மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

நானிலத்தின் நன்மாதிரி நபிகள் நாயகம்(ஸல்) சென்னைப் பேருரைகள்
கே.ஜலாலுதீன் , October 1-15,2026


நானிலத்தின் நன்மாதிரி நபிகள் நாயகம்(ஸல்) சென்னைப் பேருரைகள்

கே.ஜலாலுதீன் 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க கால இஸ்லாமிய அறிவுலகில் அழியாச் சுவடுகளைப் பதித்த படைப்புகளுள் முக்கியமான இடத் தைப் பெறுவது பேரறிஞர் சையத் சுலைமான் நத்வி அவர்கள் 1925 ஆம் ஆண்டு அன்றைய மத்ராஸ்(சென்னை) மாநகரில் நிகழ்த்திய எட்டு வரலாற்றுச் சொற்பொழிவுகளாகும். பின்னாளில் ‘குத்பாத்தே மத்ராஸ்'(Khutbt-e-Madras) என்ற தலைப்பில் உருது மொழியில் தொகுக்கப்பட்ட

இப்பேருரைகள், அண்ணல் நபி முஹம்மது(ஸல்) அவர்களின் ஆளுமையை வரலாறு, பகுத்தறிவு, நாகரிகவியல், சமூகவியல், ஆன்மிகவியல் ஆகிய துறைகளின் ஒளியில் விளக்கும் அரிய ஆய்வு நூலாகப் போற்றப்படுகின்றது. இப்பேருரைகள் நிகழ்த்தப்பட்ட காலம் மேலைநாட்டு ஓரியண்டலிய ஆய்வாளர்கள் இஸ்லாத்தையும், அண்ணல் நபி(ஸல்) அவர் களையும் குறித்துப் பல்வேறு தவறான கருத்துகளை உலகளவில் பரப்பியிருந்த காலமாகும். இந்நிலையிலே உணர்ச்சிவசப்பட்ட மறுப்புரைகளை முன்வைப்பதற்குப் பதிலாக வரலாற்றுச் சான்றுகளும் பகுத்தறிவும் ஆய்வுமுறையும் சார்ந்த அணுகுமுறையைக் கையாண்டு நபித்துவத்தின் உண்மைத் தன்மையையும், அண்ணலாரின் வாழ்வியல் மகத்துவத்தையும் நிறுவுவதே சுலைமான் நத்வி அவர்களின் உயரிய நோக்கமாக இருந்தது.

முதற் பேருரையில் மனித வரலாற்றில் இறைத்தூதர்களின் பங்கு விளக்கப்பட்டு அவர்களின் தொடர்ச்சியில் இறுதி நபியாக முஹம்மது(ஸல்) அவர்கள் வகிக்கும் தனித்துவமான இடம் தெளிவு படுத்தப்படுகிறது. மனித சமுதாயம் எதிர்கொண்ட அறச்சிதைவு, ஆன்மிக வெறுமை, சமூக அநீதி ஆகியவற்றிற்கு இறைவன் அருளிய முழுமையான வழிகாட்டுதலாக அவர்களின் தூதுத்துவம் அமைந்தது என்பதை ஆசிரியர் நிறுவுகிறார்.

அடுத்தடுத்த பேருரைகளில் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை உலக வரலாற்றிலேயே மிகத் துல்லியமாகவும் தொடர்ச்சி யாகவும் ஆவணப்படுத்தப்பட்ட வாழ்க்கை என்பதைக் கூறுகிறார். நபியவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்வும் நம்பத்தகுந்த அறிவிப்பாளர்களின் தொடர் வழியாகப் பாதுகாக்கப் பட்டிருப்பது மனித வரலாற்றில் ஒப்புயர்வற்ற சாதனையாகும் என்று விளக்குகிறார்.

இப்பேருரைகளின் சிறப்பம்சம் முஹம்மத் நபி(ஸல்) அவர் களை ஒரு சமயத் தலைவராக மட்டும் சித்திரிக்காமல், முழுமை யான மனிதர் என்ற உயரிய நிலைக்குக் கொண்டு செல்வதாகும். இறைவழிபாட்டில் திளைத்த ஆன்மிக ஞானியாகவும், அன்பும் அருளும் நிறைந்த குடும்பத் தலைவராகவும், ஒப்பற்ற ஆசிரியராகவும், நீதியை நிலைநாட்டிய அரசியல் தலைவராகவும், கருணையுள்ள நீதிபதியாக வும், தொலைநோக்குடைய நிர்வாகியாகவும், கட்டுப்பாடும் கருணையும் இணைந்த படைத் தலைவராகவும், மனிதகுல நலனையே இலட்சியமாகக் கொண்ட சமூகச் சீர்திருத்த வாதியாகவும் அவர்களின் பன்முக ஆளுமை விரிவாக ஆராயப்படுகிறது.

குறிப்பாக சமூக நீதியை நிலைநாட்டு வதில் அண்ணலாரின் பங்களிப்பை சுலை மான் நத்வி ஆழமாக எடுத்துரைக்கிறார். பிறப்பாலும், இனத்தாலும், செல்வத்தாலும் மனிதன் உயர்வதில்லை; இறையச்சமும் நற்குணமுமே உயர்விற்கான அளவுகோல் என்ற குர்ஆனியக் கொள்கையை வாழ்வில் நடை முறைப்படுத்திய தலைவராக அண்ணல் நபி களார் விளங்கினார்கள் என்பதை வரலாற்று நிகழ்வுகளின் வழி நிறுவுகிறார்.

பெண்களின் உரிமைகள், அநாதைகளின் பாதுகாப்பு, ஏழைகளின் நலன், அடிமை முறையை ஒழிப்பதற்கான படிப்படியான சீர் திருத்தங்கள், மதச்சுதந்திரம், மனித மாண்பின் பாதுகாப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் அவர் நிகழ்த்திய மாற்றங்கள் உலக நாகரிக வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தின என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

அதே போன்று அரசியல் அதிகாரமும் ஆன்மிகப் பொறுப்பும் ஒன்றுக்கொன்று முரண்படாதவை என்பதை நபிகளாரின் வாழ்க்கை நிறுவியதாக ஆசிரியர் வலி யுறுத்துகிறார். ஆட்சி என்பது ஆதிக்கத்தின் கருவியல்ல; அறத்தை நிலைநாட்டும் பொறுப்பு என்பதையும், அதிகாரம் என்பது தனிப்பட்ட பெருமைக்காக அல்ல; சமூக நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய இறைநம்பிக்கையின் ஒப்படைப்பு என்ப தையும் அவர் எடுத்துரைக்கிறார்.

இப்பேருரைகளின் மற்றொரு சிறப்பியல்பு வரலாற்று உண்மைகளை வெறும் நிகழ்வு களாக மட்டும் கூறாமல் அவற்றிலிருந்து நாகரிக வளர்ச்சிக்கான பொது விதிகளை ஆசிரியர் வெளிக்கொணர்வதாகும். இஸ்லாம்என்பது குறிப்பிட்ட இனத்தாருக்கோ காலத் திற்கோ உரிய சமயமன்று; மனிதகுலம் முழு வதற்குமான வாழ்வியல் நெறி என்பதை ஆழ்ந்த ஆய்வின் வழி நிறுவுகிறார். எனவே அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் நிலையான வழிகாட்டி என்ற முடிவை இப்பேருரைகள் வலியுறுத்துகின்றன.

சுலைமான் நத்வி அவர்களின் மொழி நடை ஆய்வின் ஆழமும் இலக்கியத்தின் இனிமையும் சங்கமித்த ஓர் அரிய வடிவ மாகும். உரைநடையில் செறிவும், கருத்தில் தெளிவும், மேற்கோள்களில் நம்பகத்தன்மையும், வாதத்தில் தர்க்க நயமும் ஒன்றிணைந்து விளங்குகின்றன. திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள், வரலாற்றுச் செய்திகள், முந்தைய நாகரிகங்களின் சான்றுகள், பகுத்தறிவின் ஒளி ஆகிய அனைத்தையும் ஒருங் கிணைத்து அறிவார்ந்த வாசகனின் சிந்தனை யைத் தூண்டும் உயரிய ஆய்வுக்களமாக இந்நூலை அவர் உருவாக்கியுள்ளார்.

இவ்வகையில் சென்னைப் பேருரைகள் என்பது வெறும் சமயச் சொற்பொழிவுகளின் தொகுப்பன்று; நபித்துவத்தின் வரலாற்று உண்மையை அறிவியல் ஆய்வு முறையில் நிறுவிய மாபெரும் சான்று நூலாகும். அண்ணல் நபி(ஸல்) அவர்களின் ஆளு மையை மனித வரலாற்றின் உச்ச முன்னு தாரணமாக நிலைநிறுத்திய இந்நூல் இன்றும் இஸ்லாமிய ஆய்வாளர்களாலும் ஒப்பீட்டு நாகரிக ஆராய்ச்சியாளர்களாலும் தவிர்க்க முடியாத முதன்மை ஆதாரமாக மதிக்கப் படுகிறது. 1925ஆம் ஆண்டு சென்னையில் ஒலித்த அந்த எட்டு பேருரைகளின் அறி வொளி காலத்தையும் எல்லைகளையும் கடந்து இன்றளவும் அறிவுலகை ஒளிர்வித்துக் கொண்டிருப்பது அவற்றின் நிலையான பெருமைக்கு அழியாத சான்றாகும்.

ரஹீமா பதிப்பகம் அழகுற வெளியிட்ட இந்த நூலை மௌலவி காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவியும் ஹுஸைனுல் ஆபிதீனும் இனிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்