மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

திருத்தப் பணிகளில் ஏன் இந்தத் தீவிரம்?
வி.எஸ். முஹம்மத் அமீன், நவம்பர் 16-30, 2025



தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் Special Intensive Revision - SIR நடத்த உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 9 வரையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 2026ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை இந்தப் பணிகள் நடக்க உள்ளன. பிப்ரவரி 7ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2002-2005 காலகட்டத்திற்குப் பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் இப்போது நடைபெற உள்ளது. புதிய வாக்காளர் சேர்ப்பு, போலி வாக்காளர் நீக்கம் என்பது அவசியமானதுதான். ஆனால் தமிழ்நாட்டில் நான்கைந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இப்போது இந்தப் பணிகளைத் தொடங்குவது சரியல்ல. பல மாதங்களுக்கு முன்னரே இந்தப் பணி தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது தேர்தலுக்குப் பிறகு இப்பணிகளைத் தொடங்கலாம்.

தமிழ்நாட்டில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் அனைவருமே புதிதாகக் கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீட்டிற்கே வந்து வழங்க வேண்டும். மூன்று மாத காலத்தில் இந்தப் பணிகளை முடிப்பதற்குக் கால அவகாசம் போதுமானது அல்ல.

தேர்தலுக்கு மிக நெருக்கத்தில் அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் SIR மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது என தமிழ்நாடு முதல்வர் கூறியதுடன் இது குறித்து கருத்தறிய நவம்பர் 2ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டினார். SIR நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையெனில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் இதனை எதிர்த்து கண்டனக் கூட்டம் நடத்தப் போவதாகவும் இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பீஹாரில் நடந்த குஐகீஇல் 66.68 இலட்சம் வாக்காளர் பெயர்களை நீக்கியும், 21 இலட்சம் புதிய வாக்காளர் பெயர்களைச் சேர்த்தும் உள்ளது. பாஜக அரசு தேர்தல் ஆணையத்துடன் இணைந்து ‘வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி வருகிறார். ஹரியானாவில் செலுத்தப்பட்ட 8 வாக்குகளில் ஒன்று போலியானது என்றும் 25 இலட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் இப்போது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் உரிய பதில் தரவில்லை. நீக்கப்பட்ட, சேர்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிடத் தயாராகவும் இல்லாத சூழலில் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத் தன்மை முற்றிலும் தொலைந்துபோய் உள்ளது. குடிரியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒருவரின் குடியுரிமையைத் தீர்மானிப்பதை SIR பணியுடன் இணைத்துள்ளனர். அதைச் செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. ஒரு வகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான பணிகளாகவே இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

வாக்காளர் திருத்தப் பணிகளில் ஒவ்வொரு வாக்காளரும் கவனத்துடன் இருந்து படிவத்தைப் பூர்த்தி செய்து தங்கள் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டிய சூழலில் இந்த அவசரகதி தீவிரத் திருத்தத்தை எதிர்க்க வேண்டியும் உள்ளது. பாஜக தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். ஐயத்தைப் போக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவை விடுத்து வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்த முன்வர வேண்டும். திருத்தப் பணிகளில் தீவிரம் காட்டாமல் அதில் நேர்மையைக் காட்ட தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்