
Dr.J.முஹையுதீன் MBBS MS MCh
அரேபியத் தீபகற்பத்தின் தென் மேற்கு முனையில் அமைந்திருக்கிறது ஏமன். செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல் மந்தப் நீரிணையை ஒட்டியிருப்பதால் உலகின் முக்கியமான கடல்வழிப் போக்குவரத்துப் பாதை ஒன்றின் அருகே இந்த நாடு அமைந்துள்ளது. ஆனால் இந்தப் புவியியல் அமைப்பு அந்த நாட்டை ஒரு பெரும் மனிதாபிமான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. உள்நாட்டு அரசியல் முரண் பாடுகள், ஆயுத மோதல்கள், உலக வல்லரசு களின் தலையீடுகள் ஆகியவை ஒன்றோ டொன்று பின்னிப் பிணைந்து பல ஆண்டு களாகச் சீரழித்துக் கொண்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் (UN) தகவல்படி ஏமனில் நடக்கும் போரினால் 1,12,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்; சுமார் 3,000 மக்கள் போருக்குப் பயந்து பக்கத்து நாடான ‘ஜிபூட்டி'க்குத் (Dji bouti) தப்பி ஓடியுள்ளனர். சர்வதேசப் புலம் பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) கணக்கீட்டின் படி அந்நாட்டின் மக்கள் தொகையில் பெரும் பகுதியான சுமார் 2.2 கோடி (22 மில்லியன்) ஏமன் மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்து போன்ற அவசர மனிதாபிமான உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.
ஏமன் போரை வெறுமனே சவூதி அரேபியாவுக்கும் ஹூதிகளுக்கும் இடையிலான போர் என்று கூறிவிட முடியாது. அதேபோல் ஸன்னி ஷியா மோதல் என்ற ஒரே கோணத் திலும் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. ஏமனுக்குள் நீண்டகாலமாக இருந்து வந்த அரசியல், பொருளாதார, பிரச் னைகள், ஹூதி இயக்கத்தின் எழுச்சி, அரசின் பலவீனம், தெற்கு ஏமனின் அரசியல் சூழல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் போன்ற பிராந்திய சக்திகளின் தலை யீடுகள், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கொள்கைகள் எனப் பல அடுக்குகள் இதில் உள்ளன. இந்தப் பெரிய அரசியல் சதுரங்கத்தில் அதிக விலையைச் செலுத்தியவர்கள் சாதாரண ஏமன் மக்கள்தான்.
எங்கே தொடங்கியது இந்த நெருக்கடி?
இன்றையப் போரை அலசும் ஊடகங்களும், அறிவுஜீவுகளும் இதனை 10 ஆண்டுகள் நடக்கும் போராக மட்டுமே பார்க்கின்றனர். ஆனால் ஹூதிகள் வருகைக்கு முன்னரே இது தொடங்கி விட்டதை மறைத்து விடுகின்றனர். 1990க்கு முன்னர் ஏமன் வடக்கு தெற்கு என இரண்டாகப் பிரிந்து இருந்தது. வடக்கு ஏமனின் அரசியல் வரலாற்றையே மாற்றிய முக்கிய நிகழ்வுகளில் ஒன்று 1962 முதல் 1970 வரை நடைபெற்ற வடக்கு ஏமன் உள்நாட்டுப் போர் ஆகும். 1962 வரை இமாம் அஹ்மத் பின் யஹ்யா என்ற ஜைதி ஷியா தலைமையில் மன்னராட்சி நடந்தது. அவர் 1962 செப்டம்பர் 19 அன்று மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் இமாம் முஹம்மது அல் பத்ர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
ஆனால் அவரது ஆட்சி தொடங்கி ஒரு வாரத்திற்குள்ளேயே மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது. 1962 செப்டம்பர் 26 அன்று அப்துல்லாஹ் அல் ஸல்லால் என்ற இராணுவ அதிகாரி தலைமையில் இராணுவப் புரட்சி நடைபெற்றது. தலைநகர் சன்ஆவில் இருந்த அரச மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களைப் புரட்சிப் படையினர் கைப்பற்றி னர். மன்னராட்சி அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு ஏமன் அரபுக் குடியரசு உருவாக்கப்பட்டது. இராணுவ அதிகாரியான அப்துல்லாஹ் அல் ஸல்லால் அதன் தலைவரானார்.
இமாம் முஹம்மது அல் பத்ர் கொல்லப் பட்டுவிட்டதாக முதலில் கருதப்பட்டது. ஆனால் அவர் உயிருடன் தப்பி வடக்கு ஏமனின் மலைப்பகுதிகளுக்குச் சென்றார். அங்கிருந்த பழங்குடியினரின் ஆதரவைத் திரட்டி மீண்டும் ஆட்சியை நிறுவுவதற்கான போராட்டத்தைத் தொடங்கினார். இதுவே நீண்ட உள்நாட்டுப் போராக மாறியது. இந்தப் போரில் இரண்டு முக்கிய அணிகள் உருவாயின. இராணுவ அதிகாரியான அப்துல்லாஹ் அல் ஸல்லால் தலைமையில் உருவான படையினருக்கு எகிப்து பெருமளவில் உதவியது. எகிப்தின் அன்றைய அதிபர் கமால் அப்துல் நாசர் ஆயிரக்கணக்கான எகிப்திய வீரர்களை ஏமனுக்கு அனுப்பினார். ஆயுதங்கள், விமானப்படை உதவிகளும் வழங்கப்பட்டன.
மறுபுறம் ஜைதி ஷியாக்களின் மன்னராட் சிக்கு சவூதி அரேபியா முக்கிய ஆதரவை வழங்கியது. ஜோர்டானும் அவர்களுக்குஉதவியது. (இன்று ஏமனில் போராடும் ஹூதி போராளிகளும் ஜைதி ஷியா பிரிவைச் சார்ந்தவர்களே.! இன்றைய பிரச்னை ஸன்னி ஷியா மோதல் அல்ல என்பதற்கு இதுவே சாட்சி) பிரிட்டனும் மறைமுக உதவிகளை வழங்கியதாக வரலாற்றுப் பதிவுகள் குறிப் பிடுகின்றன. இதனால் ஏமனுக்குள் தொடங்கிய அரசியல் மோதல், மத்திய கிழக்கின் பல நாடுகள் சம்பந்தப்பட்ட பெரிய பிராந்தியப் போட்டியாக மாறியது.
மலைகள் நிறைந்த ஏமனின் நிலப்பரப்பில் போர் நடத்துவது எகிப்தியப் படைகளுக் குக் கடினமாக இருந்தது. பல ஆண்டுகள் போரிட்டும் எந்தத் தரப்பாலும் முழுமையான வெற்றியைப் பெற முடியவில்லை. 1967ஆம் ஆண்டு இஸ்ரேலுடனான ஆறு நாள்கள் போரில் எகிப்து பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதனால் ஏமனில் இருந்த தனது படைகளை எகிப்து படிப்படியாகத் திரும்பப் பெற்றது. அதே ஆண்டில் இராணுவ அதிகாரி யான அப்துல்லாஹ் அல் ஸல்லால் அதிகாரத் திலிருந்து நீக்கப்பட்டார்.
எகிப்தியப் படைகள் வெளியேறியதைப் பயன்படுத்தி இமாம் முஹம்மது அல்பத்ர் ஆதரவாளர்கள் தலைநகர் சன்ஆவை முற்றுகையிட்டனர். எனினும் குடியரசுப் படைகள் நகரத்தைத் தக்கவைத்துக் கொண் டன. 1968 பிப்ரவரியில் முற்றுகை முடிவுக்கு வந்தது. இறுதியில் 1970ஆம் ஆண்டு அரசியல் சமரசம் ஏற்பட்டது. சவூதி அரேபியாவும் ஏமன் அரபுக் குடியரசை அங்கீ கரித்தது. இமாம் முஹம்மது அல் பத்ர் ஆதர வாளர்கள் சிலர் புதிய குடியரசு அரசியல் அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இவ்வாறு எட்டு ஆண்டுகள் நீடித்த வடக்கு ஏமன் உள்நாட்டுப் போர் முடிவடைந்தது. பின்னர் வடக்கு ஏமன் தெற்கு ஏமனுடன் இணைந்து 1990ஆம் ஆண்டு இன்றைய ஒன்றுபட்ட ஏமன் குடியரசாக உருவானது.
யார் இந்த ஹூதிகள்?
ஏமனில் வாழும் ஜைதி ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் இந்த ஹூதிகள். இவர்கள்1990களில் ஏமனின் வடக்குப் பகுதியில் உள்ள சாதா(Saada) என்ற மலைப் பிரதேசத் தில் உருவானார்கள். நாட்டின் ஆட்சியில் தங்களுக்கும் சமமான அதிகாரம், பங்கு வேண்டும் என்பதே இவர்களின் தொடக்க காலக் கோரிக்கையாக இருந்தது. 2011ஆம் ஆண்டு அரபு நாடுகளில் அரபு வசந்தம்(அணூச்ஞ குணீணூடிணஞ்) என்ற பெரும் மக்கள் புரட்சி வெடித்த போது ஏமனில் சுமார் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த அலீ அப்துல்லாஹ் சலே (Ali Abdullah Saleh) தனது பதவியை விட்டு விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருக்குப் பின் அமைந்த புதிய அரசு மிகவும் பலவீனமாக இருந்ததால் அந்த அரசு மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியையும் கோபத்தையும் ஹூதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
வியக்கும் விதமாக, முன்பு தங்களை எதிர்த்த முன்னாள் அதிபர் சலேவுக்கு ஆதரவான இராணுவப் பிரிவுகளுடன் ஹூதிகள் கைகோர்த்தனர். இவர்களின் கூட்டுப் படை 2014 அக்டோபரில் செங்கடல் பகுதியில் உள்ள மிக முக்கியமான ஹோடைடா (Hodeidah) துறைமுக நகரத்தைக் கைப்பற்றியது. அடுத்த சில மாதங்களிலேயே அதாவது 2015 ஜனவரியில் தலைநகர் சனாவில் இருந்த அதிபர் மாளிகையையே ஹூதிகள் முற்றுகையிட்டுக் கைப்பற்றினர். இதனால் பயந்துபோன அன்றைய அதிபர் அப்துர் ரப் மன்சூர் ஹாதி தெற்கு நகரமான ஏடனுக்குத் தப்பியோடினார். நிலைமை மேலும் மோசமடைந்ததால் அவர் அங்கிருந்து அண்டை நாடான சவூதி அரேபியாவிற்குத் தப்பிச் சென்றார். (2022ஆம் ஆண்டு தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்யும் வரை அவர் சவூதி அரேபியாவில் இருந்தபடியே அரசை நடத்தி வந்தார்.)
இதற்குப் பிறகுதான் ஏமன் உள்நாட்டுப் போர் ஒரு பெரிய பிராந்திய மோதலாக மாறியது. 2015 மார்ச் மாதத்தில் சவூதி அரேபியா தலைமையிலான துபாய் உள் ளிட்ட அரபு நாடுகளின் கூட்டணி, ஹூதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. சர்வதேச அளவில் அங்கீ கரிக்கப்பட்ட ஏமன் அரசை மீண்டும் அதி காரத்தில் நிலைநிறுத்துவது இந்தத் தலை யீட்டின் அறிவிக்கப்பட்ட நோக்கமாக இருந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புலனாய்வு, ஆயுதங்கள், பிற வகையான ஆதரவுகளை வழங்கின.
இதன் பின்னர் ஏமனுக்குள் நடந்து கொண்டிருந்த அதிகாரப் போட்டி சவூதி அரேபியா, அதன் கூட்டாளிகள் ஒருபுறமும், ஈரானுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஹூதி இயக்கம் மறுபுறமும் எனப் பரந்த பிராந்தியப் போராக மாறியது. ஆனால் இதை முழுக்க முழுக்க வெளிநாடுகள் நடத்தும் ஒரு பிராந்தியப் போர் என்று கூற முடியாது. அப்படிக் கூறினால் அது ஏமனின் உள்நாட்டு அரசியல் சிக்கல்களை மறைத்துவிடும்.
ஹூதிகளுக்கென உள்ளூர் அரசியல் அடித்தளமும் சொந்த நோக்கங்களும் உள்ளன. அதே போல் தெற்கு ஏமனிலும் தனித்த அரசியல் இயக்கங்கள் உள்ளன. முன்னாள் அதிபர் அலீ அப்துல்லாஹ் சாலிஹின் ஆதரவாளர்களும் ஒரு கட்டத்தில் ஹூதிகளுடன் இணைந்து பின்னர் அவர்களிடமிருந்து பிரிந்தனர். தெற்குப் பிரிவினை எண்ணம் கொண்ட Southern Transitional Council(STC) என்ற அமைப்பும் தனித்த அதிகார மையமாக உருவானது. எனவே ஏமன் என்பது இரண்டு தரப்புகள் மட்டும் மோதிக் கொண்டிருக்கும் எளிய போர்க்களம் அல்ல.
எங்கே தொடங்கியது இந்த நெருக்கடி?
ஹூதிகளுக்கு ஈரான் ஆதரவு வழங்குவதாக சவூதி அரேபியாவும் மேற்கத் திய அரசுகளும் நீண்டகாலமாகக் கூறிவருகின்றன.ஈரானின் இராணுவ உதவி, ஆயுத ஆதரவு தொடர்பாகவும் பல்வேறு சர்வதேச அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதே நேரத்தில் ஏமனின் உள்நாட்டு அரசியல் சிக்கல்களை மறைத்து விட்டு ஹூதி இயக்கத்தை ஈரானின் கட்டளைக்குச் செயல்படும் ஒரு குழுவாகச் சுருக்கி விடவும் முடியாது.
சவூதி தலைமையிலான இராணுவ நடவடிக்கை
2015இல் ஆரம்பிக்கப்பட்ட சவூதி தலைமையிலான இராணுவ நடவடிக்கையின் முக்கிய அம்சமாக வான்வழித் தாக்குதல்கள் அமைந்தன. ஆயுத பலத்தின் மூலம் ஆட்சி யைக் கைப்பற்றிய ஹூதிகளைத் தடுத்து, சர்வதேச அளவில் அங்கீ-கரிக் கப்பட்ட ஏமன் அரசை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என சவூதியும் துபாய் உள்ளிட்ட அமீரகமும் கூறி வந்தாலும் இந்த இரு நாடுகளுக்கும் மறைமுகமான பல திட்டங்கள் இருந்து வந்துள் ளதை தற்போதைய நிகழ்வுகள் தெளிவுபடுத்தி உள்ளது.
ஏமன் போரில் ஒன்றாகச் செயல்பட்டு வந்த சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்(UAE) ஆகிய இரு நட்பு நாடுகளுக்கு இடையேயும் திடீரெனப் புதிய விரிசல் ஏற்பட்டது. 30-12-2025 அன்று தெற்கு ஏமனில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த முகல்லா துறைமுகத்தில் அமீரகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்களைக் குறிவைத்து சவூதி படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. சர்வதேசக் கடல் வழிகளை இணைக்கும் இந்த முகல்லா துறைமுகம், போர்ச் சூழலில் சவூதி தனது கச்சா எண்ணெயைப் பாதுகாப்பாக ஏற்றுமதி செய்ய உதவும் மிக முக்கிய மான மாற்றுப் பாதையாகும்.
ஏமனின் தெற்குப் பகுதியைத் தனி நாடாகப் பிரிக்க நினைக்கும் தெற்குப் பிரிவினை வாதக் குழுவிற்கு(Southern Transitioal Council STC) அமீரகம் ஆயுதம் வழங்கி உதவுகிறது என்றும், இது தனது நாட்டின் பாதுகாப்பிற்கு விடப்பட்ட அச்சுறுத்தல் என்றும் சவூதி குற்றம் சாட்டியது. ஆனால் தீவிர வாதத்தை ஒழிக்கவும் ஹூதிகளுக்கு எதிராகப் போரிடவும் மட்டுமே தாங்கள் உதவியதாகக் கூறி அமீரகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன், தனது எஞ்சிய இராணுவ உதவிகளையும் அங்கிருந்து திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சோமாலியா நாடு அமீரகத்துடனான ஒப்பந்தங்களை ரத்து செய்தது வரை பல திருப்பங்கள் நிகழ்ந்தன. இதன் மூலம் ஏமனில் அமைதியை ஏற்படுத்த வந்த கூட் டாளி நாடுகளுக்குள்ளேயே அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதில் நேரடிப் போட்டி உருவாகியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
ஆயுதங்களை வழங்கிய நாடுகளின் பொறுப்பு
ஏமன் போர் தொடர்பான மிக முக்கியமான சர்வதேச விவாதங்களில் ஒன்று, சவூதி அரேபியா உள்ளிட்ட போரில் ஈடுபட்ட நாடுகளுக்கு மேற்கத் தியநாடுகள் ஆயுதங்களை வழங்கியது பற்றியது. இந்தப் பின்னணியில் 2018இல் இங்கிலாந்தின் முக்கியச் செய்தி இதழான The Independent வெளியிட்ட செய்தியில் 2011ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஏமன் செயற்பாட்டாளர் தவக் குல் கர்மானின் கருத்து குறிப்பிடத்தக்கது. தவக்குல் கர்மான் குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, சவூதி அரேபியாவுக்கு ஆதரவும் ஆயுதங்களும் வழங்கிய பிற நாடுகளின் பொறுப்பை கேள்விக்குள்ளாக்கினார். அதே நேரத்தில் ஈரானின் தலையீட்டையும் ஹூதிகளுக்கான அதன் ஆதரவையும் விமர்சனத் திற்கு வெளியே வைக்கக் கூடாது என்றார்.
இது ஒரு முக்கியமான தார்மிகக் கேள் வியை உலகின் முன் வைத்தது. ஒரு நாட்டின் இராணுவ நடவடிக்கையில் மற்றொரு நாடு நேரடியாகப் பங்கேற்காவிட்டாலும் அது வழங்கும் ஆயுதங்கள் பொதுமக்களுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டால் அந்த நாட்டுக்கு எந்த அளவுக்குப் பொறுப்பு உள்ளது? இதற்கு சர்வதேச அரசியலில் எளிய பதில் இல்லை.
ஆயுத ஏற்றுமதி செய்யும் அரசுகள் தங்கள் விற்பனை சட்டப்பூர்வமானது என் றும் பாதுகாப்புத் தேவைகளுக்கானது என்றும் வாதிடலாம். மனித உரிமை அமைப்பு களோ, ஆயுதங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரிந்த பின்னரும் அவற்றைத் தொடர்ந்து வழங்குவது குறித்து சட்ட, தார்மிகக் கேள்விகள் எழுகின்றன எனக் கூறுகின்றன.
ஆயுதங்களை வழங்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் மற்றொரு முக்கிய நோக்கமும் உள்ளது. பாப் அல் மந்தப் நீரிணை மூலமே ஐரோப்பிய நாடு களுக்கு பெட்ரோல் முதலான வணிகம் செல்ல வேண்டி உள்ளது. ஹூதிகள் இந்தப் பகுதியைக் கைப்பற்றினால் அது மேற்குல பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும். உண்மையில் இவர்களின் நோக்கம் பொருள் அடிப்படையே..! மனிதாபிமானம் என்பது மருந்துக்குக் கூட இவர்களிடம் இல்லை என்ப தையே இது காட்டுகிறது.
இஸ்ரேலின் நிலை
ஏமன் நாடு வெளிநாட்டு ஆதிக்கங் களிலிருந்து விடுபட்டு ஒரு சுதந்திரமான சக்தியாக உருவெடுப்பது இஸ்ரேலுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக வர்த்தகத்தின் முக்கியக் கடல் பாதையான பாப் அல் மந்தப் நீரிணை ஏமனின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இஸ்ரேலின் கடல்வழி வர்த்தகத்தையும் அதன் துறைமுகங்களையும் முடக்கும் வலிமை ஏமனுக்கு உண்டு.
பல ஆண்டுகாலப் போர்களுக்குப் பிற கும் ஏமனின் ஆயுதப் படைகள் சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து இஸ்ரேலை நேரடியாகத் தாக்கும் அதிநவீன ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் உருவ-ாக்கியுள்ளன. பிற அரபு நாடுகள்
மவுனம் காக்கும் வேளையில் ஃபலஸ்தீன விடுதலைக்காகத் துணிச்சலுடன் களமிறங்கி இஸ்ரேலை இராணுவ ரீதியாக எதிர்க்கும் ஒரு வலிமையான ஏமன் இஸ்ரேலின் பாதுகாப்புக்கும் பொருளாதார நலன்களுக்கும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
ஏன் பாப் அல் மந்தப் அவ்வளவு முக்கியம்?
ஏமனின் தற்போதைய நிலையைப் புரிந்து கொள்ள பாப் அல் மந்தப் நீரிணையின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும். செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் குறுகிய கடல்வழியே பாப் அல் மந்தப். சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப் பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையே செல் லும் பெருமளவிலான சரக்குக் கப்பல்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்துகின்றன. எனவே ஏமனின் மேற்குக் கடற்கரையில் யார் கட்டுப்பாட்டைப் பெறுகிறார்கள் என்பது ஏமனுக்கு மட்டும் முக்கியமான விஷயமல்ல. சர்வதேச வர்த்தகம், எண்ணெய் போக்குவரத்து, கடற்படைப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் அது முக்கியம்.
2026 செப்டம்பரில் ஏற்பட்ட புதிய மோதல்களின்போது இந்தப் பகுதியின் முக்கியத்துவம் மீண்டும் உணரப்பட்டது. ஹூதி படைகள் செங்கடல் கடற்கரைப் பகுதிகளிலும் மோகா துறைமுகம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் முன்னேற்றம் கண்டதாக அண்மைக்காலச் செய்திகள் தெரிவித்தன. இதனால் ஏமன் போர் மீண்டும் சர்வதேச வர்த்தகத்தின் பாதுகாப்புடன் நேரடியாக இணைந்துள்ளது.
(அடுத்த இதழில் முடியும்)