மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அறிஞர்களுக்கோர் அடையாளப் புருஷர் டாக்டர் முஹம்மத் ஹமீதுல்லாஹ்
அஷ்ஷெய்க் A.E. அகார் முஹம்மது, ஜனவரி 1-15, 2026



வாழ்க்கைப் பாடங்கள் 86



டாக்டர் முஹம்மத் ஹமீதுல்லாஹ் அவர்கள் 1908ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் குறைஷ் வம்சத்துடன் தொடர்புடையது. இவர் உஸ்மானியா பல்கலைக்கழகம், ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகம், பிரான்சின் சோர்போன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர் கல்வி பயின்றார்.

1934ஆம் ஆண்டு பிரான்சின் சோர்போன் பல்கலைக்கழகத்தில், ‘இஸ்லாமிய ராஜதந்திரம்: நபி(ஸல்) அவர்கள் காலம் முதல் குலபா ராஷிதூன் காலம் வரை’ என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆய்வு நூல் உலக அளவில் புகழ்பெற்றது.

டாக்டர் ஹமீதுல்லாஹ் பன்மொழிப் புலமை கொண்ட ஓர் அரிதான ஆளுமை. 22 மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் இறுதியாகக் கற்றுக்கொண்ட மொழி தாய்(கூடச்டி). அப்போது அவருக்கு வயது 84. இஸ்லாமியத் தத்துவம், வரலாறு, சட்டம், சீறா உள்ளிட்ட பல துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களையும், ஆயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

தொடக்ககால ஹதீஸ் கையெழுத்துப் பிரதிகளைக் கண்டுபிடித்து, ஹதீஸ்களின் உண்மைத் தன்மை குறித்த தவறான கருத்துகளைத் தகர்த்ததில் டாக்டர் ஹமீதுல்லாஹ் முக்கியப் பங்கு வகித்தார். நபி(ஸல்) அவர்கள் காலம் முதலே ஹதீஸ்கள் எழுதப்பட்டும் தொகுக்கப்பட்டும் வந்துள்ளன என்பதை கையெழுத்து ஆவணங்களுடன் நிரூபித்த பெருமை அவருக்கே உரியது. டாக்டர் ஹமீதுல்லாஹ் தொகுத்த ஹம்மாம் இப்னு முனப்பிஹ் எழுதிய ஹதீஸ்களின் எழுத்துப்பதிவு ஸஹீபா இன்று கிடைக்கும் மிகப் பழமையான ஹதீஸ் ஆவணமாகக் கருதப்படுகிறது. இந்த வகையில், அண்மைக்கால வரலாற்றில் சுன்னாவுக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்தவராக ஹமீதுல்லாஹ் மதிக்கப் படுகிறார்.

இஸ்லாமியச் சட்டம், சர்வதேசச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவராகவும் அவர் விளங்கினார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி, நவீன இஸ்லாமியச் சிந்தனையில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். திருக்குர்ஆனை பிரெஞ்சு மொழிக்கு மொழி பெயர்த்து, மேற்கு உலகிற்கு இஸ்லாமியத் தூதை அறிமுகப்படுத்திய முன்னோடியாகவும் டாக்டர் ஹமீதுல்லாஹ் திகழ்ந்தார்.

பாகிஸ்தான் உருவான தொடக்க காலங்களில் அரசின் முக்கிய ஆலோசகராக இருந்து நாட்டின் அறிவுசார், அரசியல் அடித்தளத்தை அமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். அவரது படைப்புகள் உருது, பிரெஞ்சு, ஆங்கிலம், துருக்கி எனப் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே ஒரு பாலமாக அவர் இருந்தார் எனக் குறிப்பிட்டால் அது மிகையாகாது.

டாக்டர் ஹமீதுல்லாஹ் திருமணம் செய்து கொள்ளவில்லை.  அவர்  அறிவையே மணமுடித்திருந்தார் எனக் குறிப்பிடலாம். பல ஆய்வாளர்களைக் கொண்ட ஒரு குழுவால் கூடச் செய்ய முடியாத பணிகளை ஒரே ஒரு மனிதர் செய்துவிட்டுச் சென்றிருக்கின்றார். அவரது பணிவு, எளிமை, அறிவுத் தாகம், அர்ப் பணிப்பு இன்றுவரை உலகெங்கிலும் உள்ள அறிஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன. இஸ்லாமிய அறிவை உலகளவில் எளிதாக அணுகக் கூடியதாக மாற்றியதில் அவரது பங்களிப்பு  அளப்பரியது.  40,000  பேர் அவரது முயற்சியால் இஸ்லாத்தைத் தழுவினர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

1994ஆம் ஆண்டு மன்னர் ஃபைசல் பரிசு வழங்கப்பட்டபோது அவர் குறிப்பிட்ட விஷயம் மெய்சிலிர்க்க வைக்கின்றது: ‘நான் எழுதியதெல்லாம்  அல்லாஹ்வுக்காக!  தயவுசெய்து எனது ‘இக்லாஸை’ கெடுத்து விடாதீர்கள்’ பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா உல் ஹக் வழங்கிய உயர்ந்த விருதை அவர் தானமாகக் கொடுத்துவிட்டு பின்வருமாறு கூறினார்: ‘இப்பொழுதே இதையெல்லாம் நான் எடுத்துக் கொண்டால் நிரந்தரமான மறுமைக்கு என்ன வைத்திருக்கிறேன்?’

பிரான்ஸ் அரசு குடியுரிமை வழங்க நினைத்தபோது, அவர் சிரித்துக் கொண்டு சொன்னார்: ‘என் ஹைதராபாத் அடையாளம் எனக்குப் போதுமானது’

டாக்டர் ஹமீதுல்லாஹ் தனது அனைத்துப் பணிகளையும் அடக்கமாக, எத்தகைய ஆரவாரமும் இல்லாமல் செய்து வந்தார் என்பது  இங்கு  குறிப்பிடத்தக்கதாகும். அவரிடம் காணப்பட்ட சிறப்புப் பண்பு எளிமையும் பணிவும் அடக்கமும் ஆகும். பிரான்ஸ் சோபோர்ன் பல்கலைக் கழகத்தில் இருந்த காலத்தில் மாணவர்களுடன் சேர்ந்து உணவுத் தட்டுக்களைக் கழுவுவார் என்ற செய்தி அவரது உயர் பண்புகளுக்கு ஓர் உதாரணமாகும்.

டாக்டர்  ஹமீதுல்லாஹ்  2002ஆம் ஆண்டு, தனது 94 வயதில் இறைவனிடம் மீண்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.(நாம் இறைவனிடமிருந்தே வந்தோம். அவனிடமே மீளக் கூடியவர்களாய் இருக்கின்றோம்)

டாக்டர்  ஹமீதுல்லாஹ்  அவர்களின் வாழ்வும் பணிகளும் நமக்குப் போதிக்கும் பாடங்கள் பல:

* இக்லாஸ் உளத்தூய்மையுடன் கூடிய பணிகள் அதிசயங்களை நிகழ்த்தக் கூடியவை.
* கற்பதற்கு வயது ஒரு தடையல்ல. அவர் தாய்லாந்து மொழியைக் கற்கின்ற போது அவருக்கு வயது 84.
* இறை மார்க்கப் பணி ஆரவாரமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல; அமைதியாக ஆயிரம் பணிகளைச் செய்துவிட்டுப் போகலாம்.
* ‘பிறந்தோரெல்லாம் வரலாறு ஆன தில்லை; வரலாறு ஆன எவரும் தனக்காக வாழ்ந்ததில்லை’ என்ற கூற்றுக்கு இலக் கணமாக, நிதர்சனமான உதாரணமாக
டாக்டர் ஹமீதுல்லாஹ் அவர்களைக் குறிப்பிடலாம்.

வல்ல ரஹ்மான் அன்னாருடைய பணி களை ஏற்று அவருக்கு உயர் சுவன பதவியை வழங்கியருள்வானாக! அவரது அடிச்சுவட்டில் பயணிக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்