
நாகலாந்தின் மோன் மாவட்டம் ஒட்டிங் கிராமத்தில் நாகா தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையொட்டி 21ஆவது துணை சிறப்புப் பாதுகாப்புப் படையினர் டிசம்பர் 4 ஆம் நாள் அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர். 15 கிமீ தொலைவிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யும் கோன்யாக் பழங்குடி இன மக்கள் வார விடுமுறைக்காக ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது வாகனத்தில் வந்தவர்கள் தீவிரவாதிகளா பொதுமக்களா என்று பார்க்காமல் பாதுகாப்புப் படையினர் சுட்டுத் தள்ளினர். இறந்த 6 பேரும் அப்பாவித் தொழிலாளர்கள் என்பதை அறிந்ததும் பாதுகாப்புப் படையினர் தார்ப்பாய் மூலம் உடலை மூடி எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது அப்பகுதியிலுள்ள கிராம மக்கள் இராணுவ வீரர்களைத் தாக்கி வாகனத்துக்குத் தீ வைத்தனர். தொடர்ந்து நடந்த மோதலில் கிராம மக்கள் 7 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு மாநில அரசும், இராணுவமும் உத்தரவிட்டுள் ளன. இராணுவத்தின் 21ஆவது துணை சிறப்பு பிரிவினர் மீது நாகாலாந்து போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.11 இலட்சமும், மாநில அரசு ரூ.5 இலட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளன. இச்சம்பவத்திற்கு இராணுவம் வருத்தம் தெரிவித்த நிலையில் ஒன்றிய அரசும் வருத்தம் தெரிவிப்ப தாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். சட்டம் ஒழுங்குக்குப் பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது உரிய எச்சரிக்கைக்குப் பிறகு இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தவும், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் முன் அனுமதியின்றி பாதுகாப்புப் படையினர் சோதனையிடவும், வாரன்ட் ஏதுமின்றி எவரையும் கைது செய்யவும் ஆயுதப்படை அதிகாரச் சட்டம் (AFSPA)இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அவர்கள் யாரைச் சுட்டுக் கொன்றாலும் கூட இதனை எதிர்த்து இச்சட்டம் நடைமுறையிலிருக்கும் பகுதிகளிலுள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியாது. இந்த ஆயுதப்படை அதிகாரச் சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டுதான் 2000ஆம் ஆண்டில் மாலோமில் ஆயுதப்படை துப்பாக்கிச் சூடு நடத்தி 10 பேரைக் கொன்றது. ஜம்மு காஷ்மீர், நாகலாந்து, அசாம் ஆகிய மாநிலங்களிலும், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களின் ஒருசில பகுதிகளிலும் நடைமுறையிலிருக்கும் இச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். இச்சட்டத்தைத் திரும்பப் பெற இரோம் ஷர்மிளா, 16 ஆண்டுகள் போராடினார். இந்தச் சட்டம் அமலில் உள்ள பகுதிகளில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்துள்ளதாகவும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் இந்தச் சட்டத்தை உடனடி யாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் ஜீவன் ரெட்டி ஆணையம் வலியுறுத்தியது. ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் போர்வையில் 1970களில் இருந்து 1,528 போலி என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உஉஙஊஅM அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இது குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட சந்தோஷ் ஹெக்டே ஆணையம் "ஆயுதப்படையால் நடத்தப்பட்ட 6 இல் 5 என்கவுண்டர்கள் உண்மையானவை அல்ல' என அம்பலப்படுத்தியது. உள்துறை அமைச்சரின் வருத்தமும், மனித உரிமை ஆணையத்தின் கண்டிப்பும், ஒன்றிய மாநில அரசின் இழப்பீடும் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட உயிர்களை மீட்டுத் தரப்போவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவை ஆறுதல் அல்ல... நியாயம்! எனவே ஆயுதப்படை அதிகாரச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும்.