மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

ஜெகதீப் தங்கர் பதவி விலகலும் துணை ஜனாதிபதி தேர்தலும்
சேயன் இப்ராகிம், செப்டம்பர் 16-30, 2025


கடந்த மூன்று ஆண்டுகளாகத் துணை ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜெகதீப் தங்கர், யாரும் எதிர்பாராதவிதமாகக் கடந்த 21.7.25 அன்று துணை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதி அனுப்பி விட்டுப் போய் விட்டார். அன்றைய தினம் மதியம் 3.30 மணி வரை அவர் மாநிலங்களவையை நடத்திக் கொண்டுதான் இருந்தார்.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கண்டனத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதுதான் அவர் மாநிலங்களவையில் இறுதியாகச் செய்த அறிவிப்பாகும். அறிவித்துச் சென்றவர்தான், பின்னர் அவைக்குத் திரும்பவில்லை. அன்று இரவு 7.30 மணிக்கு அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியதாகச் செய்திகள் வருகின்றன. 21.7.25 அன்று மதியம் 3.30 மணிக்கும் இரவு 7.30 மணிக்குமிடையில் நடந்தது என்ன? எல்லாமே மர்மமாக இருக்கிறது.

பதவி விலகல் கடிதம் கொடுப்பதற்கு முன்னர் அவர் பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ, ஜனாதிபதியையோ சந்தித்ததாகத் தெரியவில்லை. அதற்குப் பின்னரும் அவர் இவர்களைச் சந்திக்கவில்லை. பத்திரிகையாளர்களையும் அவர் சந்திக்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்று வெளியுலகத்திற்குத் தெரியவில்லை. பல நாள்கள் கடந்த பின்னரும், அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாததால், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் வீட்டுக் காவலில் இருப்பதாக அறிக்கைகள் வெளியிட்டனர். இதற்குப் பின்னர்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா வாய் திறந்து ‘அவர் உடல்நல
மில்லாத காரணத்தால் பதவியிலிருந்து விலகினார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்’ என்று தெரிவித்தார்.

அவர் தனது பதவியிலிருந்து விலகியதற்கு உடல் நிலைதான் காரணம் என்றால், அவருக்கு ஏன் ஒரு பிரிவு உபசாரக் கூட்டம் கூட நடத்தப்படவில்லை? பிரதமரையும், ஜனாதிபதியையும் நேரில் சந்திக்க இயலாத அளவிற்கு உடல் நலம் சீர் கெட்டுள்ளதா? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் உரியவர்களிடம் பதில் இல்லை.

இத்தனைக்கும், துணை ஜனாதிபதியாகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் பதவி வகித்த தங்கர் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் மிகவும் விசுவாசமாகவே செயல்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் சில தீர்ப்புகளை கேள்விக்குள்ளாக்கினார். நாடாளுமன்றமே உயர்ந்தது; நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களைச் செல்லாது என்று சொல்ல உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று பொது நிகழ்ச்சிகளில் வெளிப்படையாகவே பேசினார். தலைவராக இருந்து மாநிலங்கவையை அவர் நடத்திய விதம் பெரும் விவாதத்திற்குள்ளாகியது. அப்பட்டமாக, ஆளுங்கட்சியின் பக்கம் நின்றார். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பேசுவதற்கு அவர் போதிய வாய்ப்பளிக்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரை அவையிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தார். எதிர்க்கட்சிகள் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு துணை ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர் மானம் கொண்டு வரப்பட்ட வரலாறு இல்லை. இதுதான் முதல்முறை. எனினும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்திற்கு வரவில்லை.

அவர் 2019 - 2022 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்காள ஆளுநராகப் பதவி வகித்த போது முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்தார். பல சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தினார். இப்படிப்பட்ட பின்னணி கொண்டவரே தங்கர். இந்திய அரசியல் சட்டப்படி நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் ஜனாதிபதி. அடுத்த நிலையில் இருப்பவர் துணை ஜனாதிபதி. நாட்டின் இரண்டõவது மிகப் பெரிய பதவியில் இருக்கும் ஒருவரை இத்தனை இலகுவாகவே பதவி விலகச் சொல்ல முடிகிறதென்றால், அதனை விட ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய ஆபத்து வேறு இருக்க முடியாது. இந்தியப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஜனாதிபதியையும், துணை ஜனாதிபதியையும் எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும்.

நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய போது அன்றைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. அதன் திறப்பு விழாவிற்கு இன்றைய ஜனாதிபதி திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை. ராம்நாத் கோவிந்த் பட்டியலினத்தைச் சார்ந்தவர். திரெளபதி முர்மு பழங்குடி இனத்தவர். இவர்களது சமூகப் பின்னணிதான் புறக்கணிப்புக்குக் காரணமா? இந்த உயர் பதவியில் இருப்பவர்களை பாஜக தலைவர்கள் மதிப்பதில்லை என்பது மிக வெளிப்படையாகவே தெரிகிறது. இவர்கள் தங்களது Yesmanகளாகவே இருக்க வேண்டுமென பாஜக அரசு விரும்புகிறது.

ஜெகதீப் தங்கர் பதவி விலகியதால், துணை ஜனாதிபதி பதவிக்கு 09.09.25 அன்று தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சார்ந்த உறுப்பினர்கள் வாக்களித்துத் துணை ஜனாதிபதியைத்  தேர்ந்தெடுக்க வேண்டும். பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் பெரும்பான்மை இருப்பதால் பாஜக சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் இலகுவில் வெற்றி பெற்று விடுவார்.

பாஜகவின் சார்பாக தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி. இராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார்.  எதிர்க்கட்சிகளின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள்நீதிபதி சுதர்சன ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.  அவர்  ஆந்திராவைச் சார்ந்தவர் (தற்போதைய தெலுங்கானா மாநிலம்) பாஜகவின் வேட்பாளர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர். எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சி வேறு பாடின்றி அவரையே ஆதரிக்க வேண்டுமென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சõமி தொடங்கி, ஜி.கே. வாசன் வரை பேசினர். பாஜக தலைவர்களும் சி.பி. இராதா கிருஷ்ணனையே ஆதரிக்க வேண்டும், இல்லையெனில் அது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் என்ற ரீதியில் பேசினர்.

பாஜகவினருக்கு தமிழர் என்ற உணர்வு வருவது  மகிழ்ச்சிக்குரியதே!  ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது ஒரிசா மாநிலத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு தமிழன் (அதாவது முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்  செயலாளர்  தமிழ்நாட்டைச்சேர்ந்த பாண்டியன் என்ற ஐஏஎஸ் அதிகாரி ஒரிசாவை ஆள அனுமதிக்கலாமா? எனக் கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி அம் மாநிலத்தில் பரப்புரையில் பேசும்போது பூரி ஜெகன்னாதர் ஆலயத்தின் சாவியை தமிழ்நாட்டிற்குக் களவாடிச் சென்று விட்டார்கள் என்று குறிப்பிட்டார். இத்தகைய தமிழர் வெறுப்பாளர்கள் தான் சி.பி. இராதாகிருஷ்ணனுக்குத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். என்ன விநோதம் இது?

சி.பி.இராதாகிருஷ்ணன் ஒரு கடைந் தெடுத்த RSSகாரர். தமிழக பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். இரு முறை (1998, 1999 ஆண்டுகளில்) கோயம் புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்தவர். எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்யாமலேயே பாஜக தலைமை தன்னிச்சையாக இவரது பெயரை அறிவித்தது.

பாஜகவின்  சார்பாக  அறிவிக்கப்பட்ட வேட்பாளரை  எப்படி  எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டுமென்று  கோரிக்கை வைக்க முடியும்? அவர் தமிழர், எனவே தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைக் கட்சி வேறுபாடின்றி ஆதரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பதில் நியாயம் இருக்கிறதா? சி.பி. இராதாகிருஷ்ணன் ஒரு RSSகாரர். பாஜகவின் தலைவர்களில் ஒருவர். இவை இரண்டும் தான் அவரது அடையாளங்கள்.

தமிழர் என்ற அடையாளம் ஒருபோதும் அவரிடம் இருந்தது இல்லை. அப்படி அவர் தன்னை ஒருபோதும் அடையாளப்படுத்திக் கொண்டதும்  இல்லை.  தமிழ்நாட்டின் நலனிற்காக  அவர்  ஒருபோதும்  குரல் கொடுத்தது இல்லை. மேலும் அவர் ஒரு பொது  வேட்பாளர்  அல்ல.  பாஜகவின் வேட்பாளர்.  அவரை  எப்படி  இந்தியா கூட்டணியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க முடியும்? அப்படிப் பார்த்தால் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, ஆந்திராவைச் சார்ந்தவர். எனவே ஆந்திரா, தெலுங்கானா மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரையே ஆதரிக்க வேண்டும். ஆனால் ஆந்திராவின் தெலுங்கு தேசக் கட்சி தனது கூட்டணியின் வேட்பாளரான சி.பி. இராதாகிருஷ்ணனைத் தான் ஆதரிப்போம் என்று கூறி விட்டதே!

தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் தான் போட்டியிடுகின்றனர்.  தமிழர்,  ஆந்திரர் அல்லது இந்திக்காரர் என்று இனப் பிரச்னை எங்கு வருகின்றது? ஒரு வேளை எதிர்க்கட்சிகள் துணை ஜனாதிபதி பதவிக்கு ஒரு தமிழரை நியமித்து, பாஜக அந்தப் பதவிக்கு ஒரு வடமாநிலத்தைச் சார்ந்தவரை நியமித்தால், தமிழக பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சித் தமிழர் வேட்பாளரை ஆதரிப்பார்களா? இல்லை தங்கள் கட்சி அறிவித்துள்ள வடமாநில வேட்பாளரை ஆதரிப்பார்களா?

துணை ஜனாதிபதி பதவி ஓர் அதிகாரமிக்க செல்வாக்கு மிக்க பதவி. அந்தப் பதவிக்கு பாஜக ஒரு தமிழரை நியமனம் செய்திருக்கும் போது அவரை ஆதரிக்க வேண்டாமா? எனவும் சில அப்பாவி அறிவுஜீவிகள் கேள்வி எழுப்புகின்றனர். அது அதிகாரமிக்க, செல்வாக்கு மிக்க பதவிதான். ஆனால் ஜெகதீப் தங்கர் பதவி விலகலின் பின்னணியைச், சூழ்நிலையைப் பார்க்கின்ற போது அது வெறும் அலங்காரப் பதவியே என்பது தெளிவாகிறது.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சொல்கிறபடிதான், விருப்பப்படிதான் துணை ஜனாதிபதி செயல்பட வேண்டும் என்ற நிலை வந்த பிறகு அந்தப் பதவிக்கு எந்தக் கண்ணியமும் இல்லை. அதிகாரமும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு பதவிக்கு முற்றிலும் பொருத்தமானவராக சி.பி. இராதா கிருஷ்ணன் இருக்கலாம். அவரை ஏன் எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்?


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்