ஹிஜ்ரி 1447 ரஜப் 25 & ஷாபான் 11 · 2026 ஜனவரி 16&31
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் டிசம்பர் 27ஆம் தேதி சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பயணம் செய்தார். 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் பட்டாக் கத்திகளுடன் ஏறி ரயில் கதவின் அருகில் அமர்ந்திருந்த சுராஜை வம்பிழுத்து பட்டாக் கத்தியால் குத்துவது, வெட்டுவது போல் படமெடுத்து சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளி-யிட்ட-னர். திருத்தணி ரயில் நிலையம் வந்ததும், சுராஜை ரயிலில் இருந்து கீழே இறக்கி வெளிப்புறப் பகுதிக்கு இழுத்துச் சென்று அடித்து கை, கால், தலை, முகம் என பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி அதையும் படமெடுத்து வெளி-யிட்டனர்.
நான்கு கயவர்களும் கைது செய்யப்பட்டு BNS 109ஆவது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒருவர் பெற்றோரி-டம் ஒப்படைக்கப்பட்டார். போதை தலைக்கேறி இத்தகைய வெறித்தனத்தில் சிறார்கள் ஈடுபட்ட-தாகவும், வடமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றும் பலரும் கூறிவந்த நிலையில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், ‘தாக்குதல் நடத்திய-வர்கள் போதையில் இல்லை எனவும், வடமாநிலத்தவர் என்பதால் அவர் தாக்கப்படவில்லை' என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு நடந்த ஒருசில நாளில் பட்டுப்புடவை வியாபாரம் செய்யும் ஜமால் என்பவர் அதே திருத்தணி ரயில் நிலையத்தில் இரு இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்-பட்-டுள்ளார். இந்த இரு நிகழ்வுகளும் தமிழ்நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பவை. இந்த விவகாரத்தைக் கூடுதல் கவனத்துடன் அணுக வேண்டிய தேவை இருக்கின்றது.
வளர் இளம் பருவத்தினர் மது, போதைக்கு ஆளாவதுடன் வன்முறை வெறியாட்டங்களில் நாட்டம் கொண்டவர்களாகவும், அப்படிச் செய்வதை பெருமையாகக் கருதி ரீல்ஸ் வெளி-யிடுவதும் அதிகரித்து வருகின்றது. இந்தப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வன்முறை, கொலை, பொதுவெளியில் அநாகரிகமாக நடப்பது ஹீரோயிசம் அல்ல அது இழிசெயல், தண்டனைக்-குரிய செயல் என்பதையும் விளங்க வைக்க வேண்டும்.
சக மனிதனின் மீதான மாண்பும், மனித உயிர்களின் மீதான பெருமதியும் குறைந்து வருவதன் விளைவே இத்தகைய குற்றங்கள் பெருகுவதற்குக் காரணம். மதம், மொழி, இனம், மாநில வாரியான பிரிவினைவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வயதைக் காரணம் காட்டி கொடூர மிருக குணம் கொண்டவர்களைச் சிறார்கள் என விடுவிப்பதும், தண்டனையைக் குறைப்பதும் நியாயமான செயல் அல்ல. தவறு செய்தவர்கள் யாராக எந்த வயதினரானாலும் தண்டிக்கப்பட வேண்டும். கட்டற்ற வன்முறைக் காட்சிகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
சீரழியும் இளம் தலைமுறையைக் காக்க மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்-படுத்து-வதுடன் போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்கள் என எல்லாருக்கும் இதில் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. வளர் இளம் தலைமுறையை ஒழுக்க நெறியில் வார்த்தெடுக்க முழுக் கவனமும், முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் அறம் சார்ந்த ஒழுக்கம் மிகுந்த எதிர்காலம் பெரும் சிக்கலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளாகிவிடும்.