2025 நவம்பர் 10ஆம் நாள் தில்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள நேதாஜி சுபாஷ் மார்க் சிக்னலில் நின்றிருந்த கார் வெடித்துச் சிதறி 15 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதற்குப் பின்னால் பயங்கரவாதச் சதி இருப்பதாகக் கூறி தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணை மேற்கொள்ளும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
இச்சம்பவத்தில் மனித வெடிகுண்டாக மாறி மருத்துவர் உமர் உயிரிழந்ததாகக் கூறப்படுவதுடன் நான்கு மருத்துவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவிலுள்ள உமரின் வீட்டைப் பாதுகாப்புப் படையினர் இடித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மருத்துவர்கள் ரைய்யான், முஸ்தகீம், முஹம்மது, உர வியாபாரி தினேஷ் சிங்லா ஆகியோரை NIA குற்றமற்றவர்கள் என விடுவித்தது. மருத்துவர் உமர் தொடர்புடைய அல் பலாஹ் பல்கலைக்கழகம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்தியாவின் தலைநகரில் உயர் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதியில் 2900 கிலோ வெடிமருந்து தயாரிப்பதும், இது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் பாதுகாப்புக் குறைபாட்டைத்தான் வெளிப்படுத்துகின்றது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரியும் இரட்டை என்ஜீன் ஆட்சி என்று மார்தட்டிக் கொள்ளும் பாஜக அரசு மக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும். உள்துறை அமைச்சர் பதவியைத் துறக்க வேண்டும்.
அதைவிடுத்து குற்றவாளிகளின் வீடுகளை இடிப்பது எவ்வகையிலும் தீர்வாகாது. ‘குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்கும் செயல்பாடுகள் உரிய சட்ட நடவடிக்கைகள் இன்றி மேற்கொள்ளப்படும்போது அதனைத் தண்டனையாகக் கருத முடியாது என்று 2024இல் உச்சநீதிமன்றம் கூறியதற்கு மாற்றாக இந்த இடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குற்றவாளியின் வீட்டை இடிக்கும் தண்டனை எந்த இந்தியச் சட்டத்திலும் இல்லை’ என்று ஸ்ரீநகர் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் ருஹூல்லா மெஹ்தி குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் புல்டோசர் நீதி என்று இத்தகைய இடிப்புகள் தொடர்வது இந்திய நீதி மாண்பையே கேள்விக்கு உள்ளாக்குகிறது.
ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இந்த நிகழ்வு தொடர்பாக தவறான தகவல்களையும் மதரீதியான கருத்துருவாக்கத்தைப் புனைவதிலும் ஈடுபட்டிருக்கின்றன. இது தவறான புரிதலுக்கும், வெறுப்புக்கும் இட்டுச் செல்லும். இந்தக் கார் குண்டுவெடிப்புச் சம்பவம் பீகார் தேர்தலின் போது நடந்துள்ளது ஏன்? என்பன போன்ற ஐயங்களை சமூக வலைதளங்களில் எழுப்புபவர்கள் மீதுகூட நடவடிக்கை எடுக்கப்படுவது மக்கள் கருத்துரிமையின் மீதான தாக்கு தலாகும்.
எந்தச் சார்பும் இல்லாமல் எல்லாச் சான்றுகளும் ஆய்வு செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். விசாரணை முடிவுகளை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பயங்கரவாதத்தை எந்தவொரு மதத்தோடும் இணைத்துப் பார்க்க முடியாது. எந்தக் கொடியின் கீழ் எந்தவொரு வன்செயல் நிகழ்த்தப்பட்டாலும் திட்டவட்டமான கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
தீவிரவாதப் போக்குக்கு எதிராகவும் வெறுப்பை ஒதுக்கித் தள்ளுவதற்காகவும், பயங்கரவாதச் செயல்களுக்குக் காரணமானவற்றை வேரறுப்பதற்காகவும் மத வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டிய தருணம் இது.