மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயர்
ரியாஸ் மொய்தீன், நவம்பர் 16-30, 2025


அமெரிக்காவின் நியூயார்க் குயின்ஸ் நகரைச் சேர்ந்த 34 வயது மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜோஹ்ரான் மம்தானி ஜனநாயகக் கட்சி வேட்பாளராகக் களமிறங்கி நியூயார்க் நகரத்தின் 111ஆவது மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நியூயார்க்கின் முதல் முஸ்லிம், தெற்காசிய, நூற்றாண்டின் இளைய மேயர் எனும் முத்திரை பதித்துள்ளார்.

இந்தியப் பெற்றோருக்கு உகாண்டாவில் பிறந்த மம்தானி ஏழு வயதில் நியூயார்க்கிற்குக் குடிபெயர்ந்து 2018இல் அமெரிக்கக் குடிமகனானார்.

அவரது இந்த வெற்றி மிக எளிதானதாக இருக்கவில்லை. மாறாக அவரது நம்பிக்கை, கோட்பாடு அடையாளங்களால் இஸ்லாமிய வெறுப்புத் தாக்குதல்களையும், முற்போக்கான கருத்துகள் மீதான விமர்சனங்களையும் எதிர்கொண்ட மம்தானி ‘நான் இளையவன், நான் ஒரு முஸ்லிம், நான் ஒரு ஜனநாயக சோசலிஸ்ட், எல்லாவற்றிற்கும் மேலாக நான் இவை அனைத்திற்காகவும் மன்னிப்பு கேட்க மறுப்பவன்’ என்று கூறினார்.

‘போர்க் குற்றவாளியான நெதன்யாகு நியூயார்க் நகருக்குள் நுழைந்தால் கைது செய்வேன்’ எனப் பிரகடனப்படுத்தி இஸ்ரேலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை உரத்து முழங்கினார்.

மம்தானியை வீழ்த்தத் திகைப்பூட்டும் வகையில் பல செல்வந்தர்கள் மம்தானியை எதிர்க்கும் அரசியல் குழுக்கள் மூலம் சுமார் 22 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டதாக மின்ட் செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

இவை அனைத்தையுமே கடந்து இளைஞர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட வாக்காளர்களான ஏழை, நடுத்தர மக்களின் வளர்ச்சியை முதன்மை இலக்காகக் கொண்ட மம்தானி தேர்தல் வாக்குறுதிகளாக இலவசப் பேருந்துகள், மலிவு விலையில் பொருட்களைக் கொண்ட அரசால் நடத்தப்படும் மளிகைக் கடைகள், வீட்டு வாடகை உயர்வுகளைக் கண்காணித்தல் எனப் பல முக்கிய திட்டங்களை அறிவித்திருந்தார்.

இந்தத் தேர்தல் வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்ட மக்கள் மம்தானியை முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா ஆகியோரைத் தோற்கடித்து 50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற வைத்தனர்.

ஒரு முஸ்லிம் நியூயார்க்கின் முதல் மேயராகி இருப்பது உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்