
ஹிஜ்ரி 1447 ஷாபான் 12&26 · 2026 பிப்ரவரி 1&15
இரண்டாவது முறையாக டெனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப் பேற்று ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டிலேயே ட்ரம்பின் அடாவடிகளால் உலக நாடுகளும், உலகப் பொருளாதாரமும் திணறுகின்றன.
பதவி ஏற்றதும் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்க மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர், சட்டவிரோதக் குடியேறிகளின் உடனடி வெளியேற்றம், விசா கட்டணம் பன்மடங்கு உயர்வு என குடியேற்றக் கொள்கைகளைக் கடுமையாக்கினார். சட்டவிரோதக் குடியேறிகளின் கை, கால்களில் விலங்கிட்டு, ராணுவ விமானத்தில் நாடு கடத்தி மனித உரிமையைக் காலில் போட்டு மிதித்தார்.
சட்டவிரோதக் குடியேறிகள் அமெரிக்காவுக்குள் ஊடுருவ உதவுவதாக அண்டை நாடுகளான மெக்ஸிகோ, கனடாவிற்குக் கூடுதல் வரி விதித்தார். நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் டென்மார்க் இடம் பெற்றுள்ளதால் அந்த நாட்டுக்கு ஆதரவாக நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், பின்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் கிரீன்லாந்துக்குப் படைகளை அனுப்பின. இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப் டென்மார்க் உள்ளிட்ட எட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிரடியாக 10 விழுக்காடு கூடுதல் இறக்குமதி வரியை விதித்தார். கனடா மீது 35 விழுக்-காட்டுக்கு அதிகமாக மேலும் 10 விழுக்காடு வரியை விதிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
சீனாவுக்கு 145 விழுக்காடு வரி விதித்ததுடன், இந்தியாவிற்கு 25 விழுக்காடு வரியை மேலும் 25 விழுக்காடு உயர்த்தி 50 விழுக்-காடு வரி விதித்ததுடன் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவிற்கு 500 விழுக்காடு வரி விதிக்கும் வகையில் 'ரஷ்ய தடைகள்
மசோதா' என்ற அமெரிக்காவின் புதிய மசோதாவை நிறைவேற்ற உள்ளதாக அறிவித்து பீதியைக் கிளப்பியுள்ளார். தங்கம் வரலாறு காணாத அளவு உயர ட்ரம்பின் நடவடிக்கைகள் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ஆப்பிரிக்க ஏழை மக்களுக்கான உணவு, மருத்துவத்திற்கான நிதியையும் நிறுத்தி விட்டார்.
தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக டென்மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், உடன்பாடு எட்டப்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டினார். எதிர்ப்புக் கிளம்பியதும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என பல்டி அடித்துள்ளார். கனடாவையும் தங்களது மாநிலங்களில் ஒன்று என்று கூறிவந்த நிலையில் அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக கிரீன்லாந்து இருக்கும் என்கிறார். கிரீன்லாந்தின் எண்ணெய் வளம், எரிவாயு, நிக்கல், கோபால்டு உள்ளிட்ட அரிய கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதே அமெரிக்காவின் நோக்கம்.
இதே போல் எண்ணெய் வளங்களைக் குறிவைத்து வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவருடைய மனைவியையும் கடத்திக் கைது செய்துள்ளது ட்ரம்ப் நிர்வாகம். அத்துடன் வெனிசுலாவின் நிர்வாகத்தலைவர் நான்தான் என்றும் ட்ரம்ப் கொக்கரிக்கிறார்.
ஏகாதிபத்தியத்தின் அடிப்படைக் குணமே சுரண்டலும், ஆக்கிரமிப்பும்தான். வரி யுத்தம் ஒருபுறம் என்றால் இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்து ஃபலஸ்
தீனைத் தகர்த்ததும், ஈரான் மீது தாக்குதல் நடத்தியதும், தன்னைத் தாக்கினால் ஈரான் என்ற ஒரு நாடே வரைபடத்தில் இருக்காது என்று மிரட்டுவதுமான அராஜகத்தில் ஈடுபட்டுக் கொண்டே 8 போர்களை நிறுத்தியதற்காக தனக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று அடம் பிடித்தார். நோபல் பரிசு கிடைக் காததால் நோபல் பரிசு பெற்ற வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்டார்.
அமைதிக்கான பரிசு தரவில்லை எனவே இனி அமைதியைப் பற்றிப் பேசி பயனில்லை என்று சொன்னதுடன் ஐ.நா சபைக்கு மாற்றாக 'அமைதி வாரியம்' (Board of Peace) என்ற புதிய சர்வதேச அமைப்பைத் தொடங்கி உள்ளார். இந்தப் புதிய அமைப்பில் ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்தி உறுப்பினராகச் சேரலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு சர்வ தேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில் இந்த முயற்சி உலக அமைதியின் சீர்குலைவுக்கான முன்முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
ஓராண்டிலேயே இத்தனை அத்துமீறல்கள் என்றால் இனிவரும் மூன்று ஆண்டுகளில் என்னென்ன செய்யப்போகிறாரோ என்ற பதை பதைப்புடன் நாள்களைக் கடந்துவிடாமல் ட்ரம்பின் அராஜகப் போக்கைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். டாலருக்கு மாற்றான திட்டத்தைக் கையிலெடுத்தாலோ, தங்களுக்கு எதிரான நடவடிக்கையை யோசித்தாலோ அவர்கள் மீது பாய்ந்து தாக்குவதையும், அந்த நாட்டின் ஜனநாயகத்தைச் சிதறடிப்பதையும் கண்டு அடங்கிவிடாமல் துணிவு கொண்டு எதிர்க்க வேண்டும். குறிப்பாக இந்தியா தனது அழுத்தமான குரலை வெளிப்படுத்த வேண்டும்.
பெரியண்ணன் மனப்பான்மையில் வல்லாதிக்கம் செலுத்திவரும் அமெரிக்காவின் நவீன ஏகாதிபத்தியத்தைச் செயல்படுத்த முயலும் ட்ரம்பின் அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சர்வதேச ஒழுங்கைச் சீர்குலைப்பதன் மூலம் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் அபாயத்திலிருந்து காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.