மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை பெண்ணுலகம்

கல்வியை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த மரியும்மா
குளச்சல் ஆசிம், 16 - 31 August 2022


கேரள முஸ்லிம் சமூகத்தில் மலபார் பிரதேசத்தில் ஆங்கிலம் பயின்ற முதல் முஸ்லிம் பெண்மணி மரியும்மா. கண்ணூர் மாவட்டத்தில் பிரபலமான "தலச்சேரி மாளியக்கல் தறவாடு' குடும்பத்தைச் சேர்ந்தவர். அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் பெண்கள் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்க முடியும் என்றிருந்த கட்டுப்பாடுகளைத் தாண்டி, மார்க்க அறிஞரான இவரது தந்தை ஓ.வி.அப்துல்லா தம் மகள் மரியும்மாவை சமூக எதிர்ப்புகளைப் புறந்தள்ளி ஆங்கிலம் உயர்நிலை வகுப்பு படிக்க வைத்தார்.

தலச்சேரி சேக்ரட் ஹார்ட் கான்வென்டில் மரியும்மா ஆறாம் வகுப்பில் சேர்ந்த 1938 முதல் 1943ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடிப்பது வரை இவர் ஒருவர் மட்டுமே முஸ்லிம் மாணவி. வகுப்பு நேரத்தில் லுஹர், அஸர் தொழுகைக்கு கான்வென்டில் ஓர் அறை இவருக்காக ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளிப் படிப்பு முடிந்ததும் திருமண வாழ்க்கையைத் தொடங்கிய மரியும்மா "முஸ்லிம் மகிளா சமாஜம்' எனும் அமைப்பைத் தொடங்கி மலபார் பகுதியில் முஸ்லிம் பெண்களின் கல்வி உரிமைக்காகப் பாடுபட்டார்.

முஸ்லிம் பெண்களின் கல்விக்காக ஒலித்த முதல் குரல் இவருடையது. அத்துடன் அந்தப் பகுதியில் அறிவொளி இயக்கத்தைத் தொடங்கி வீடுகளில் இருக்கும் பெண்கள் மத்தியில் கல்வி ஆர்வத்தைத் தூண்டியதுடன் வரதட்சணைக்கு எதிராகவும் இயக்கம் நடத்தினார் மரியும்மா. மலபார் பகுதி பெண்களிடம் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டியதுடன் 1943ஆம் ஆண்டு தொடங்கி தனது 98ஆவது வயதில் 06.08.22ஆம் நாள் மரணிப்பது வரை "தி ஹிந்து' ஆங்கில நாளிதழைத் தினமும் வாசித்து வந்தார்.

இதன் காரணமாக மக்கள் இவரை "இங்கிலீஷ் மரியும்மா' என்று அழைத்து மகிழ்ந்துள்ளனர். கல்விக்காகப் போராடி வாசிப்பையே வாழ்க்கையாகக் கொண்ட மரியும்மாவை இறைவன் பொருந்திக் கொள்வானாக! அவர் மறைந்தாலும் அவரது பணிகள் என்றும் மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்