பாரிஸைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையக் கூட்டமைப்பு வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண் முக்கியப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் பொறியியல் விஞ்ஞானியான மிஷால் அல் ஷமீம்ரி அந்த அமைப்பின் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அரபு கூட்டமைப்பு நாடுகளிலிருந்து விண்வெளி ஆய்வு மைய உயர் பதவிக்கு வரும் முதல் நபர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
உலகம் முழுவதும் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள 71 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகளைக் கொண்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையக் கூட்டமைப்பிலுள்ள ஒரே ஒரு முஸ்லிம் பெண் பிரதிநிதியும் இவர்தான்.
சவூதி அரேபியா விண்வெளி ஆய்வு மையத்தின் சிறப்பு அதிகாரியாக தற்போது பதவி வகித்து வரும் மிஷால் அல் ஷமீம்ரி சர்வதேச அளவிலான பொறுப்புக்கு வருவதன் மூலம் "விஷன் 2030' எனும் திட்டத்தின் கீழ் சவூதி அரேபியா மேற்கொண்டு வரும் வான்வழிப் பாதுகாப்பு மேம்படுத்தல், விண் வெளிக்கு முதல் பெண் விஞ்ஞானியை அனுப்பும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.