மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

ஆணவ அரசன்
, 16-31 - December - 2021


ஜபில்லா பின் அய்ஹம். சிரியாவின் கஸாஸினா குலத்தாரின் இறுதி அரசன். உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்க விரும்பு வதாக உமர்(ரலி) அவர்களுக்கு இவர் கடிதம் எழுதினார். அனுமதி வழங்கப்பட்டது. 500 வீரர்கள் புடைசூழ உயர்தர ஆடைகள் அணிந்து மதீனாவுக்கு வந்தார். இஸ்லாத்தை ஏற்பதாக அறிவித்தார். பின்னர் ஹஜ் செய்வதற்காக உமர்(ரலி) அவர்களுடன் மக்கா சென்றார். அரசர்களுக்கே உரித்தான, தரையைத் தொடும் நீண்ட மேலங்கியை அணிந்தவாறு கஅபாவுக்குச் சென்றார். கஅபாவை வலம் வரும்போது பின்னால் வந்த கிராமவாசி ஒருவர் அவரது மேலங்கியை அறியாமல் மிதித்துவிட்டார். உடனே கோபத்துடன் திரும்பிய அரசன், அந்தக் கிராமவாசியின் கன்னத்தில் ஓங்கி அறைய, அவரது மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தோடியது. கிராமவாசி உமர்(ரலி) அவர்களிடம் முறையிட்டார். உடனே உமர்(ரலி), ஜபில்லா அரசனை வரவழைத்தார். இருவருக்குமிடையே நடைபெற்ற உரையாடல் இதோ: உமர்(ரலி): "கஅபாவை வலம் வரும்போது ஒரு கிராம வாசியை நீர் அடித்ததாகவும் அவரது மூக்கை உடைத்ததாகவும் உம்மைக் குறித்து ஒரு புகார் வந்துள்ளது. அது உண்மையா?' ஜபில்லா: "நான் எதையும் மறுப்பவனோ மறைப்பவனோ அல்லன். அந்தக் கிராமவாசி செய்த செயலுக்கு என் கைகளால் ஒழுக்கம் கற்பித்தேன். எனது உரிமையைப் பெற்றுக் கொண்டேன்'. உமர்(ரலி): "எந்த உரிமை ஜபில்லா? பலவீனமானவர் என் கண் முன்பே அநீதிக்கு உள்ளாவதா? அறியாமைக் கால பழக்க வழக்கங்களை என்றோ நாம் அடியோடு புதைத்துவிட்டோம். அவற்றை மண்போட்டு மூடிவிட்டோம். அதன்மேல் புதிய கோட்டையைக் கட்டி எழுப்பிவிட்டோம். இங்கே எல்லோரும் சமம்தான். உண்மையை நீரே ஒப்புக்கொண்டதால்; ஒன்று அவரிடம் நீர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையேல் நீ அடித்ததைப் போன்று உம்மை அவர் அடிப்பார்'. ஜபில்லா: "அது எப்படி முடியும் அமீருல் முஃமினீன்? அவன் ஒரு சாதாரண குடிமகன். நானோ கிரீடம் சூட்டியவன். நட்சத்திரம் மண்ணில் கீழே விழுவது சாத்தியமா? எனக்குப் பின்னால் நடந்துவர அவருக்கு எவ்வளவு தைரியம்? இப்போதும் எப்போதும் கண்ணியம் எனக்கே உரித்தானது'. உமர்(ரலி): "ஜபில்லா..! இறையச்சத்தால் மட்டுமே இஸ்லாத்தில் ஒருவர் உயர்வடைவார். அனைவரும் சமம்

என்ற உலகத்தையே நாம் உருவாக்க விரும்பு கிறோம்''. ஜபில்லா: "என்னை வற்புறுத்தினால் நான் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிடுவேன்'. உமர்(ரலி): "அது உமது விருப்பம். இங்கே எந்த நிர்பந்தமும் கிடையாது. ஆனால் உமக்கான தண்டனை நிச்சயம் உமக்கு உண்டு'. ஜபில்லா: "அரசனும் ஆண்டியும் ஒன்றென்று கூறும் மார்க்கம் எனக்குத் தேவையில்லை'. உமர் (ரலி): "அவ்வாறெனில் எமது வாள்களால் உமக்கு ஒழுக்கம் கற்பிப்போம்'. ஜபில்லா: "அவ்வாறெனில் இன்று இரவு வரை எனக்கு அவகாசம் தாருங்கள். நான் யோசிக்க வேண்டும்'. உமர்(ரலி): "ஆகட்டும்'. பின்னர் அங்கிருந்து திரும்பிய ஜபில்லா, தமது சகாக்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சிரியாவுக்குத் தப்பிச் சென்றார். அங்கு சென்றபின் கிறித்தவத்தை ஏற்பதாக அறிவித்தார். உமர் (ரலி) அவர்களும் அப்போதைய நபித்தோழர்களும் அச்செய்தியை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. அவரை மறந்தும் விட்டனர். ஆனால் தமது இறுதிக் காலத்தில் இஸ்லாத்தைவிட்டு வெளியேறியமைக்காக ஜபில்லா கண்ணீர் விட்டு அழுதான். தமது தாய் தம்மைப் பெற்றெடுக்காமல் இருந்திருக்கக் கூடாதா என்று அரற்றினான். உமரின் பேச்சைக் கேட்டிருக்கக்கூடாதா என்று கன்னத்தில் அடித்துக் கதறினான். இறுதியில் இஸ்லாத்தை நிராகரித்த நிலை யிலேயே மரணித்தான். காலம் அவனை என்றோ மறந்துவிட்டது. இறைச்சட்டத்தை அவன் துச்சமாக நினைத்தான். ஆணவத்தால் அதனை ஏற்க மறுத்து வழிதவறினான். நரகுக்கு விறகானான். இஸ்லாம் கொள்கையால் கட்டப்பட்ட ஓர் இறை மார்க்கம். இங்கே ஒருவர் முஸ்லிமாக இருப்பதாலோ அல்லது இஸ்லாத்தைவிட்டு வெளியேறுவதாலோ;  இஸ்லாத்திற்கு எவ்வித நன்மையோ பாதிப்போ ஏற்படாது. மாறாக, அதன் கொள்கையை ஏற்று நடப் பவரே ஈருலகிலும் ஏற்றம் பெறுவார். மறுப்பவர் பெரும் நஷ்டமடைவார். அவ்வளவுதான்! (ஏதோ வாசிம் ரிஸ்வியாம்! இந்து மதத் திற்கு மாறினாராம். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்