
புனிதமிகு ரமளான் நம்மை வந்தடைந்தது.இம்மாதத்தில் நம்முடைய வாழ்க்கை நடைமுறைகள்(Lifestyle) மாறிவிடும்.பள்ளிவாசலில் இருந்து நம்முடைய அலுவலகங்கள், வணிக வளாகங்கள்,இல்லங்கள் எல்லாமே ஒரு மாற்றத்துக்கு உள்ளாகும்.அது வரவேற்கத்தக்க மாற்றம்தான்.நோன்பு அப்படிப்பட்ட ஒரு பண்புப் பயிற்சியை நமக்கு வழங்குகிறது.ஆனால் அந்த நோன்பு எதற்காக ரமளான் மாதத்திலே கடமையாக்கப்பட்டது? அது ஒரு ஆன்மிக விழாக் காலம்.
ஒவ்வொரு ஆண்டும் ரமளானிலே நாம் நோன்பு வைக்கிறோம்,பகலிலே பசித்திருக்கிறோம்,தாகித்திருக்கிறோம்,இச்சைகளை அடக்கிக் கொண்டிருக்கிறோம்,இரவிலே வழக்கத்திற்கு மாறாக மணிக்கணக்கிலே விழித்திருந்து வணங்குகிறோம்,இன்னும் அதிகமாக தராவீஹ் தொழுகிறோம்,தஹஜ்ஜுத் தொழுகிறோம்,அதிகம் அதிகமாக குர்ஆன் ஓதுகிறோம்,தான தர்மங்களை வழங்குகிறோம்.ஆனால் ரமளான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் தொடங்கிவிட்டால் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பி விடுகிறோம்.
இது எப்படிச் சாத்தியம்?‘நோன்பு ஒரு பள்ளிக்கூடம்'என்று அரபிப் பழமொழி ஒன்று உண்டு.பள்ளிக்கூடத்திற்கு எதற்காக நம் குழந்தைகளை அனுப்புகின்றோம்?அவர்கள் நல்ல கல்வியை, நல்லொழுக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.பார்த்துப் பார்த்து பள்ளிக்கூடத்தில் சேர்ப்போம்.ஆனால் ஐந்தாம் வகுப்பு முடிந்த பிறகும் அந்தப் பிள்ளைக்கு ABCD,அ,ஆ தெரியவில்லையென்றால் அந்தப் பள்ளிக்கூடத்தில் நம்முடைய குழந்தை தொடர்ந்து படிக்க விரும்புவோமா? கோளாறு எங்கே என்று ஆராய்வோம். குழந்தையிடத்தில் பிரச்னையா? ஆசிரியரிடத்தில் பிரச்னையா? இல்லை பள்ளிக்கூடத்தில் பிரச்னையா? என்று ஆய்வு செய்வோம்.
நாம் ஒவ்வொருவரும் நமக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து பல ஆண்டுகளாக நோன்பு நோற்கின்றோம்.அப்படி என்றால்,அந்த நோன்பு நம்மிடத்தில் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
‘இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின் பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல்,உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது.(அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்' (திருக்குர்ஆன் 2:183)
அந்தத் தக்வா &இறையச்சம் நமக்கு வந்துவிட்டதா? ரமளான் மாதம் முழுவதும் நேர்த்தியாகத் தொழுவது போல மற்ற மாதங் களில் தொழுகின்றோமா?
ரமளானில் பொய் பேசமாட்டோம்;ஏமாற்ற மாட்டோம்; அளவை,நிறுவையில் மோசடி செய்யமாட்டோம்,ஆபாசமான,அருவருக்கத்தக்க காரியங்களைப் பார்க்க மாட்டோம். பிற மாதங்களில் இவற்றைச் செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறதா?
இந்த ரமளான் நம்மை உண்மையான நாகரிக மனிதர்களாக,பண்பாட்டில் உயர்ந்தவர்களாக,ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக மாற்ற வேண்டும்.
குர்ஆனிய நாகரிகம்
உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்,எத்தனையோ நாகரிகங்களை நாம் காண்கிறோம்.சிந்துச் சமவெளி நாகரிகம்,நைல் நதி நாகரிகம்,மஞ்சள் ஆறு நாகரிகம், யூபிரடிஸ் நதிக்கரையோர நாகரிகம் & இவ்வாறாக உலகின் பெரும்பாலான நாகரிகங்கள் அனைத்தும் ஆற்றங்கரைகளில்தான் உருவாகியுள்ளன.காரணம் என்ன? ஆற்றங்கரை என்பது வளமும் செழிப்பும் நிறைந்த இடம்;அங்கு மனிதர்கள் வசதியுடனும் வளத்துடனும் வாழ்ந்தார்கள்.
ஆனால் இஸ்லாமிய நாகரிகம் அப்படியல்ல.அது ஆறுகளற்ற,பாலைவனமான அரேபியாவின் மணல் நிலத்திலிருந்து பரவியது.மக்காவிலும் மதீனாவிலும் நதிகள் ஓடவில்லை.ஆயினும்,அந்த மணற்பரப்பிலிருந்து உலகத்தை ஒளி ஊட்டிய ஒரு மகத்தான நாகரிகம் உருவானது என்றால்,அங்கே ஒரு நதி ஓடியது &அது தண்ணீரின் நதி அல்ல; அது ‘வஹி' என்ற வேத வெளிப்பாட்டின்,இறைவசனங்களின் நதி.அல்லாஹ்வின் அருளாலே நபி(ஸல்) அவர்களின் மூலம் குர்ஆன் எனும் உயிர்நதி இந்த உலகில் ஓடத்தொடங்கியது.
அந்தக் குர்ஆன் நதி,இதுவரை மனித வரலாற்றில் எந்த நாகரிகமும் உருவாக்காத அளவுக்கு உயர்ந்த,ஒழுக்க மிக்க,நீதியுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கியது.அந்த நாகரிகத்தின் வாரிசுகளாகத்தான் நாம் இன்று வாழ்கிறோம்.அந்த உயிர்நதி இன்றும் ஓடிக்கொண்டே இருக்கிறது.ஆனால் அந்த நதியிலிருந்து நாம் பயன் பெறவில்லை என்றால் இழப்பு அந்த நதிக் கல்ல;இழப்பு அந்த வஹிக்கல்ல;இழப்பு நமக்குத்தான்.
இன்றைக்கு ரமளான் வந்தால் தான் குர்ஆன் நமக்கு நினைவுக்கு வருகிறது.‘ரமளான் மாதம் எத்தகையதென்றால்,அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும்,மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும்,சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது.எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ,அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்.'(திருக்குர்ஆன் 2:185)
குர்ஆன் இறக்கப்பட்டதன் காரணமாகத்தான் ரமளானுக்கு இவ்வளவு சிறப்பு.குர்ஆன் என்பது மனிதனை அறியாமையின் இருளிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு செல்லும் வேதம்.நரகத்திலிருந்து காப்பாற்றி,சுவனத்தின் பக்கம் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் இறைவனின் வழிகாட்டல்.ஆனால் அந்தக் குர்ஆனை நாம் ஓதுவதையே ஒரு சடங்காக மாற்றி விட்டோம்.
குர்ஆன் மீது உண்மையான நம்பிக்கை இல்லாமல் ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியாது.ஆனால் அந்த நம்பிக்கை என்பது பெயரளவிலானதாக இருக்கக்கூடாது.இது அல்லாஹ்வின் வேதம் என்று ஒப்புக் கொண்டால் மட்டும் போதாது.
அலிஃப் & லாம் & மீம் என்று நீங்கள் ஓதினால்,ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் கிடைக்கும்;மூன்று எழுத்துகளுக்கு முப்பது நன்மைகள் கிடைக்கும்.நபி(ஸல்) அவர்கள் இதை அறிவித்திருக்கிறார்கள்.ஆனால் அந்த நன்மைகளை மட்டுமே தருவதற்காக அல்லாஹ் குர்ஆனை இறக்கவில்லை.
அல்லாஹ் கூறுகிறான்,‘அலிஃப், லாம், றா.(முஹம்மதே!) இது ஒரு வேதமாகும்.இதனை உம்மீது நாம் இறக்கியுள்ளோம்;மக்களை,அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளிலிருந்து வெளியேற்றி,ஒளியின் பக்கம் நீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக!'(திருக்குர்ஆன் 14:1)
எனவே,குர்ஆன் என்ற அந்த உயிர்நதியிலிருந்து நாம் உண்மையான நன்மை பெற வேண்டும் என்றால்,அதை விளங்கிக் கொண்டு ஓத வேண்டும்.நபிகளாரும்,அவர்களின் தோழர்களும் குர்ஆனின் அடிப்படையில் வாழ்ந்தது போல,நாமும் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆனை ஓதுவதற்கு நன்மை உண்டு பொருள் தெரியாமல் ஓதினாலும் நன்மை உண்டு.இந்தச் சிறப்பு வேறு எந்த நூலுக்கும் இல்லை;குர்ஆனுக்கு மட்டுமே உள்ளது. ஆனால் குர்ஆன்,அதைவிட அளவற்ற உயர்ந்த நன்மையின் பக்கம் நம்மை அழைத்துச் செல்லத் தயாராக இருக்கிறது.அது அல்லாஹ்வின் மன்னிப்பின் பக்கம் நம்மை வழிநடத்துகிறது.அது நம்மை நேர்மை-யான, தூய்மையான,இறைவனை நோக்கி வாழும் வாழ்க்கைக்குக் கைப்பிடித்து அழைக்கிறது.
உயர்ந்த வாழ்க்கைக்கான பயிற்சிக் காலம்
நோன்பின் மூலம்,‘அல்லாஹ் நம்மைக் கண்காணிக்கிறான்'என்ற உணர்வு நம் உள்ளத்தில் உருவாகிறது.அந்த உணர்வின் வழியாக,குர்ஆனுடைய வசனங்கள் நம் நினைவில் பதிகின்றன.நற்செயல்கள் பலன் தர வேண்டும் என்றால்,அவற்றின் அடிப்படையாக ஈமான் & இறைநம்பிக்கை இருக்க வேண்டும்.அந்த இறைநம்பிக்கை என்பது வெறும் சொல்லில் அல்ல;உள்ளத்தில் உறைந்த,வாழ்வில் வெளிப்படும் நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
இறையச்சம் உடையவர்களுக்கு நோன்பு கடமை;நோன்பு வைத்தால் இறையச்சம் வரும்;இறையச்சம் இருந்தால் ஹிதாயத் & நேர்வழி கிடைக்கும்.இவை அனைத்தும் ஒன்றோடொன்று இறைவன் அமைத்துக் கொடுத்த அழகிய சங்கிலித் தொடர்புகள்.நாம் பொதுவாக முத்தக்கீன் என்ற சொல்லை,இறையச்சம் உடையவர்கள் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் கடந்து விடுகிறோம்.ஆனால் அச்சம் என்றால் என்ன?பாம்பைப் பார்த்தால் சிலருக்குப் பயம் வரும்;சிலருக்கு பல்லியைப் பார்த்தால் அச்சம் வரும்;சிலர் கரப்பான் பூச்சியைக் கண்டால்கூட நடுங்குவார்கள்.ஆனால் அந்த உயிரினங்கள் நம் முன்னிலையில் இல்லாவிட்டால்,நாம் பயப்படுவோமா? இல்லை.
ஆனால் நம்மைப் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருப்பவனான அல்லாஹ்வை நாம் கண்களால் காண முடியாவிட்டாலும்,அல்லாஹ் நம்மைக் காண்கிறான் என்ற உள்ளுணர்வு நம் உள்ளத்தில் இருக்கிறது அல்லவா? அந்த உணர்வுதான் தக்வா & இறையச்சம்.அதனை உருவாக்கும் உன்னதமான பயிற்சிதான் நோன்பு.
ஒரு நாள் அல்ல,இரண்டு நாள் அல்ல;ஒவ்வோர் ஆண்டும் ஒரு மாத காலம் தொடர்ச்சியாக இந்தப் பயிற்சி நமக்கு வழங்கப்படுகிறது என்றால்,அல்லாஹ் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற உணர்வு,நம்முள் இயல்பான உள்ளுணர்வாக மாற வேண்டும்.இந்தப் பயிற்சியை நாம் பெறவில்லை என்றால்,ரமளான் ஒரு வழிபாட்டு மாதமாக அல்லாமல்,ஒரு சாதாரண திருவிழாவாக மட்டுமே மாறிவிடும்.
அல்லாஹ் ஹலாலாக அனுமதித்த பல விஷயங்கள் - உணவு,தண்ணீர்,தாம்பத்ய இச்சைகள் - அனைத்தும் இயல்பாக அனுமதிக்கப்பட்டவையே.
ஆனால் அதிகாலைத் தொழுகை (சுபுஹ்) பாங்கு முதல் அந்திவேளைத் தொழுகை (மஃக்ரிப்) பாங்கு சொல்லும் வரை,அதே ஹலாலான விஷயங்களையே நாம் துறந்து நிற்கின்றோம்.ஏன்? ஒரே காரணம் அல்லாஹ் இந்நேரத்தில் கூடாது என்று சொன்னான்.ஹலாலான ஒன்றைக் கூட,அல்லாஹ் தற்காலிகமாகத் தடை செய்ததற்காக,நாம் அதை விட்டுவிடுகிறோம் என்றால்,அது அல்லாஹ்வின் கட்டளைக்கு நாம் முழுமையாக அடிபணிகின்றோம் என்பதற்கான சான்று.
ஆனால் அதே அல்லாஹ்தான், தினமும் ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்கின்றான்.ஹலால் & ஹராம் என்று வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கிக் கொடுத்திருக்கிறான்.அந்தக் கட்டளைகள் நமக்கு ஏன் நினைவில் நிற்பதில்லை?ரமளானில் மட்டும் அல்லாஹ் நம்மைக் கண்காணிக்கின்றான் என்ற உணர்வு வருகிறது.ஆனால் ரமளான் அல்லாத நாள்களில் அது ஏன் மறைந்து விடுகிறது?காரணம் ஒன்றுதான்:வழிபாடுகள் எதற்காக என்ற அறிவு இல்லை;நினைவூட்டல் இல்லை;தொடர்ச்சியான உணர்வு இல்லை.
எல்லா நேரங்களிலும், அல்லாஹ் நம்மைக் கண்காணிக்கின்றான் என்ற அறிவை வழங்குவதும்,அந்த உள்ளுணர்வை உருவாக்குவதும்,அந்த இறையச்சத்தை வளர்ப்பதுமே நோன்பின் மிக முக்கியமான,உயர்ந்த இலட்சியமாகும்.
இந்த நோன்பு வெறும் ஒரு சடங்காக மாறிவிடக் கூடாது.நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:‘சில நோன்பாளிகள் இருக்கிறார்கள்;அவர்கள் பசி,தாகம் அனுபவித்ததைத்தவிர, வேறு எந்தப் பலனையும் பெறுவதில்லை.'
ஏன் தெரியுமா?அவர்கள் நோன்பு வைத்துக்கொண்டே பொய் பேசுகிறார்கள்,தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்,தீய பழக்கங்களை விட மறுக்கிறார்கள்.அப்படிப்பட்ட நோன்பு எந்த மாற்றத்தையும் உருவாக்குவதில்லை.
நோன்பு என்பது அல்லாஹ்வுக்குப் பலன் தருவதற்கான ஒன்று அல்ல.நாம் பசியோடு இருந்தாலும்,தாகத்தோடு இருந்தாலும்,இச்சைகளை அடக்கிக்கொண்டாலும்,அதனால் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை.பலன் நமக்குத்தான்.
இந்த ரமளான் மாதத்தில்,ஒரு நஃபிலான - உபரியான வணக்கத்தைச் செய்தால்,மற்ற மாதங்களில் ஒரு ஃபர்ள் - கடமையைச் செய் ததற்குச் சமமான நன்மையை அல்லாஹ் அளிக்கிறான்.ஒரு ஃபர்ளை & கடமையை நிறைவேற்றினால்,எழுபது ஃபர்ளுகளை நிறைவேற்றிய நன்மைகளை வழங்குகிறான்.
இந்த ரமளானில் ஒருமுறை முழு குர்ஆனை அரபியோடு சேர்த்து,நமக்குப் புரியும் மொழியில் - தமிழோ,ஆங்கிலமோ,ஹிந்தியோ,உர்துவோ - மொழிபெயர்ப்புடன் படிப்பேன் என்று ஒரு தீர்மானம் எடுங்கள்.
இஃப்தாருடைய நேரத்தில், நோன்பாளியின் துஆ கண்டிப்பாக ஏற்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அதேபோல் தஹஜ்ஜுத் நேரம்,சஹர் நேரம்- அந்த நேரத்தில் டிவியிலும் யூடியூபிலும் மூழ்கி விடாதீர்கள்.ஒரு சொற்பொழிவைப் பின்னால் பார்க்கலாம்;ஆனால் அந்த நேரத்தை இழந்தால்,வாழ்நாளில் மீண்டும் அதே நேரம் திரும்பக் கிடைக்காது.குறைந்தபட்சம் சஹருக்கு முன் இரண்டு ரக்அத் தொழுது அல்லாஹ்விடம் அழுது மன்றாடுங்கள்.
ரமளான் என்பது முடங்கிக் கிடக்கும் மாதம் அல்ல.பத்ருப் போர் நடந்தது ரமளானில்-தான்.மக்கா வெற்றி பெற்றதும் ரமளானில்தான்.அது செயலற்ற மாதம் அல்ல;அது செயல் நிறைந்த மாதம்.
இந்த ரமளான்,குர்ஆன் எனும் உயிர் நதியிலிருந்து நம் உள்ளத்திற்குள் நேர்வழியைப் பாய்ச்சும் மாதமாக இருக்க வேண்டும்.இந்த ரமளான் நமது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைய வேண்டும்.நம்முடைய பலவீனங்களை, தவறுகளை,பிழைகளை நீக்கி உண்மையின் பக்கம்,வாய்மையின் பக்கம் நன்மையின் பக்கம் திருப்புவதாக இந்த ரமளான் நம் வாழ்வில் புதுவசந்தம் வீச அருளாளன் அல்லாஹ் அருள்புரிவானாக.