மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

கதை

அத்தர்
T.A.அஹமது இப்ராஹீம், 16-31 ஜனவரி 2023


 

வீட்டு வாசலில் வரிசையாக சேர் போட்டிருந்தார்கள். ஊரில் சாமியானா பந்தல் போடும் பழக்கம் நடைமுறையில் இல்லை. கொஞ்சம் தூவானம் போட்டு நின்ற மழைக்குச் சேரில் ஆங்காங்கே மழைத் துளிகள் துளிர்த்து நின்றன. அது அஸர் என்ற மாலைத் தொழுகை முடிந்த நேரம்.

சைக்கிளை ஹாஜா வாப்பா வீட்டு வாசலின் ஓரமாய் நிறுத்தியதும் "மகனுக்குத் தகவல் சொல்லியாச்சாப்பா?' என்று சேரை தன் கைக்குட்டையால் "படப்' என உதறிக்கொண்டே கேட்டார் ஹாஜியார் அப்துர் ரகுமான்.

வெண்மையான ஆடை. இரண்டு கைகளுக்குள் வாஞ்சையாய் ஏந்தி அடங்குமளவுக்குப் பெரிய தாடி. அதில் பாதிக்கும் மேலாய் நரையேறியிருந்தது. இரத்தம் சுண்டித் தெறிக்கும் கன்னத்தின் முகப் பொலிவு, கூடவே மீசையை ஒட்டக் கத்தரித்திருந்தார். ஹாஜியார்தான் எங்கள் முஹல்லா பள்ளிக்குத் தலைமை இமாம். ஜும்ஆ தொழுகையில் நிகழ்த்தும் அவரின் சொற்பொழிவிற்கு மைக்கும், ஸ்பீக்கரும் மேலத்தெரு வரைக்குமே வெடித்துத் தெறிக்கும். ஹாஜியார் வந்து உட்கார்ந்ததுமே அவ்வீட்டு வாசலில் அத்தர் வாசனை சூழ்ந்தது.

"சொல்லியாச்சு. டிக்கெட் போட்டுட்டு சொல்றேன்னு சொல்லிருக்கான். அப்றம்தான் ஜனாஸா எடுக்கணும்' ஹாஜியார் கேட்டதற்கு ஃபக்கீர் வாப்பா வீட்டுத் திண்ணையில் இருந்த யாரோ ஒரு பெரியவர் பதில் சொன்னார்.

நீண்ட நேரமாய் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்த சிலர் எழுந்து வந்து ஹாஜியாருக்குக் கை குலுக்கியதும் ஸலாம் கூறி அவரவர் வீட்டைப் பார்க்க நகன்றனர். ஃபக்கீர் வாப்பா தான் முதலில் கிளம்பிப் போனார். அதன் பின்னர் கூனி அப்துல்லாவும், அவரைத் தொடர்ந்து ரசாக் வாப்பாவும் எழுந்து போனார்கள்.

அஸர் தொழுகை முடிந்து ஒரு மணி நேரத்திற்கும் கூடுதல் ஆகியிருக்கும். பெரியவர்களில் சிலர் அஸருக்கு முன்பிருந்தே அங்கேதான் இருந்தார்கள். ஒரு வீட்டுத் திண்ணையில் இருந்து எழுந்த இஸ்மாயீல் நல்லாப்பா நெஞ்சு வெடிக்கும் அளவிற்கு இருமித் துப்பிவிட்டு பின்னர் தொண்டையைச் செருமியதும் பொடி நடையாய் நடந்து போனார். மழை கொஞ்சம் கோணலாய் தூறியது.

"மகன் வறான்னா ஜனாஸாவை அப்ப காலைலயேதான் எடுக்கணுமா?' அதே தெருவைச் சேர்ந்த மஜீத் வாப்பா கேட்டார். அப்படிக் கேட்கும் பொழுது சேரில் இருந்த சிலர் பக்கத்து வீட்டுத் திண்ணைக்கு இடம்பெயர்ந்தார்கள்.

"நாம எப்டிச் சொல்ல முடியும் மஜீத்தே? அந்தா தானே இருக்கார் அவர் மருமவன். அவருட்டதான் கேட்கணும். இல்லனா சொந்தக்காரங்க யாராவதுதான் சொல்லணும்..'

"அதெல்லாம் பேசியாச்சு வாப்பா. காலைல பத்து மணிக்குத்தான் அடக்கம் பண்றாங்கோ' என்று அங்கிருந்து பதில் குரல் வந்தது.

முஜாஹித் வெளிநாட்டுக்குப் போய் நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தது. தங்கச்சியை நிக்காஹ் செய்து கொடுத்து விட்டு, சொந்தமாய் வீடு கட்டியதும்தான் ஊருக்கு வருவேன் என்று சேக்காளிகளிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தான். சேக்காளிப் பயலுகளில் பாதிப் பேர் சம்சாரிகளாகி விட்டிருந்தார்கள். அவர்கள் செட்டில் முஜாஹிதும், உமர் சித்தீகும் மட்டும்தான் பாக்கி. வாப்பாவிற்கு இருந்த மனையில் முஜாஹித்தாவது பளிங்கு போட்ட இரட்டை மாடி வீட்டைக் கட்டிவிட்டான். உமர் சித்தீகின் நிலைமைதான் பாவம்.

முஜாஹிதின் தம்பி மாலிக் என்ற குட்டிப் பையன் வாசலில் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில் இருந்து அவன் மச்சான் அவனைச் சமாதானம் செய்து கொண்டிருந்தார். ஃபக்கீர் வாப்பா சில்வர் கிளாசில் சாயாவை எடுத்து வந்து மாலிக்கிடம் கொடுத்தார்.

மாலிக் குடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்தான். மச்சான் அவனைக் குடிக்கச் சொல்லி அதட்டு அதட்டவும் மாலிக்கின் அக்கா ருக்கையா வேகமாக வெளியேறி வந்து தம்பியைத் தொட்டணைத்து குடிக்கச் சொன்னாள்.

"குடிக்கலன்னா விடும்மா' என்று மஜீத் வாப்பா சொன்னார்.

"மத்தியானமே சரியா சாப்டல' என்றாள் ருக்கையா.

"குடி' என்று மச்சான் மேலும் அதட்டினார். ருக்கையா மீண்டும் வீட்டிற்குள் போனதும் நல்லம்மா வந்தாள். அது மாலிக்கின் உம்மாவின் உம்மா.

"என் தங்கம்லோ குடி! அழுவக்கூடாது. வாப்பா இல்லனா என்ன ராசா நாங்க இல்லையா? என் மயிலே! ராசாவே!' என்று அவன் பக்கமாய் உட்கார்ந்தாள். மாலிக் வயது சின்னப் பயல்கள் அவன் வீட்டு வாசலில் நின்று அவனையும், ஜன்னல் வழியாக எக்கி எக்கி மாலிக்கின் வாப்பா ஜனாஸாவையும் பார்த்துக் கொண்டார்கள். மச்சானும் ஃபக்கீர் வாப்பாவும் நல்லம்மாவும் மாலிக்கைக் குடிக்கச் சொன்னார்கள். மஜீத் வாப்பாவும் வாசலுக்கு வந்து குடிக்கச் சொன்னார்.

மாலிக் "வாப்பா! வாப்பா!' என்று அழுது முகத்தை முட்டியின் மேல் புதைத்து, கைகளைச் சேர்த்துக் கொண்டான்.

"வே ஃபக்கீரு.. விடு அவனை... நல்ல ஆளு சேர்ந்த நீ.... அவனுக்கு வாப்பா வேணும்லடே சொல்றான்.. சாயா கொடுத்தா கேப்பானா?' என்று மஜீத் வாப்பா சொல்லிவிட்டு வாசலை விட்டுக் கீழே வந்தார்.

"மத்தியானம் ஜும்ஆ தொழுகைல என்கூடத்தான நின்னார். ஹும்! ஹைர்... என்ன செய்ய? அல்லாஹ்வின் நாட்டம்' என்று வாசலில் இறங்கும்போது சொன்னார். படியேறி வந்த ஹாஜியார் மாலிக்கிற்கும் அவன் மச்சானுக்கும் ஆறுதல் சொன்னார்.

"ஹஸரத் நிக்கிறாகோ சாயா குடி' என்று மச்சான் சொல்லும் போதும்கூட, மாலிக் கைகளைச் சேர்த்தபடியே அழுது கிடந்தான்.

"நல்லாத்தான் இருந்தார். மத்தியானம் சாப்பிட்டதும் நெஞ்சு எரியுதுன்னு சொல்லிருக்கார். ஆட்டோ வரதுக்குள்ள ரூஹ் போயிடுச்சு' என்று ஆங்காங்கே மீண்டும் குரல் கேட்டது. "பிடித்தவர்களின் மரணம் என்பதும் ஒரு சோதனைதான்' எனச் சொல்லிவிட்டு ஹாஜியாரும் வீட்டைப் பார்க்க கிளம்பிப் போனார்.

முஜாஹிதிற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று ஜனாஸாவை இஷா தொழுகைக்குப் பின்னர் அடக்கம் செய்து விட்டார்கள்.

இரண்டு நாள்களுக்குப் பின்னர் காரில் முஜாஹித் வந்து இறங்கியதும் வட்டாரத்து ஆண்களும், பெண்களும் அவன் வீட்டிற்கு ஓடி வந்தார்கள். முஜாஹிதைக் கண்டதுமே அவன் தங்கச்சி ருக்கையா துடியாய் துடித்து அழுதாள்.

ஆமினாம்மா இத்தாவில் இருந்தாள். கணவனை இழந்தவர்கள் 4 மாதங்கள் 10 நாள்கள் தனித்து இருப்பதை இத்தா என்பார்கள். பையன் வந்தது தெரிந்தும் தஸ்பீஹ் மணிகளை எண்ணிக் கொண்டு ஆமினாம்மா அழுது கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்தில் "முஜாஹிதே! இங்க வா அழுவக் கூடாது' என்று உம்மா சத்தம் போட்டாள்.

வீட்டில் குழுமி இருந்த எல்லோரும் துஷ்டி கேட்டு கிளம்பிப் போனதும், திரைக்கு வெளியே உட்கார்ந்து வாப்பாவை நினைத்து விசும்பி அழுது கொண்டிருந்தான் முஜாஹித்.

"என்னம்மா ஆச்சு? காலைலதானே எனக்கு வாட்ஸப்ல பேசுச்சு' என்றான். ஆமினாம்மா தஸ்பீஹ் எண்ணிக் கொண்டே கண்ணீர் ததும்பச் சொன்னாள் "அல்லாஹு அஹ்லம்.'

வாட்ஸப்பில் அவன் வாப்பா பேசும் போதெல்லாம் அவனுக்கு நேரம் இருப்பதில்லை. வாப்பா இறந்த அந்த வெள்ளிக்கிழமை காலையில்தான் அவர் பேசி அனுப்பி இருந்தார். தொழுகை முடிந்து வந்ததும் சாயங்காலமாய் பேசலாம் என்று நினைத்திருந்த முஜாஹிதிற்கு மச்சான் வாப்பா இறந்த தகவலைச் சொல்லி இருந்தார்.

"அஸ்ஸலாமு அலைக்கும். யா! முஜாஹித் அன்வர். நல்ல இருக்கியா.. நானும் ம்மாவும், தங்கச்சி, தம்பி, மருமகள் எல்லாரும் நல்ல படியா இருந்து வறோம். இன்ஷா அல்லாஹ் நீ வரும் காலம் நெருங்கிட்டு வருது. வரும்போது அனாவசியச் செலவு எதுவும் செய்ய வேணாம். இருக்குற கடனை அடச்சுட்டு அதுக்கு அப்புறம் விருப்பப்பட்டா உன் தங்கச்சி, மருமகளுக்கு ஏதாவது செஞ்சா போதும். ம்மாக்கு ரெண்டு விக்ஸும் எனக்கு ஓர் அத்தரும், கொஞ்சம் அஜ்வா பேரீச்சம் பழமும் வாங்கிட்டு வா.. தம்பிக்கும் தங்கச்சிக்கும் என்ன வேணும்னு கேட்டுக்க. நல்லம்மாக்கு ரெண்டு கோடாலித் தைலம் கொண்டு வருவியாம்.. ம்மா சொல்லச் சொன்னா. உன் வரவை எதிர்நோக்கிக்      காத்திருக்கிறோம். இன்ஷா அல்லாஹ் பயணங்கள் நல்லபடியா அமைய துஆ செய்றேன்'

திவங்கித் திவங்கி அழுபவனைப் பார்த்ததும் அழுகையை நிறுத்திவிட்டு வந்த நல்லம்மா "என் தங்கம் அழாதப்பா' எனச் சொல்லிவிட்டு அவன் காலுக்கருகிலேயே உட்கார்ந்து கொண்டாள்.

"அஸ்ஸலாமு அலைக்கும்! யா முஜாஹித் அன்வர்' என்ற வாப்பாவின் குரல் அவனைத் தூங்கவே விடவில்லை. சில மாதங்கள் வரைக்குமே புத்தி பேதலித்தவன் போன்று மாறிப்போனான். நேரத்துக்குச் சாப்பிடுவதுமில்லையாம். வாப்பாவின் இறப்புக்குப் பின்னரிலிருந்து முஜாஹித் வாட்ஸப்பில் இல்லை.

 

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்