மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

இறையருள் பொழியும் ரமளான் : தூய்மைக்கான அறவழி
-மௌலவி முஹம்மது சித்தீக் மதனி ,முதல்வர்,அஸ்ஸலாம் அரபிக் கல்லூரி,திருச்சி, Feb 16-28


புனித ரமளான் மாதம்  வெறும் பசியும் தாகமும் கொண்டிருப்பதல்ல;அது மனித ஆன்மாவைச் செதுக்கி,இறைவனை நோக்கிப் பயணிக்கச் செய்கின்றது.அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையும்,உத்தம நபித் தோழர்களின் வாழ்வியலும் இம்மையை வென்று மறுமையை அடைகின்ற வழிகளை நமக்குக் காட்டுகின்றன.அவற்றில் சில இதோ:

 

ar

1.தூய்மையான எண்ணமும் இறையச்சமும்

எந்தவொரு நற்செயலும் அதன் நோக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.ரமளானின் நோக்கம் என்பது உள்ளத்தில் இறையச்சம்,தூய எண்ணங்களை வளர்ப்பதேயாகும். எனவேதான் நமக்கு நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

‘நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமை யாக்கப்பட்டது போல்,உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது;அதன் மூலம் நீங்கள் இறையச்சமுடையவர்களாக (தக்வா) ஆகலாம்' (திருக்குர்ஆன் 2:183).

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் ஈமானோடும் (இறை நம்பிக்கையோடும்),நன்மையை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கிறாரோ,அவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' (புகாரி).

ஆகவே வாழ்நாள் முழுவதும் நமது உள்ளங்களில் இறையச்சம்,தூய எண்ணங்
களைப் பசுமையாக வைத்திருக்க வேண்டும்.இதற்கு நாம் ரமளானில் மேற்கொள்கின்ற வணக்க வழிபாடுகள்,அறங்கள் உதவி புரிகின்றன.

2.குர்ஆனுடன் ஒரு புனித உறவு

ரமளான் என்பது ‘குர்ஆனின் மாதம்'.வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளான் இரவிலும் நபி(ஸல்) அவர்களிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவது வழக்கம்.

இது வெறும் வாசிப்பல்ல,வாழ்வை மாற்றும் வாசிப்பு.ஆகவே நாம் இந்த ரமளா னுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.ஓத வேண்டும்.பொருள் அறிந்து வாசிக்க வேண்டும்.வாழ்க்கையில் அதைச் செயல்படுத்த வேண் டும்

3.வாரி வழங்கும் வள்ளலாவோம்

நபி(ஸல்) அவர்கள் இயல்பிலேயே கொடைவள்ளல்.ரமளான் வந்துவிட்டால் வீசும் காற்றை விட வேகமாகத் தர்மம் செய்ப வர்களாகத் திகழ்ந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:‘நோன்பு  துறப்பதற்குத்  தேவையான உணவுப்பொருள்களை வழங்குபவருக்கு,நோன்பு நோற்றவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்றே கிடைக்கும்;அதே சமயம் நோன்பாளியின் நன்மையில் எதுவும் குறையாது'(திர்மிதி).

ஏழைகளின் பசியை உணர்வதே நோன்பின் ரகசியம்.அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது,தன்னிடம் இருந்த ஒரே ஒரு ரொட்டியையும் யாசகம் கேட்டவருக்குக் கொடுத்துவிட்டு,வெறும் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறந்த வரலாறு நமக்குத் தியாகத்தைக் கற்பிக்கிறது.ஆகவே நாம் இந்த மாதத்தில் ஜகாத், தானதர்மங்கள் அதிகம் செய்ய வேண்டும்.உற்றார் உறவினர்கள்,ஏழை எளியவர்கள் உள்ளனர்.எண்ணற்றவர்கள் கல்வி கற்க ஆசைப்படுகின்றனர்.இன்னும் எத்தனையோ தேவை உள்ளவர்கள் உள்ளனர்.

இறைவன் கூறுகின்றான்:‘தர்மங்கள் (ஜகாத்) வறியவர்களுக்கும்,ஏழைகளுக்கும்,அதை வசூலிக்கும் பணியாளர்களுக்கும்,உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமைகளை விடுவிப்பதற்கும்,கடன் பட்டவர்களுக்கும்,அல்லாஹ்வின் பாதையிலும்,வழிப்போக்கர்களுக்குமே உரியவை.இது அல்லாஹ் விதித்த கடமையாகும்.அல்லாஹ் நன்கு அறிபவன்; ஞானமிக்கவன்' (திருக்குர்ஆன் 9:60)

ஏழைகளுக்கு வாரி வழங்குவதற்கு நமது மனங்களை மென்மையாக்கும் மாதம் ரமளான்.

4.இரவுத் தொழுகையும் இறைத் தொடர்பும்

ரமளானின் இரவுகள் ஆன்மாக்களுக்கு மிகவும் பிடித்தமானது. ‘தராவீஹ்' ‘தஹஜ்ஜுத்' தொழுகைகள் மனிதனை இறைவனுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன.நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:‘யார் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளான் இரவில் நின்று வணங்குகிறாரோ,அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' (ஸஹீஹ் புகாரி).ஆகவே இரவுகளில் நாம் தொழுகையில் ஈடுபடுவோமாக!

5.நாவடக்கமும் நற்பண்பும்

உணவைத் தவிர்ப்பது எளிது,ஆனால் தீயசொற்களைத் தவிர்ப்பதே உண்மையான நோன்பு.

‘யார் பொய் பேசுவதையும்,அதன் அடிப்படையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ,அவர் பசித்திருப்பதிலும் தாகித்திருப்பதிலும் இறைவனுக்கு எந்தத் தேவையும் இல்லை' (புகாரி).

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) கூறினார்கள்:‘நீ நோன்பு நோற்றால் உனது செவிகள்,கண்கள்,நாவு ஆகியவையும் பொய்,பாவமான காரியங்களை விட்டும் நோன்பு நோற்கட்டும்'

இந்த ரமளானை நாம் ஒரு சடங்காகப் பார்க்காமல்,ஒரு ஆன்மிக மறுமலர்ச்சியாகக் கொள்ள வேண்டும்.நபித்தோழர்கள் ரமளான் முடிந்து ஆறு மாதங்கள் வரை அந்த நோன்பை இறைவன் ஏற்க வேண்டும் என்று பிரார்த்திப்பார்கள்.நாமும் இப்போதிலிருந்தே நம் உள்ளங்களைத் தயார் செய்வோம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்