முஸ்லிம்கள் கடமையான தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டுள்ளான். குறிப்பாக தஹஜ்ஜுத் தொழுகை குறித்து திருமறைக் குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
‘இரவில் தஹஜ்ஜுத் தொழுகையைக் கடைப்பிடியும். இது நீர் செய்யவேண்டிய அதிகப்படியான தொழுகையாகும். உம் இறைவன் உம்மை ‘மகாமே மஹ்மூத்’ எனும் அந்தஸ்துக்கு உயர்த்தலாம்’ (திருக்குர்ஆன் 17:79)
கடமையான தொழுகைக்குப் பிறகு ஓர் உபரியான தொழுகையை தொழுங்கள் என்று இறைவன் கட்டளையிட்டதிலிருந்து இந்த இரவு நேரத் தொழுகையான தஹஜ்ஜுத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மக்களே! நீங்கள் ஸலாமைப் பரப்புங்கள். உணவளியுங்கள். உறவுகளைப் பேணுங்கள். மக்கள் அனைவரும் தூங்கும்போது இரவில் நின்று வணங்குங்கள். அவ்வாறெனில் நிம்மதியாக சுவனத்தில் நுழையலாம்’ (ஹாகிம், இப்னுமாஜா, திர்மிதி).
நிம்மதியாக சுவனம் செல்வதற்கு இரவுத் தொழுகையும் ஒரு காரணமாக இருக்கின்றது. நாம் இரவில் நின்று வணங்குவதும், பிரார்த்திப்பதும் நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்களுக்குத் தெரியாது. இறைவனுடைய பொருத்தம் நமக்குக் கிடைக்க வேண்டும் என்றால் தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழ வேண்டும்.
இரவு நேரங்களில் நாம் தூக்கத்தில் மூழ்குகின்றோம். சில நேரங்களில் தூக்கத்தை உதறிவிட்டு பயணங்கள் மேற்கொள்கின்றோம். தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரவும் பகலுமாகப் படிக் கிறோம். இந்த உலக வெற்றிக்காக தூக்கத்தைத் துறந்து ஓடுகின்றோம் எனில் மறுமைக்காக நாம் செயல்பட வேண்டாமா?
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) கூறினார்கள்: ‘நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்குக் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறு வான்’ (முஸ்லிம்).
அல்லாஹ் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்குக் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான். அதாவது இந்நேரத்தில் அடியார்கள் தன்னிடம் பிரார்த்திக்குமாறு ஊக்கு விக்கின்றான். அவனை அழைத்தவருக்குப் பதிலளிக்கின்றான். தன்னிடம் தேவைகளைக் கேட்குமாறு வேண்டுகின்றான், கேட்பவருக்கு அவன் கொடுக்கின்றான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோருமாறு வேண்டுகின்றான். அவன் தனது அடியார்களை மன்னிக்கின்றான். இங்கு வேண்டுதல் என்பது ஊக்குவிப்பைக் குறிக்கின்றது. நம்மைப் படைத்த இறைவன் அவனுடைய கருணையை நம் மீது பொழிவதற்கு இறங்கி வரு கிறான். ஆனால் நாமோ தூங்கிக் கொண்டிருந்தால் அல்லாஹ்வுடைய கருணையை நாம் இழக்க நேரிடும்.
தஹஜ்ஜுத் தொழுபவர் களைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு சொல்லிக் காட்டுகின்றான்.
‘மேலும், அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் உயர்ந்து விடுகின்றன. அச்சத்துடனும், ஆவலுடனும் தங்கள் இறைவனை பிரார்த்திக்கின்றார்கள்! மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து செலவும் செய்கின்றார்கள்’ (திருக்குர்ஆன் 32:16).
இவர்களின் கூலியைக் குறித்து அல்லாஹ் இதற்கு அடுத்த வசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறான்: ‘அவர்களுடைய செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்’ (திருக்குர்ஆன் 32:17).
தஹஜ்ஜுத் என்பது மனிதனுடைய முகத்தை ஒளிமயமாக்கக்கூடிய ஒரு கருவியாக இருக்கிறது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரவின் இறுதிப் பகுதியில் எழுந்து தொழுவார்கள்’. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 376.
ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, முஹம்மத்(ஸல்) அவர்களே! நீங்கள் எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் ஒரு நாள் உங்களுக்கு மரணம் வந்தே தீரும், நீங்கள் என்ன செயல் செய்தாலும் அதன் பலன் தங்களுக்குக் கிடைத்தே தீரும், நீங்கள் யாரை நேசித்தாலும் இறுதியில் ஒரு நாள் அவரைப் பிரிய நேரிடும், அறிந்து கொள்ளுங்கள் முஃமினின் சிறப்பு தஹஜ்ஜுத் தொழுகையில் உள்ளது, முஃமினின் கண்ணியம் மக்களிடம் தேவையற்று இருப்பதில் உள்ளது என்று கூறிச் சென்றார்கள்.’ (நூல்: தப்ரானீ).
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தமது கால்கள் வீங்கும் அளவிற்கு நின்று இரவுத் தொழுகையைத் தொழுதுள்ளார்கள். அவர்களுடைய உம்மத்தான நாமும் இரவு வணக்கங்களில் அதிகமாக ஈடுபட வேண்டும். இதன் மூலம் சுவனத்தில் கண் குளிர்ச்சியை அடையக்கூடியவர்களாக நாம் திகழக் கூடும்.