2025 செப்டம்பர் 4ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகருக்கு அருகில் உள்ள ராவத்பூரில் நடைபெற்ற மீலாதுந் நபி ஊர்வலத்தின் போது ‘ஐ லவ் முஹம்மத்(ஸல்)’ எனும் பதாகைகளை முஸ்லிம்கள் ஏந்திச் சென்றனர். ‘இந்தப் புதிய வழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும்’ என இந்துத்துவா குழுக்கள் கோரியதைத் தொடர்ந்து காவல்துறை இதனை சட்டவிரோதக் கூட்டம், பகைமையை ஊக்குவித்தல் போன்ற தொடர்பில்லாத பிரிவுகளைப் பயன்படுத்தி கைது வேட்டையைத் தொடங்கியது.
அமைதியான முறையில் நடைபெற்ற ஊர்வலத்தில் தாங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் நபியின் மீதான அன்பை நபியின் பிறந்த தினத்தின் போது ‘நபியை நாங்கள் நேசிக்கிறோம்’ என்று சுவரொட்டி ஒட்டுவதும், பதாகை ஏந்துவதும் எவ்வகையில் மத நிந்தனை, பகைமையை வளர்த்தல் ஆகும்? என்ற வினாவுடன் நாட்டின் பல பகுதிகளிலும் இதற்கான குரல்கள் எழுந்தன.
‘ஐ லவ் முஹம்மத்’ பதாகைகளும், சுவரொட்டிகளும், வலைதளப் பதிவுகளும் பரவின. உத்ரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல இடங்களிலும் நடந்த ‘ஐ லவ் முஹம்மத்’ கூட்டத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்தன. 2025 செப்டம்பர் 23 வரை 1324 முஸ்லிம்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
21 FIRகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மௌலானா தவ்கீர் ரஜா கான் போன்ற சமுதாயத் தலைவர்களைக் குறிவைத்து வழக்குப் பதிவு செய்ததுடன் புல்டோசர் அராஜகத்தை நிகழ்த்தி தவ்கீரின் நெருங்கிய உறவினரான டாக்டர் நஃபீஸின் ராஸா பேலஸ் மண்டபத்தை விதிமீறலைக் காரணம் காட்டி இடித்துத் தள்ளினர்.
இறைத்தூதர் மீதான அன்பை அமைதியாக வெளிப்படுத்துவதைக் குற்றப்படுத்துவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். மதச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட மாபெரும் தாக்குதலாகும். முஸ்லிம்களை அச்சத்திற்கு உள்ளாக்கி தனிமைப்படுத்தும் முயற்சியை பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
‘இந்துக்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்கு மகள் சென்றால் பெற்றோர் அவரது கால்களை உடைக்க வேண்டும்’ என்று முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்கூர் போபாலில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார். இதுபோன்று வெறுப்பரசியலைப் பேசுபவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கமிடக் கட்டாயப்படுத்தி பல முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறைதான் நபி அன்பை வெளிப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தில் ஒவ்வொருவரும் அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதுடன் வழக்குத் தொடுக்கப்பட்டவர்கள் மீதான வழக்கை இரத்துசெய்ய வேண்டும்.
முஹம்மத் நபி முஸ்லிம்களுக்கு மட்டும் வழிகாட்ட வந்த தலைவர் அல்ல. உலக மக்கள் அனைவருக்குமான வழிகாட்டி என்ற பேருண்மையுடன் நபிகளாரின் பெருவாழ்வை வாசிப்பவர்கள் ஒருபோதும் நபி வெறுப்பாளர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் வாசித்தால் அவர்களும் இணைந்தே ‘ஐ லவ் முஹம்மத்’ என்ற பேரன்பிற்குள் வந்து விடுவார்கள்.