மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை இஸ்லாம்

சாதனை மாணவி ஃபாத்திமா அன்ஷி
குளச்சல் ஆசிம், 16-31 டிசம்பர் 2022


ஒன்றிய அரசின் சமூக நீதித்துறை ஆண்டுதோறும் டிசம்பர் 4ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினத்தில் வழங்கும் சிறப்பு விருதின் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இடம்பிடித்துள்ளார் பன்முகத் திறமையாளரான ஃபாத்திமா அன்ஷி. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து 18 வயதுக்குக் கீழுள்ள மாற்றுத்திறனாளி பிரிவிற்கான ஷிரேஷ்ட திவ்ய பாலிகா விருதை ஃபாத்திமா அன்ஷி பெற்றுள்ளார்.

மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா அருகிலுள்ள மேலாட்டூர் எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்த அப்துல் பாரி சல்மா தம்பதியின் ஒரே மகளான ஃபாத்திமா அன்ஷி பிறவியிலேயே நூறு விழுக்காடு பார்வைக் குறைபாடு உடையவர்.

சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே தங்கள் மகளிடம் இசை ஆர்வம் இருப்பதைக் கண்டுபிடித்து பெற்றோர்கள் ஊக்குவிக்க, தற்போது ஃபாத்திமா அன்ஷி மலபார் முஸ்லிம்களின் பிரபலமான கலை வடிவங்களில் ஒன்றான மாப்பிள்ளை பாடல்களை மெட்டமைத்துப் பாடுவதில் புலமை பெற்று விளங்குகிறார். 2018ஆம் ஆண்டு கேரள அரசின் உஜ்வாலா பால்ய விருதைப் பெற்றுள்ள இவர் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளில் 2015 முதல் 2022 வரை தொடர்ந்து முதல் பரிசு பெற்று சாதனையும் படைத்துள்ளார்.

பத்து, பதினொன்றாம் வகுப்பு இறுதித் தேர்வுகளில் கல்வித்துறை சிறப்பு அனுமதி பெற்று கணினி உதவியுடன் தேர்வெழுதி அனைத்துப் பாடங்களிலும் ஏ+ மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஃபாத்திமா அன்ஷி இப்போது +2 படித்துக் கொண்டிருக்கின்றார்.

கணினி தொழில்நுட்ப உதவியுடன் சொந்தமாக இசை ஆல்பங்களைத் தயாரிக்கும் ஃபாத்திமா அன்ஷி மலையாளம், ஆங்கிலம், ஃபார்சி, உருது, சைனீஸ், மலாய், ஜெர்மன் உட்பட ஏழு மொழிகளில் புலமை பெற்று விளங்குகிறார்.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் The Project Vision எனும் கண் தான விழிப்பு உணர்வு அமைப்பின் கேரள மாநில நல்லெண்ணத் தூதராக ஃபாத்திமா செயல்பட்டு வருகிறார். சிவில் சர்வீஸ் தேர்வெழுதி அயல்நாட்டு தூதுவராகப் பணியில் சேர வேண்டும் என்பது ஃபாத்திமா அன்ஷியின் விருப்பம்.

எண்ணங்கள் ஈடேறட்டும்..!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்