மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

வலைதள நட்புகள்
அபூ ஹம்னா, ஜனவரி 1-15, 2026


இன்று மக்கள் மத்தியில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் மிகைத்துக் காணப்படுகிறது. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும்  சமூக  வலைதளங்களைக் கையாள்கிறார்கள். பிஞ்சுக் குழந்தைகள் கூட அலைப்பேசியில் வீடியோக்கள் பார்த்துதான் சாப்பிடும் நிலை இருக்கிறது.

மனிதர்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச் னைகளுக்கும் குர்ஆனும் ஹதீஸும் வழி காட்டுகிறது. அந்த வகையில் சமூக வலைதளங்கள்  குறித்தும்  குர்ஆன்  ஹதீஸிலிருந்து நமக்கு வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன.

இன்று  முகநூல்,  இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மனிதர்களை அடிமையாக்கி வைத்திருக்கிறது.  தினமும்  கண்ணாடியில்  தனது முகத்தைப் பார்க்காதவர்கள்கூட எழுந்ததும் முகநூல் பார்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

பின் தொடர்பவர்கள்

சமூக வலைதளங்களில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் பின் தொடர்பவர்கள் (Followers). முகநூலில் முகநூல் நண்பர்கள் இருக்கிறார்கள்.  முகநூல்  மட்டுமில்லாமல் இன்ஸ்டாக்ராமிலும்  ட்விட்டரிலும்  நாம் பின்தொடரும்(Follow)  நபர்களும்  நமக்கு நண்பர்கள்  என்ற  தரத்தைத்தான்  பெறுவார்கள்.

இன்றைய காலகட்டத்தில் நேரடி நண்பர்களிடத்தில் நம்முடைய நேரங்களைச் செல விடுவதைவிட சமூக வலைதள நண்பர்களிடத்தில்தான் நாம் அதிமாகச் செலவிடுகின்றோம். ஆகவே இந்த நண்பர்களைத் தேர்வு செய்வதில் நாம் இஸ்லாமிய வழிகாட்டுதல்களைப் பேண வேண்டும்.

நட்பைத் தேர்வு செய்

நண்பர்களில்  நல்லவர்களும்  உண்டு தீயவர்களும் உண்டு. நபிகள் நாயகம்(ஸல்)  அவர்கள்  நண்பர்களை  இரண்டாகப் பிரிக்கிறார்கள். ஒருவர் நல்ல நண்பர். இன்னொருவர் கெட்ட நண்பர். இதை ஓர் அழகிய உதாரணம் மூலம் நமக்கு நபி(ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நல்ல  நண்பனுக்கும்  தீய  நண்பனுக்கும் உதாரணம்  கஸ்தூரி  வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து  உமக்கு  ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம்: அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம். கொல்லனின் உலை உம்முடைய வீட்டையோ உம்முடைய ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!’ (அறிவிப்பாளர்: அபூ மூஸா(ரலி) நூல்: ஸஹீஹ் புகாரி 2101)

நல்ல நண்பனைப் பெற்றுக்கொள்வதினால் நமக்கு என்ன பயன்கள் கிடைக்கும் என்பதையும் கெட்ட நண்பனின் மூலமாக நமக்கு எப்படிப்பட்ட ஆபத்து நேரும் என்பøதயும் அழகான உதாரணம் மூல மாக நபிகள் நாயகம்(ஸல்) சுட்டிக்காட்டி யிருக்கிறார்கள். நாம் நம்முடையை நண்பர்களைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நல்லவர்களை மட்டுமே நம்முடைய நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

முகநூலில் எனக்கு 5000 நண்பர்கள் இருக்கிறார்கள். 4000 பாலோவர்ஸ் இருக்கிறார்கள் என்று பெருமையாகப் பேசுகின்றோம். நாமும் முகநூலில் பலருக்கும் நட்பு அழைப்பை (ப்ரண்ட் ரிக்யூஸ்ட்) விடுக்கிறோம். பலருடைய நட்பு அழைப்பை நாம் ஏற்றுக்கொண்டு அவருடைய நண்பர்களாக ஆகிறோம்.

நாம் யாரை நண்பர்களாக ஏற்றுக்கொண்டிருக்கிறாமோ அவர்கள் ஏதேனும் பதிவிட்டாலோ, லைக் அல்லது கமெண்ட் செய்தாலோ அந்த விஷயங்கள் நம்முடைய பார்வைக்கு வரும். அதை நாமும் வாசிக்கக்கூடிய நிலைமை ஏற்படலாம்.

அந்த வகையில் பார்த்தால் நம்முடைய நட்பு வட்டாரங்களில் நல்லவர்கள் இருந்தால் அவர்கள் நல்ல விஷயங்களைப் பதிவிடுவார்கள். நல்ல விஷயங்களுக்கு லைக் செய்வார்கள். பயனுள்ள நல்ல பின்னூட்டம் இடுவார்கள். இந்த நல்ல விஷயங்களை நாமும் பெற்றவர்களாக இருப்போம். இது நபிகள் நாயகம்(ஸல்) அந்த உதாரணத்தில் கூறிய கஸ்தூரிக்கு ஒப்பாகும்.

அதேபோல் கெட்டவர்களை நாம் நண்பர்களாக ஆக்கியிருந்தால் அவர்கள் பதிவிடும் கெட்ட பதிவையோ, அவர்கள் லைக் போடும் கெட்ட விஷயங்களையோ நாம் பார்க்க நேரிடும். இது நம்மிடத்திலும் தீமையை  ஏற்படுத்தக்  காரணமாக அமைந்துவிடும். சமூக ஊடகத்திலும் நாம் எப்படிப்பட்ட  நண்பர்களை  ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஒவ்வொரு மனிதனும் அவன் நண்பனின் மார்க்கத்திலேயே இருக்கின்றான். எனவே யாரை நண்பராக்குகின்றோம்  என்பதை  அவர் கவனிக்கட்டும்’ என்று கூறினார்கள். (நூல் : அபூதாவூத்)

எனவே நாம் நம்முடைய வலைதளப் பக்கத்தில் நல்ல நண்பர்களைத்தான் வைத்திருக்கிறோமா? என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். கெட்ட நண்பர்கள் இடம் பெற்றிருந்தால் அவர்களை நட்புப் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்