபாடு காண்பவர்களுடன் நான் போரிடுவேன்' என்று கூறினார்.(முஸ்லிம், புகாரி, ஹதீஸ் 1399)
அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி எழுது கிறார்:‘ஜகாத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிரான அபூபக்கர்(ரலி) அவர்களின் போர்,மனித வரலாற்றில் முதன்முறையாக ஓர்
அரசாங்கமோ அல்லது அரசு அமைப்போ சமூகத்தில் பலவீனமானவர்கள்,ஏழைகளின் உரிமைகளை உறுதி செய்வதற்காகப் போராடத் தயாராக இருந்தது என்ற அர்த்தத்தில்
மிகவும் முக்கியமானதாகும்'(ஃபிக்ஹ் அல் - ஜகாத்)
நபி(ஸல்) அவர்களின் காலகட்டத்தில் ஜகாத் முறை
ஜகாத் வசூலிப்பதற்கான ஒரு முறையான கூட்டு அமைப்பை நபி(ஸல்) அவர்கள் நிறுவினார்கள்.அதன் சில முக்கியப் பகுதிகள் பின்வருமாறு:
1.ஜகாத் வசூலிக்கும் அதிகாரிகள் (உம்மால் அஸ்ஸதகாத்)
இவர்களில் உமர்(ரலி),அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி),அம்ர் பின் அல் ஆஸ்(ரலி) போன்ற புகழ்பெற்ற நபித்தோழர்களும் அடங்குவர்.நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘சத்தியத்துடனும் நீதியுடனும் ஜகாத் வசூலிப்பவர்,தனது வீட்டிற்குத் திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையில் போராடு பவரைப் போன்றவர்'(இப்னு அபீ ஷைபா,ஹதீஸ் 10818)
2. கணக்கர்கள் (காதிபீனே ஸதகாத்)
இவர்களில் ஜுபைர் பின் அவ்வாம்(ரலி) போன்றவர்கள் இருந்தனர்.
3. விளைச்சலை மதிப்பிடுபவர்கள் (காரிஸின்கள்)
அப்துல்லா பின் ரவாஹா(ரலி) போன்ற வர்கள் இதில் அடங்குவர்.நபி(ஸல்) அவர்களும் கராசின் நிபுணராக இருந்தார்கள்.தபூக் பயணத்தின் போது,ஒரு முஸ்லிம் பெண்ணின் தோட்டத்தின் விளைச்சலை அவர்கள் மதிப்பிட்டார்கள்;அது முற்றிலும் துல்லியமாக இருந்தது.(புகாரி)
4. கால்நடையிலிருந்து கிடைக்கும் வருவாய்க்கு ஜகாத் வசூலிப்பவர்கள்(ஆமீலின் அலல் ஹமாஅ)
நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் பொற் காலம்.உமர் பாரூக்(ரலி)அவர்கள் கலீஃபாவாக இருந்த போது நடந்த இந்தச் சம்பவம்,ஜகாத் முறையின் செயல்திறனைக் காட்டுகிறது. முஆத் பின் ஜபல்(ரலி) அவர்கள் யமனிலிருந்து ஜகாத்தில் மூன்றில் ஒரு பங்கை அனுப்பியபோது,உமர்(ரலி)அவர்கள்,‘நான் உங்களை ஜகாத் வசூலிக்க அனுப்பவில்லை; மாறாக,அங்கு உள்ள பணக்காரர்களிடமிருந்து ஜகாத் வசூலித்து,அங்கேயே உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க அனுப்பினேன்'என்று கூறினார்.அங்கு ஜகாத் வாங்குபவர்கள் யாரும் இல்லை என்று முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்.மூன்றாம் ஆண்டில் முஆத்(ரலி) அவர்கள் அனைத்து ஜகாத் செல்வங்களையும் அனுப்பி,‘இங்கே ஜகாத் பெற்றுக் கொள்ளும் நிலையில் யாரும் இல்லை'என்று கூறினார்கள்.
உமர் பின் அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் இதே நிலைமை ஏற்பட்டது.அப்போது சமூகத்தில் உள்ள அனைவரும் செல்வந்தர்களாக மாறினர்;வறுமை அல்லது வறுமைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது.(அபு உபைத்: கிதாப் அல்-அம்வால்)
தேவையானவர்களையும் ஏழைகளையும் பராமரிப்பது முஸ்லிம் சமுதாயத்தின் கூட்டுப் பொறுப்பாகும்.ஆனால்,இதற்கான விழிப்பு உணர்வு இல்லாமல் இருப்பதற்கான ஒரு முக்கியக் காரணம்,பொருளாதார வளர்ச்சியில் போதிய கவனம் செலுத்தப்படாததுதான்.டாக்டர் முஹம்மது நஜதுல்லா சித்தீகி எழுதுகிறார்:‘சாதாரண முஸ்லிம்கள் கடினமாக உழைக்கவும்,செல்வத்தை உருவாக்கவும்,சம்பாதிக்கவும்,தங்கள் வருவாயில் ஒரு பகுதியைச் சேமிப்பதன் மூலம் லாபகரமான முதலீட்டின் வழியாகத் தங்கள் வருமானத்தையும் செல்வத்தையும் அதிகரிக்க முயற்சிக்கவும் ஊக்குவிக்க அத்தகைய இயக்கம் எதுவும் இல்லை என்பது வியப்பாக இருக்கிறது.முஸ்லிம்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும்,அவர்களின் பொருளாதார வலிமையை அதிகரிக்கவும்,முழு நாட்டிலும் எந்த ஓர் இயக்கமும் இல்லை'(இஸ்லாம், முஸ்லிம்கள், பக். 36)
ஜகாத்தின் கூட்டு முறை இல்லாமை
நமது நாட்டில் கூட்டு ஜகாத் முறை கிட்டத் தட்ட இல்லை என்றே சொல்லலாம்.ஒரு சில அமைப்புகள் இந்த விஷயத்தில் செயல்பட்டு வருகின்றன;ஆனால் முஸ்லிம் சமுதாயம் அதைப் பெரிய அளவில் பின் பற்றுவதில்லை.வழக்கமாக,மதரஸாக்களின் அறிஞர்கள் பல்வேறு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் ரமளான் மாதத்தில் ஜகாத்தைச் சேகரிப்பார்கள்.இதற்குப் பிறகு,ஏராளமான ஏழை மக்கள் செல்வந்தர்களின் வீடுகளுக்கு நேரடியாக வந்து சில ரூபாய்கள்,தானியங்கள் அல்லது துணிகளைப் பெற்றுக்கொண்டு செல்கிறார்கள்.
இத்தகைய நடைமுறை ஜகாத் கொடுப்பவரின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துதல்,வறுமையை ஒழித்தல்,தேவையானவர்களைத் தன்னிறைவு பெறச் செய்தல்,மார்க்கத்தைப் பாதுகாப்பது ஆகிய ஜகாத்தின் உண்மையான நோக்கங்களை முழுமையாக நிறைவேற்றுவதில்லை.
கூட்டு ஜகாத் முறையைப் பற்றிய விவாதங்களில்,பைத்துல்மால் ஒன்றை நிறுவுவதற்கு ஓர் இஸ்லாமிய அரசாங்கம் அவசியமில்லையா?என்ற கேள்வி பொதுவாக எழுப்பப்படுகிறது.ஜகாத் என்பது அதன் முன்னோடிகளால் வகுக்கப்பட்ட கொள்கைகள்,விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தூணாகவே உள்ளது.ஆனால் நவீன காலச் சிக்கல்களை நடைமுறையில் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
மௌலானா ஹாபீஸ் சையத் அப்துல் கபீர் உமரி கூறுவது போல,‘முன்னோடி அறிஞர்கள் மார்க்கத்தின் பிற தூண்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு விரிவான விதிகள் ஒழுங்குமுறைகளை வகுத்துள்ளனர்.
ஆனால் ஜகாத்தைச் சார்ந்த விஷயங்களில் முன்னோர்களால் கூறப்பட்ட கொள்கைகள் காணப்பட்டாலும்,அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.காரணம் இன்றைய நவீன பிரச்னைகள் முன்னோடிகளின் காலத்தில் கருத்தில் கொள்ளப்படவில்லை.எனவே நவீன காலச் சவால்களுக்கு இஸ்லாமியத் தீர்வுகளை முன்வைப்பதும்,அவற்றுக்கான ஷரீஅத் விதிகளைக் கண்டறிய முயற்சிப்பதும் காலத்தின் மிக முக்கியமான தேவையாகும்.'
ஜகாத் கூட்டு முறைக்கு அரசாங்கம் தேவை என்ற கருத்தும் அதற்கான தீர்வும் இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாட்டில் பைத்துல்மால் அமைப்பதற்கு எதிராக முன்வைக்கப்படும் ஆட்சேபனைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக,மௌலானா அபுல்கலாம் ஆசாத் எழுதுகிறார்:‘இந்தியாவில் இஸ்லாமிய அரசாங்கம் இல்லை என்பதற்காக, முஸ்லிம்கள் ஜகாத்தை தனித்தனியாகச் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறுவது மார்க்கம்,பகுத்தறிவுக் கண்ணோட்டங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத சாக்குப் போக்காகும்.
ஓர் இமாம் ஓர் அரசன் சார்ந்து நிறுவப்பட வேண்டிய இஸ்லாமிய அரசாங்கம் இல்லாதபோதிலும்,வெள்ளிக்கிழமை தொழுகை கைவிடப்படவில்லை என்றால்,ஜகாத் முறையை மட்டும் ஏன் கைவிட வேண்டும்?நம்முடைய இஸ்லாமிய விவகாரங்களுக்காக ஓர் அமீரைத் தேர்ந்தெடுக்கவோ,ஒரு மத்திய பைத்துல் மாலை உருவாக்கவோ,தேவைகளுக்காக சங்கங்களை அமைக்கவோ,அல்லது எண்ணற்ற தேவையற்ற விஷயங்களுக்காகச் சில சந்தர்ப்பங்களில் புதுமைகளுக்காகவும் சங்கங்களை உருவாக்கவோ முஸ்லிம்களின் கைகளை யார் கட்டினார்கள்?'
மௌலானா அபுல் கலாம் ஆசாத் எழுதுகிறார்: ‘ஒவ்வொரு நகரத்திலும்,ஒவ்வொரு பகுதிக்கும் குறைந்தது ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து,அவர்கள் ஜகாத்தை சேகரித்து,ஒழுங்கமைத்து,முழுப் பொறுப்புடனும் ஒழுங்குடனும் அதைச் செலவிட வேண்டும்.'
முஃப்தி கிஃபாயத்துல்லாஹ் எழுதுகிறார்:‘ஷரீஆ கட்டளைகளின் அடிப்படையிலும்,மனித நலன் தொடர்பான தேவைகளின் அடிப்படையிலும்,நிதிக் கடமைகளான ஜகாத், உஷ்ர் தொடர்பாக,அவற்றை வசூலிப்பதிலும் விநியோகிப்பதிலும் கூட்டமைப்பிற்கு முழுக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே அவற்றின் கோரிக்கையாகும். (தனிப்பட்ட விஷயங்களில் கூட்டமைப்பு இல்லை என்பது தெளிவானது.) இத்தகைய பிரிவினைகள் நிறைந்த இந்தக் காலகட்டத்தில்,ஒப்பந்தங்களைச் செய்யக்கூடிய ஒரு குழு இந்தப் பணியைத் தங்களது கைகளில் எடுத்துக்கொள்வதே ஒரே சாத்தியமான வழியாகத் தெரிகிறது'
மௌலானா சத்ருதீன் இஸ்லாஹி எழுதுகிறார்:‘முஸ்லிம் குடியிருப்புகள் தங்கள் தொழுகைக்காக ஒரு மஸ்ஜித்,ஜமாஅத் இமாமத்தை ஏற்பாடு செய்வது போலவே,அவர்கள் தங்கள் ஜகாத்துக்காகவும் ஒரு பைத்துல்மாலை நிறுவ வேண்டும்.இது செய்யப்படாவிட்டால்,அது ஒரு கூட்டுத் தவறாகும்.
வெளி,உள் சொத்துகளின் பிரச்னை
சில அறிஞர்கள்,ஜகாத் சொத்துகளை வெளிச் சொத்துகள் (தானியங்கள்,கால்நடைகள்) உள் சொத்துகள் (தங்கம்,வெள்ளி,வணிகப் பொருட்கள்) எனப் பிரிக்கிறார்கள்.அதே நேரத்தில் உஸ்மான்(ரலி) அவர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்தது போல உள் சொத்துகளின் ஜகாத் விநியோகம் உரிமையாளரின் விருப்பத்திற்கு விடப்படலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.உஸ்மான்(ரலி) அவர்களின் காலத்தில் உம்மத் மூன்று கண்டங்களில் பரவியிருந்தது.
தொலைதூரப் பகுதிகளிலிருந்து ஜகாத் வசூலிப்பதற்கான நிர்வாகச் செலவுகள்,வசூலிக்கப்படும் வருமானத்தை விட அதிகமாக இருக்கக்கூடிய சூழ்நிலை இருந்ததால், உரிமையாளர்களே ஜகாத்தை விநியோகிக்க அனுமதிக்கப்பட்டனர்.இது அரசாங்கம் மூலம் விநியோகிக்க இயலாத சூழ்நிலைக்கான ஒரு சிறப்பு ஏற்பாடாகும்.
தேவையுள்ளவர்களை வளப்படுத்த பத்து அம்சத் திட்டம் நாட்டில் வறுமையை ஒழிக்கவும்,ஜகாத் முறையை அதன் அசல் நிலைக்கு மீட்டெடுக்கவும்,ஒரு விரிவான திட்ட மிடப்பட்ட இயக்கம் தேவை.இதற்காக,பத்து அம்சங்களைச் செயல்படுத்துவது ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும்.அதனை அடுத்த இதழில் விரிவாகக் காண்போம்.
(தொடரும்)