
நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது ரமளான் மாதம்.இம் மாதம் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வினால் அருளப்பட்ட மகத்தான ஓர் அருட்கொடை.வாழ்வு முழுவதற்குமான வெற்றிக்கு வழிகாட்டும் ஓர் இறையச்சப் பயிற்சிக் காலமாகும். மனிதன் தன்னைத் தானே சீரமைத்து,வெற்றிப் பாதையில் பயணிக்க ரமளான் ஓர் உன்னத வாய்ப்பாக இருக்கின்றது.
ரமளானில் நோன்பு முதன்மையாக விளங்குகிறது.நோன்பு மனிதனுக்கு தன்னடக்கம்,பொறுமையைக் கற்றுத் தருகிறது.பசி,தாகம் போன்றவற்றை இறைக்கட்டளைக்காகச் சகித்துக் கொள்வதன் மூலம் மன உறுதி வளர்கிறது.இந்த மன உறுதியே வாழ்க்கையில் வரும் சவால்களை இறையச்சத் தோடு எதிர்கொண்டு வெற்றியடைய உதவும் முக்கிய ஆயுதமாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:‘வெறுமனே உண்ணாமலும் பருகாமலும் இருப்பதல்ல நோன்பு.தீமையானவற்றிலிருந்தும் மானக்கேடானவற்றிலிருந்தும் விலகி இருப்ப தாகும்'
ரமளானை நாம் அலட்சியப்படுத்தாமல் ஆர்வத்தோடு,முழுமையாகப் பயன்படுத்துவதே நாம் பெற்றிருக்கின்ற அறிவின் வெளிப்பாடாகும்.‘இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும்.(நபியே!)இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம்.இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்;அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக!'(திருக்குர்ஆன் 38:29)
ரமளானை அனுபவிப்போம்
‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமையும்' எனும் நபி மொழிக்கேற்ப உள்ளத்தைத் தயார் செய்து ரமளானைத் தூய எண்ணத்துடன் அணுக வேண்டும்.புனித ரமளானில் இறைவழிபாடுகளை ஆர்வத்துடன் நிறைவேற்ற வேண்டும்.‘எவர் ஒருவர் ரமளான் மாதத்தில் ஏதேனும் ஒரு நன்மையை மனமார ஆற்றுகின்றாரோ அது மற்ற மாதங்களில் கடமையாக்கப்பட்ட ஒரு செயலைப் புரிந்ததற்குச் சமமான நற்கூலியை பெற்றுத் தரும்.எவர் இம் மாதத்தில் ஒரு கடமையான செயலை நிறைவேற்றினாரோ அது மற்ற மாதங்களில் 70 கடமைகளை நிறைவேற்றிய நற்கூலியைப் பெற்றுத் தரும்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள்,தாராளமாக வாரி வழங்கி உதவி புரிபவர்களாகத் திகழ்ந்தார்கள்.ஆனாலும் புனித ரமளான் மாதம் வந்து விட்டாலோ நபி(ஸல்) அவர்களின் கொடை இன்னும் அதிகமாகிவிடும். ஜிப்ரீல்(அலை) அவர்கள் இரவில் வந்து திருக்குர்ஆனை ஓதிக் காண்பிக்கும் போதும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஓதச் செய்து கேட்கும் போதும் அடுத்த நாள்களில் வேக மாக வீசும் காற்றைப் போல் நபி(ஸல்) அவர்களின் கொடை மிக அதிகமாகி விடும்.
-அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி).
உன்னத வாய்ப்பு
அல்லாஹ் மனிதர்களுக்கு அருளிய உன்னத வாய்ப்பான ரமளான் மாதம் வெறும் நோன்பு நோற்கும் காலம் மட்டும் அல்ல.மனிதன் மனிதனாக மிளிர்வதற்காக ஆண்டில் ஒரு முறை கிடைக்கும் உன்னத வாய்ப்பு.இதைச் சரியாகப் பயன்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.
ரமளானில் அல்லாஹ் தனது தனிப்பட்ட அருளை வழங்குகிறான்.அதனால் கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு,புதிய வாழ்க்கையைத் தொடங்க ரமளான் சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட இந்த மாதத்தில் அதை அதிகமாக ஓதுதல்,அதன் அர்த்தங்களைச் சிந்தித்தல்,வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துதல் போன்றவையே மனிதனை நேர்வழியில் நிலைநிறுத்தும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:‘இறைவன் கூறுகிறான்:ஒருவர் திருக்குர்ஆனை ஓதுவதிலேயே முழுமையாக ஈடுபட்டு இருக்கிறார் என்னிடம் பிரார்த்தனை புரிவதற்குக் கூட அவரிடம் நேரமில்லை என்றாலும் என்னிடம் வேண்டிப் பிரார்த் திப்போரை விட இத்தகைய அடியாருக்கு அவர் என்னிடம் கேட்காமலேயே அதிகமாக வழங்குவேன்'.
‘திருக்குர்ஆனை ஓதுவதால் ஓர் அடியான் மற்றவர்களை விடவும் அல்லாஹ்விடம் அதிக நெருக்கத்தைப் பெறுகின்றான்' என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்-ளார்கள்.மட்டு மின்றி நபி(ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை ஓதும் போது ஒவ்வொரு எழுத்தையும் தனித் தனியாக உச்சரித்து தெளிவாக ஓதுவார்கள்.
‘உலகில் திருக்குர்ஆனை மகிழ்ச்சியாகவும் நிறுத்தி அழகாகவும் ஓதியவர்களிடம் இறைவன் மறுமையில்,‘நீங்கள் ஓதுங்கள் உலகில் எவ்வாறு திருக்குர்ஆனை நிறுத்தி நிதானமாக அழகான முறையில் ஓதினீர்களோ அவ்வாறே இங்கும் ஓதுங்கள்.இன்னும் நீங்கள் ஓதும் ஒவ்வொரு வசனத்திற்கும் அது இறுதியை அடையும் வரை ஒரு படித்தரம் சுவனத்தில் உயர்ந்து கொண்டே செல்லும் என்று இறைவன் கூறுவான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தினமும் திருக்குர்ஆனை ஓதிக் கொண்டும் அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவரின் உதாரணம் கஸ்தூரியால் நிரப்பப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பையைப் போன்றதாகும். அதிலிருந்து நறுமணம்வெளியாகிக் கொண்டிருக்கும்.
பொய்,புறம் பேசுதல்,கோள் சொல்லுதல்,சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல்,வீணான காரியங்களில் பங்கேற்பது, அரட்டை அடிப்பதில் நேரத்தை வீணடித்தல் போன்ற நோன்பின் பயனைக் கெடுக்கும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் நம்மைத் தடுக்கும் கேடயமாக ரமளானை பயன்படுத்த வேண்டும். அதிக நன்மைகளே தீமைகளை அழித்துவிடும்.
ரமளான் எனும் உன்னத வாய்ப்பை வெற்றிப் பாதையாகப் பயன்படுத்தி ஈருலக வெற்றி காண்போம்.அதுவே ரமளானின் நோக்கமாகும்.