மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

சிரித்து வாழ வேண்டும்
மௌலவி ஹாஃபிழ் தா.முஹம்மது ஜுபைர் சித்தீகி, October 1-15,2026


சிரித்து வாழ வேண்டும்

-மௌலவி ஹாஃபிழ் தா.முஹம்மது ஜுபைர் சித்தீகி

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்

என்பது வள்ளுவர் கூற்று. அதாவது துன்பம் வரும்போது கலங் காமல் புன்னகையுடன் அதனை எதிர்கொள்ள வேண்டும். அந்தத் துன்பத்தை விரட்டியடித்து வெல்லக்கூடிய வலிமை அதைப் போன்ற வேறு எதற்கும் இல்லை என்பது இதன் பொருள்.

பாவேந்தர் பாரதிதாசன், சிரிப்பு ஒன்றே மனிதனை விலங் கினின்று பிரித்துக் காட்டும் அடையாளம் என்கிறார். தன் அகத்தின் நெகிழ்ச்சியை உதடுகளின் மலர்ச்சியாக மாற்றும் பேராற்றல் மனி தனுக்கு மட்டுமே அருளப்பட்டிருக்கிறது. பிறந்து முதல் எட்டு வாரங் களுக்குப் பிறகு குழந்தை தன் தாயின் குரல், முகம், பரிவை அடை யாளம் கண்டு விழித்திருக்கும் போதே சிரிக்கத் தொடங்குகிறது. இது மனித வளர்ச்சியில் மிக முக்கியமான மைல்கல். மனிதன் சக மனிதனோடு தொடர்பு கொள்ளத் தொடங்கும் முதல் சமூகப் பாலம் சிரிப்பு.

பிடித்த பொம்மை கிடைக்காவிட்டாலும் கிடைத்த பொம்மையை வைத்து விளையாடும் குழந்தைகளின் சிரிப்பு. முதுகில் எவ்வளவு தான் கடன் சுமை இருந்தாலும் கல்யாண வீட்டில் முகத்தில் சிரிப்பை மட்டுமே சுமக்கும் அப்பாக்களின் சிரிப்பு. மரணத்தையே கண்ணெதிரில் கொண்டு வந்து நிறுத்தும் பிரசவ வலியைப் பொருட்படுத்தாமல், வீறிட்டு அழும் குழந்தையை வாரி அணைத்துக் கொள்ளும் அம்மாக்களின் சிரிப்பு.

சிரிப்பு மகிழ்வின் அடையாளம் மட்டுமல்ல; சில சமயங்களில் ஆயுதமாகவும், சில சமயங்களில் கேடயமாகவும் பரிணமிக்கும் ஆற்றல் கொண்டது. வெற்றி பெற்றுவிட்டோம் என்று மகிழ்வில் சிரிப்பவனுக்கு எதிரில் தோற்றுப்போனவனைத் தேற்ற வந்தவர்கள் ஆறுதல் கூறும் போது அழுது கொண்டிருக்கும் அவன் முகத்திலும் ஒரு நொடி மின்னலென வெட்டிச் செல்கிறது புன்னகை.

முதுகில் குத்தும் துரோகியின் சிரிப்பு ஒரு பக்கம் எனில், நம்பி ஏமாந்தவனும் தன் ஏமாற்றத்தை எண்ணி சிரிக்கத்தான் செய்கிறான். துன்பத்தை மட்டுமே வழித்துணையாகக் கொண்டவனுக்கு, அழுது அழுது அலுத்துப் போனவனுக்கு, சிரிப்பு மட்டுமே எப்போதும் துணை நிற்கிறது; அவன் அழ வேண்டிய இடங்களிலும் சிரித்தே கடக்கிறான்.

இயந்திரத்தனமான வாழ்க்கையால் சிரிப்பும் நவீனமாகி இருக்கிறது. நான் மகிழ்வாகத்தான் இருக்கிறேன் என்பதைக் காட்டு வதற்காகவே செயற்கையாகச் சிரிக்கும் சூழல் நம்மிடையே ஏற்பட் டிருக்கிறது. இயற்கையான சிரிப்பைத் தொலைத்துவிட்டோம். வரம்பு மீறி உருவக் கேலி செய்து பிறர் மனதைக் காயப்படுத்தும் வகையில் சிரிப்பு வன்முறையாக மாறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்கள், ‘நான் சில விஷயங்களைக் கூறுவேன். அதை யார் ஏற்று வாழ்நாளில் நடைமுறைப்படுத்துவார்? அல்லது அதன்படிச் செயல்படுபவரிடம் அதை எடுத்துரைப்பார்?' என்று கேட்டபோது, நபித்தோழர் அபூஹுரைரா(ரலி) ஆர்வமாக முன்வந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ஐந்து விஷயங்களை ஒவ்வொன்றாக எண்ணிக் கூறினார்கள். அதில் ஐந்தாவதாக, ‘அதிகம் சிரிக்க வேண்டாம்; அதிகம் சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்' என்று கூறி னார்கள். (நூல்: திர்மிதி 2305). ஆனால் இது வரம்பு மீறிய சிரிப்பைக் குறித்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்கு நபியவர்களும் சில சமயங்களில் சிரித்தது உண்டு.

நபி(ஸல்) அவர்கள் அதிகமாகப் புன்னகைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ‘நபிகள் நாயகம்(ஸல்) அவர் களை விட அதிகம் புன்னகைக் கக் கூடியவர் யார்?' என்ற கேள்விக்கு நபித்தோழர்களின் ஒரே பதில் இல்லை என்பது மட்டுமே. பிறர் மனதைக் காயப் படுத்தும் சிரிப்பை இஸ்லாம் முற்றிலு மாகத் தடுக்கிறது. அதே வேளையில் தன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப் பதை தர்மத்திற்கு இணையான நன்மையைப் பெற்றுத்தரும் நற்செயலாகப் பார்க்கிறது.

பொருள் வசதி படைத்தவர்களுக்கு மட் டுமே கொடுத்து உதவும் நன்மை கிடைக்கும் என்ற இலக்கணத்தையே மாற்றி எழுதியது இஸ்லாம். தன் சகோதரனைச் சந்தித்து நல்ல வார்த்தைகளைப் பகிர்வதும், சிரித்த முகத்துடன் எதிர்கொள்வதும் நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று கூறி சிரிப்பையும் நற்செயலாக்கியது. நகைச்சுவை கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. நகைச்சுவை செய்யலாம், நபி(ஸல்)அவர்களும் செய்-திருக் கிறார்கள். ஆனால் அதற்கென்று ஒரு வரம்பு இருக்கிறது. நகைச்சுவையில் ஒருபோதும் பொய் இருக்கக் கூடாது. ஆனால் வெறும் பொழுது போக்கிற்காக இன்று நடத்தப்படும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு உருவக் கேலி யும் பொய்க் கற்பனைகளும் தான் மூல தனம் என்பது சொல்லித் தெரிய வேண்டிய தில்லை.

ஏதோ ஒரு காரணத்திற்காக அதிகார பாவனை செய்து கொண்டிருக்கும் அப்பாக் களின் முகம் பார்த்துச் சிரித்துப் பேசு வோம். வாழ்வின் பெரும்பாலான நேரத்தை சமையலறையில் கழிக்கும் அம்மாக்களை நோக்கிப் புன்னகைப்போம். சமையல் குறைகள் கூறுவதைக் குறைத்து, அதைப் பாராட்டிச் சிரிப்பை அன்பளிப்போம். பிள்ளைகள் விரும்பிச் செய் பவற்றைப் பாராட்டி புன்னகை யைப் பரிசளிப்போம். சிறு சிறு அன்பைத் தேடி அலை பவர்கள் இங்கே மிக அதிகம்; கொடுப்பவர்கள் மிக மிகக் குறைவே! எனவே சந்திக்கும் அனைவரையும் சிரித்த முகத்துடன் சந்திப்போம்.

பிறருக்காகச் சிரிக்கும் அதே நேரம் நமக்காகவும் நாம் சிரிப்போம். மனவலியா? யாரும் அவமானப்படுத்தி விட்டார்களா? கவலை வேண்டாம், புன்னகையுங்கள். எல்லா இறைத்தூதர்களை விடவும் கடுமையாகச் சோதிக்கப்பட்ட இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்கள் அதிகமதிகம் புன்னகைக்கக் கூடியவர்களாகவே இருந்தார்கள். புன்னகைத்துப் பாருங்கள். அது உங்கள் மனப்புண்களை ஆற்றும் மருந்தாகக் கூடும்.

நம்மில் ஒவ்வொருவருக்கும் மலையளவு துன்பங்கள் இருக்கலாம். பெருமூச்சு விட்ட படி உதட்டை லேசாக அங்குமிங்குமாக அசைத்துச் சிரித்துப் பாருங்கள். அதை விடப் பெரிய ஆறுதல் வேறெதிலும் இருக்க முடியாது. அன்பைப் பொதுவுடைமை ஆக்க சிரிப்பே சிறந்த வழி.




உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்