மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

நம்பிக்கையைத் தகர்க்கும் இடைக்காலத் தடை
வி.எஸ். முஹம்மத் அமீன், 1-15 அக்டோபர் 2025



1995ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தை மாற்றும் வகையில் ஒன்றிய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தை 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. 2025 ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக இந்தச் சட்டத்திற்கு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட 73 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. திருத்தச் சட்டத்தின் பல கூறுகளை விமர்சித்த நீதிபதிகள் அதில் 5 மனுக்களை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு மே மாதம் மூன்று நாள்கள் தொடர்ச்சியாக இந்த வழக்கை விசாரித்தது. செப்டம்பர் 15ஆம் நாள் வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு முழுமையாகத் தடை விதிக்க மறுத்ததுடன் வக்ஃப் சொத்து என அறிவிக்கப்பட்ட ஒரு சொத்து அரசுக்குச் சொந்தமானதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கும் பிரிவு, ஒருவர் வக்ஃபுக்குச் சொத்தை அளிப்பதற்கு முன்பாக ஐந்தாண்டுகள் இஸ்லாமியராக இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை போன்ற சில திருத்தங்களுக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கின்றது.

இதுவும் இடைக்காலத் தடைதானே தவிர நிரந்தரத் தடை அல்ல. ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றுவதற்கான விதிகள் மாநில அரசால் வகுக்கப்படும் வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஒரு மதத்தைப் பின்பற்றுவதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது எவ்வகை நியாயம்?

மத்திய வக்ஃப் குழுவில் 22 உறுப்பினர்களில் அதிகபட்சம் 4 பேர் இஸ்லாமியரல்லாதவர்களாக இருக்கலாம் என்றும், மாநில வக்ஃப் வாரியங்களில் உள்ள 11 உறுப்பினர்களில் அதிகபட்சம் 3 பேர் இஸ்லாமியரல்லாதவர்களாக இருக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் பிற மத விவகாரங்களில் தலையீடு செய்யவும், மதச் சுதந்திரத்தை நசுக்கவும் வழிவகை செய்யும் இதுபோன்ற செயல்களை உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது வியப்பையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

வக்ஃப் திருத்தச் சட்டத்தில் 33 சேர்த்தல்கள், 45 மாற்றீடுகள், 37 நீக்கல்கள் என 115 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் 44 திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒரு சில திருத்தங்களுக்கு மட்டுமே இடைக்காலத் தடை விதித்துள்ள நீதிமன்றம் இத்திருத்தச் சட்டத்தை முழுமையாகத் தடை செய்ய முகாந்திரம் இல்லை என்று கூறியிருப்பது நீதியின் மீது வைத்துள்ள நம்பிக்கையைத் தகர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. வக்ஃப் சொத்துகளைச் சூறையாடும் தீய திட்டத்திற்கு நீதி என்ற பெயரில் ஒருபோதும் துணை போய்விடக்கூடாது.

இவ்வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயகத் தோழமைகளும், முஸ்லிம் அமைப்புகளும் வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு முழுமையான தடை கோரி நீதிக்கான குரலை உரத்து எழுப்ப வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறும், மத உரிமைகளைப் பறிக்கும் வக்ஃப் திருத்தச் சட்டம் முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்படும் வரை தொடர்ந்து நாம் போராட வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்