மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

மனநல பாதிப்பா? மத வெறுப்பா?
வி.எஸ். முஹம்மத் அமீன், ஜனவரி 1-15, 2026


2025 டிசம்பர் 15ஆம் நாள் பாட்னாவிலுள்ள பீகார் முதலமைச்சரின் செயலகமான சம்வாத்தில் 1,283 ஆயுஷ் மருத்துவர்களுக்குப் பணி நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் ஹிஜாப் அணிந்து நிகாப் எனும் முகத்திரையுடன் பணி ஆணை பெறுவதற்காக வந்திருந்தார். மருத்துவர் நுஸ்ரத் பர்வீனுக்குப் பணி ஆணை வழங்கும்போது நிதிஷ் குமார் நுஸ்ரத்தின் நிகாபைக் குறித்துக் கேள்வி கேட்டார். எதிர்பாராத கேள்வியால் நுஸ்ரத் நிலைகுலைந்து நின்றபோது நிதிஷ் குமார் தம் கைகளால் நிகாபை அகற்ற முயன்றார். அருகில் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே, முதல்வரின் முதன்மைச் செயலர் தீபக் குமார் உள்ளிட்டோர் சிரித்து மகிழ்ந்தனர். நிதிஷ் குமாரின் இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன.

‘நிதிஷின் மனநிலை மிகவும் மோசமடைந்து விட்டதா அல்லது அவர் நூறு விழுக்காடு சங் பரிவாராக மாறிவிட்டாரா?’ என்று ராஷ்டிரிய ஜனதா தளமும், ‘பீகாரில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் வெளிப்படையாகவே இதுபோன்ற நடத்தையில் ஈடுபடுகிறாரெனில் மாநிலத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த இழிவான செயலுக்காக நிதிஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த அநாகரிக செயல் மன்னிக்க முடியாதது’ என்று காங்கிரஸும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

பீகாரைக் கடந்து நாடு முழுவதும் இந்த நிகழ்வு பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியதுடன் உலக அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு இச்செயல் களங்கம் விளைவித்துள்ளது. ‘இந்தியாவில் முஸ்லிம்களின் பாதுகாப்பையும், அவர்கள் முஸ்லிம்களாக வாழ்வதின் நெருக்கடிகளையும் இச்செயல் உணர்த்துகின்றது’ என்று துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஹைதராபாத்தைச் சேர்ந்த காலிதா பர்வீன், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமைய்யா ராணா, வெல்ஃபேர் பார்ட்டியின் வேலூர் மாவட்ட அமைப்பாளர் ஃபஸீஹ் அக்ரம் உள்ளிட்ட பலரும் BNS பிரிவு 74,79,299,302 ஆகிய பிரிவின் கீழ் நிதிஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர்.

‘ஹிஜாபை தொட்டதற்கே இவ்வளவு பெரிய அமளி ஏற்பட்டிருக்கிறது என்றால் அவர் வேறு ஏதாவது செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்?’ என்று உத்தரப்பிரதேச மாநில மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிசாத் தரம் தாழ்ந்து கீழ்த்தரமாகப் பேசியிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. பணியில் இணைவதற்கான இறுதி நாளான டிசம்பர் 20ஆம் நாள் வரையில் நுஸ்ரத் பணியில் இணையவில்லை என பாட்னா சிவில் சர்ஜன் அவினாஷ் குமார் சிங் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து நுஸ்ரத் பர்வீன் தமக்கு இழைக்கப் பட்ட அநீதிக்காக இந்தப் பணி தேவையில்லை எனக் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஜார்கண்ட்டின் சுகாதார அமைச்சர் இர்ஃபான் அன்சாரி, நுஸ்ரத் பர்வீனுக்கு மாதம் ரூபாய் மூன்று லட்சம் சம்பளம், அரசு வீடு, விருப்பமான பணி, முழுப் பாதுகாப்புடன் வேலை செய்யும் ஒரு வாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

நிதிஷ் குமார் கடந்த ஜனவரி காந்தி நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தி விட்டு நீண்ட நேரம் கைதட்டினார். வேறொரு நிகழ்வில் தேசிய கீதம் பாடிக் கொண்டிருந்தபோது தனிச் செயலரிடம் சிரித்துப் பேசினார். ஒரு நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரியின் தலையில் சிறிய பூந்தொட்டியை வைத்தார். அண்மைக் காலமாகவே இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் நிதிஷ் குமார் ஈடுபட்டு வருவதால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்ற வினா தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் எப்படி ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பு வகிக்க முடியும்?

அண்மையில் பீகாரில் முறைகேடான வழியில் வெற்றியைப் பெற்று ஆட்சியில் அமர்ந்த மமதையில் தம் கூட்டாளிகளான ஃபாசிஸ்டுகளைத் திருப்திப்படுத்துவதற்காக நிதிஷ் இதுபோன்ற இழிசெயல்களில் ஈடுபட்டு வருவ தாகவும் நடுநிலையாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எதுவாயினும் நிதிஷ் குமாரின் இச்செயல் கண்டிக்கத்தக்கது. இது தனி மனித உரிமைகளில் அத்துமீறும் செயலாகும். பெண்களை இழிவாகக் கருதும் ஆணாதிக்க மனப் பான்மையின் வெளிப்பாடாகும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனி மனித கண்ணியம், மதச் சுதந்திரத்திற்கு எதிரான செயலாகும். இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாமிய வெறுப்புத் தொழிலின் ஓர் அங்கமாகவே இச்செயல் அரங்கேறியுள்ளது. முஸ்லிம்கள் குறித்த வெறுப்பையும், முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தும் திட்டமாகவுமே வகுப்புவாதிகள் தொடர்ந்து ஹிஜாப் குறித்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாகக் கூறிக் கொண்டு இந்தியாவின் மதச்சார்பின்மையைச் சிதைக்கும் வகுப்புவாதிகளும், அதற்குத் துணை நிற்கும் நிதிஷ் குமார் போன்றவர்களையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். மருத்துவர் நுஸ்ரத் பர்வீனிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த பெண்களிடமும் நிதிஷ் குமார் மன்னிப்புக் கேட்க வேண்டும். முதலமைச்சர் பதவிக்கு சற்றும் தகுதியில்லாத நிதிஷ் குமார் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் பாதுகாப்பையும், மதச் சுதந்திரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்