SIR, தேர்தல் குளறுபடிகள், இந்திய பிரதமரின் வெளிநாட்டுப் பயணம், ரஷ்ய அதிபரின் இந்திய வருகை, திருப்பரங்குன்றத் தீபப் பிரச்னை, மதப் பிளவுகளைத் தூண்டும் தீர்ப்புகள், நீதிபதியை பதவி விலக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கை என இந்திய அரசியல் வானம் பரபரப்பாகக் காணப்படும் சூழலில், குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்க நாள்களிலேயே சத்தமில்லாமல் உயர்கல்வி ஆணைய மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிøறவேற்றப்பட்டு இருக்கிறது.
2018ஆம் ஆண்டிலேயே இந்த மசோதா கடுமையான எதிர்ப்புகள் காரணமாகத் திரும்பப் பெறப்பட்டது. 2020ஆம் ஆண்டு புதிய தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இந்த மசோதா வின் நோக்கங்கள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. உயர்கல்வியை முழுக்க தனியார்மயமாக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் உயர்கல்வியை ஒப்படைக்கும் ஒரு முயற்சியாகவே இதனை கல்வியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது நாளடைவில் இட ஒதுக்கீடுகளை இல்லாமல் ஆக்கி ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் உயர்கல்வியைக் கடுமையாகப் பாதிக்கும்.
இந்தியாவின் உயர்கல்வித் துறை யில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அமைச்சரவை விக்சித் பாரத் சிக்ஷாஆதிக்ஷன்(Vikshit Bharat Shiksha Adhikshan - VBSA) என்ற பெயரில் உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா தேசிய கல்விக் கொள்கை(NEP) 2020இன் பரிந்துரையின்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது உயர்கல்வி நிறுவனங்களின் ஒழுங்குமுறை, அங்கீ காரம், தர நிர்ணயம் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் புதிய ஆணையம், பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளைக் கலைத்து விட்டு புதிய அமைப்பை உருவாக்குகிறது. ஏற்கனவே சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (AICTE), தேசிய ஆசிரியர் கவுன்சில் (NCTE) ஆகியவற்றைக் கலைப்பது இதில் அடங்கும். இந்த அமைப்புகள், அறிவியல் அல்லாத உயர்கல்வியை கண்காணிப்பது, தொழில்நுட்பக் கல்வியைக் கட்டுப்படுத்துவது, ஆசிரியர் கல்வியை ஒழுங்குபடுத்துவது ஆகிய பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது. இவை அனைத்தும் கலைக் கப்பட்டு VBSA அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா (HECI) என்பதை சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றி இருப்பது, இந்த ஆணையம் எப்படிச் செயல்படும் என்பதை முன்னறிவிப்பு செய்வதாக உள்ளது. இந்த ஆணையத்தின் அதிகாரங்கள் யாரிடம் செல்லும் என்பதையும் இது உணர்த்துகிறது.
மருத்துவம், சட்டக்கல்லூரிகளைத் தவிர்த்து மற்ற அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்வி ஒழுங்குமுறை, அங்கீகாரம் வழங்குதல், தொழில்முறை தரங்களை அமைத்தல் ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் இந்தப் புதிய அமைப்பு கவனிக்கும். இந்த அமைப்பின் கீழ் நான்கு பிரிவுகள் இயங்கும்.
1.தேசிய ஒழுங்குமுறைக் குழு மருத்துவம், சட்டம் தவிர அனைத்து துறைகளையும் ஒழுங்குபடுத்தும்.
2. தேசிய அங்கீகாரக்குழு உயர்கல்வித் தரத்தை உறுதி செய்வதற்கான அங்கீகார அமைப்பாகச் செயல்படும்.
3. பொதுக்கல்வி கவுன்சில் கற்றலின் விளைவுகள், தரங்களை வகுக்கும்.
4. உயர்கல்வி மானியக்குழு நிதியளிப்பது தொடர்பான முடிவுகளைக் கையாளும். நிதிக் கட்டுப்பாடு ஒழுங்கு முறை ஆணையத்திடம் இல்லாமல் ஒன்றிய அரசு வசமே இருக்கும்.
இதுபோன்ற உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கும் யோசனை ஒன்றிய அரசிற்குப் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. 2018ஆம் ஆண்டில் அறிமுகப்படுத் தப்பட்ட இந்த HECI(Higher Education Council of India)முந்தைய வரைவு, ஒரே அமைப்பிடம் அதிகாரக் குவிப்பு, எதேச்சதிகாரத்திற்கு இடமளிக்கும் என்பதால் இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததால் இது கைவிடப்பட்டது. ஆனாலும் புதிய தேசிய கல்விக்கொள்கை 2020இன் திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் தொழில்நுட்பம், ஆசிரியர் கல்வி மேற்பார்வை உட்பட விரிவான செயல்திட்டத்துடன் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவிற்கு டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (DTF) கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மசோதா சட்டமானால் உயர்கல்வி, கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தையும், நிறுவனங்களின் இயக்கங்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறுகின்றனர். இந்த மசோதாவின் எதிர்மறையான விளைவுகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து புரியவைக்க ஒரு குழுவை டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதாவைச் சட்டமாக நிறைவேற்றுவதற்கு முன்பு விரிவான ஆய்வுகள் பொது விவாதங்களைச் செய்யவேண்டும் என்று இக்குழு வலியுறுத்துகிறது.
2018ஆம் ஆண்டு இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது மாணவர்களின் உயர்கல்வி பெறும் உரிமையை இது பறிக்கும் என தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தி கடுமையான எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் தங்களின் திட்டங்களை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு வெவ்வேறு வடிவங்களில் தங்களின் திட்டங்களைச் செயல்படுத்த முனைகிறது. 2020 புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் கல்வியில் பல்வேறு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மறுத்தன. இதில் குறிப்பாக தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ்நாட்டிற்கு எனத் தனியாக மாநில கல்விக் கொள்கையை வகுக்க ஒரு குழு நியமிக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முயல்கிறது. இதனால் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய கல்வித் தொகைகளைத் தராமல் வெளிப்படையாக புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தாமல் நிதியைத் தரமாட்டோம் என்று மிரட்டுகிறது. நீதிமன்றத்தில் இந்த நிதியைப் பெற வழக்குத் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்கவும், கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் 1956இல் நாடாளுமன்றச் சட்டத்தின்படி, பல்கலைக்கழக மானியக் குழு( UGC) உருவாக்கப்பட்டது. புதிய பல்கலைக்கழகங்களை, உயர்கல்வி நிறுவனங்களை எந்த மாநிலத்தில் தொடங்குவதற்கும் 60% நிதியுதவியை க்எஇயே செய்யும். ஒவ்வொரு ஆண்டும் அந்த நிறுவனங்களின் தரத்தை ஆய்வு செய்து நிதியுதவியும் செய்கிறது.
பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கும் இந்த நிதியுதவி கிடைக்கும். கல்வியாளர்களை அதிகப்படி யாகக் கொண்ட UGC, உயர்கல்வி நிறுவனங்களை நேரடியாக ஆய்வுகள் மூலம் மதிப்பீடு செய்து தரத்தை உறுதிப்படுத்தும் கடமை யும், பொறுப்பும் கொண்ட தன்னாட்சி பெற்ற அமைப்பே UGC நிறுவனமாகும். இதனால் அரசுப் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தரமான கல்வியைக் கொடுத்தன.
கல்வியில் தனியார்மயத்தைப் புகுத்தி வியாபாரமாக்கப்பட்ட பின்பு, கார்ப்பரேட் கல்வி அதிபர்கள் UGC அமைப்பை இடையூறாகப் பார்க்கிறார்கள். பாஜகவின் தொடக்க ஆட்சிக் காலத்திலேயே UGCயைக் கலைத்து விட முயன்றார்கள். 2000ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், உயர்கல்வி சீர்திருத்தத்திற்காக கார்ப்பரேட் முதலாளிகளான பிர்லா, அம்பானி தலைமையில் குழு அமைத்தார்கள். அந்தக் குழு உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC நிதி வழங்கக் கூடாது. கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியோடு அந்தப் பல்கலைக்கழகங்களே நிதிகளைத் திரட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறி UGCயைக் கலைக்க முயற்சித்தார்கள். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் 2015 ஆம் ஆண்டில் முன்னாள் UGC தலைவர் அரி கவுதம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, UGCயைக் கலைத்துவிட வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிக்கை கொடுத் தது. அதன் அடிப்படையில்தான் இன்றைய பாஜக அரசு, UGCயைக் கலைத்துவிட்டு புதிய அமைப்பை நிறுவ முயல்கிறது.
தரத்தை உயர்த்தவே உயர்கல்வி ஆணையம் கொண்டு வரப்படுவதாக ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜவ்டேகர் கூறினார். இதுபோன்ற காரணங்களைக் கூறிக் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வின் தரமும், நடைமுறைகளும் இன்றைக்கு எப்படி இருக்கிறது என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதுபோன்று முழு அதிகாரங்களையும் கொண்ட அமைப்புக்கள் மூலமாக மாநில அரசுகளின் கல்வியின் மீதான முழு உரிமைகளையும் பறிப்பதற்கு வழிவகுக்கும்.
இதுபோன்று ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில், உயர்கல்வி நிறுவனங்களை ஒரே அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தால், அதனை மிக எளிதாக கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் வழங்கி தனியார்மயமாக்கலை எளிதில் செய்ய முடியும் என்று கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக் கின்றனர். உயர்கல்வி ஆணையத்தின் 12 உறுப்பினர்களில் 8 பேர் ஒன்றிய அரசின் உயர் அதிகாரிகள் ஆவர். இதன் தலைவர் அதிகாரிகளால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் வெளிநாடு வாழ் இந்தியராகவும் இருக்கலாம். நாடு முழுவதும் உள்ள எந்த உயர் கல்வி நிறுவனத்தையும் மூடும் அதிகாரம் ஆணையத்திற்கு உண்டு.
அரசின் செலவுகளைக் குறைப்பதாகக் கூறி அரசின் உயர்கல்வி நிலையங்களை எளிதாக மூடி விடுவார்கள். இது உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கல்வியை ஒரு வணிகமயமான சந்தையாக மாற்ற வழிவகுக்கும். இந்தச் சட்டத்தின் மூலம் பல நூறு பல்கலைக்கழகங்களும் 40,000க்கு மேற்பட்ட கல்லூரிகளும், IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களும் நிதிகள் வழங்கப்படாமல், நிறுவனங்களே நிதியைத் திரட்டிக் கொள்ளும் நிலையை இந்தச் சட்டம் உருவாக்கும். அதன் மூலம் இன்றைக்கு மிகக் குறைந்த கட்டணங்களை வசூலிக்கும் அரசின் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் நிதித் தேவையைப் பூர்த்தி செய்ய கார்ப்பரேட் முதலாளிகளை நாடவேண்டிய சூழலும் அவசியமும் ஏற்படும். அப்போது நாளடைவில் கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளில் உயர்கல்வி நிறுவனங்களின் பிடிகள் சென்று விடும்.
அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இப்போது குறைவாக உள்ள கட்டணங்களில் மிகப்பெரிய மாறுதல்கள் உருவாகும். அப்போது ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவுகள் பொய்த்துப் போகும். இன்றைக்கு ஓரளவிற்கு உயர் கல்வியை நோக்கி எளிய மக்கள் நகரும் சமயத்தில் இதுபோன்ற தனியார் கல்வி மையங்கள் அவர்களின் இடைநிற்றலை (Dropouts) அதிகப்படுத்தி உயர்கல்வியை மீண்டும் வசதியான, குறிப்பிட்ட சமூக மக்களுக்கானதாக மாற்றிவிடும். இன்னும் வேலையே தொடங்கப்படாத அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு மேன்மை மிகு பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்கி 5000 கோடி ரூபாய் நிதியையும் ஒன்றிய பாஜக அரசு வழங்கி இருக்கிறது.
தொழில்நுட்பக் கல்வி பயிலும் SC, ST மாணவர்களுக்கான உதவித் தொகைகள் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகைகள்(Scholarships) நிறுத்தப்பட்டு விட்டது. அரசு கலைக்கல்லூரி மாண வர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகைகள் குறைக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் எல்லாம் உயர்கல்வி பயிலும் ஏழை, எளிய மாணவர்களை உயர்கல்வி படிக்க மிகவும் போராடும் சூழலை உருவாக்கும். இது உயர்கல்வியை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து சிறிது சிறிதாக விலக்கி வைக்கும் உத்தி ஆகும்.
ஒருபக்கம் கார்ப்பரேட்களின் கைகளுக்கு உயர்கல்வி மாறும் சூழல் உருவாக்கப்படுகிறது. மற்றொரு புறம் தரத்தின் பெயரால் மேட்டுக்குடி மக்களின் சிறு பிரிவினர் இதனை எளிதாக அடைய முடியும். ஏழை, எளிய, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்கள் உயர்கல்வி பெற முடியாத சூழலை சட்டப்படி நிறைவேற்றும் சூழலை இது எளிதாக உருவாக்குகிறது.
இதைப்பற்றிய விழிப்பு உணர்வுகளை மாணவர்களிடத்தில் ஏற்படுத்தி இதுபோன்ற மறைமுகமாக நிறைவேற்றப்பட்டு எளிய மக்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் நிலையைக் கவனப்படுத்தி, எதிர்க்க வேண்டும். இட ஒதுக்கீடுகள் வழங்கி வரும் பயன்களை இதுபோன்ற சட்டங்கள் இல்லாமலாக்கிவிடும். இட ஒதுக்கீடுகள் மூலம் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, சிறுபான்மை மக்கள் பெற்று வந்த உயர்கல்வி சலுகைகள் இந்தச் சட்டங்கள் மூலம் எளிதாகப் பறிக்கப்பட்டு விடும். மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதனைப் புரிந்து கொண்டு போராட்டங்கள் மூலம் இதுபோன்ற சட்டங்கள் நிறைவேறுவதைத் தடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் வழிகாட்டலாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கிறது.