மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஆப்கன் இந்திய உறவின் மறுமலர்ச்சி
கப்ளிசேட், நவம்பர் 1-15, 2025


ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மௌலானா அமீர்கான் முத்தகி 2025 அக்டோபர் 9ஆம் தேதி இந்தியா வந்தார். தாலிபான்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று கூறிவந்த நிலையில், தாலிபானின் முக்கியத் தலைவர் ஒருவர் எட்டு நாள்கள் பயணமாக இந்தியா வந்து அரசு உயர்மட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது ஆப்கானிஸ்தான் இந்தியா உறவில் ஒரு மறுமலர்ச்சியான புதிய அத்தியாயமாகும். 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ் தானில் தாலிபான் அரசு பதவி ஏற்றதிலிருந்து இந்தியாவிற்கு வெளியுறவு அமைச்சர் ஒருவர் வருவது இதுவே முதன் முறையாகும்.

இந்தப் பயணத்தின் மூலம் ஆப்கானிஸ்தான் மீதான இந்திய வெளியுறவுக் கொள்கையில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நான்கு ஆண்டுகளுக்கு முன் காபூலில் மூடப்பட்ட இந்திய தூதரகத்தை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளார்.





ஐ.நாவின் தடைகளிலிருந்து தற்காலிக விலக்கு  அளிக்கப்பட்ட  மௌலானா முத்தகி இதுவரை தாலிபான் அரசாங்கத்தை முழுமையாக அங்கீகரித்த ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். இருநாடுகளின் நெருக்கமான ஒத்துழைப்பிற்கும், பிராந்திய வளர்ச்சிக்கும், இந்தச் சந்திப்புகள் வழி வகுக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். ஆப்கானிஸ்தானின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இந்தியா முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் மேலும் அவர் உறுதிப்படுத்தினார்.

மௌலானா  முத்தகி  ‘இந்தியாவை நெருங்கிய நண்பர்’ என்றார். தனது இந்திய வருகை இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் என்றும் கூறினார். ஆப்கானிஸ்தான் குழு, இந்திய வணிகப் பிரதிநிதிகளையும் சந்தித்து  பேச்சுவார்த்தை  நடத்தியது. இந்தியாவின் வலதுசாரி அரசாங்கத்திற்கும், இஸ்லாமிய தாலிபான் அரசாங்கத்திற்கும் இடையே வளர்ந்து வரும் ஈடுபாடு, தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே தொடங்கியது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையே உறவுகள் மோசமடைந்துவரும் நிலையில், ஆப்கன் இந்திய உறவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆப்கன் இந்திய உறவுகள் மூலம், ஆப்கன் பாகிஸ்தானைச் சார்ந்திருக்கவில்லை என்ற செய்தியை இந்தப் பிராந்தியங்களுக்கு வெளிப்படுத்துவதாக அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் குழுவைச் சேர்ந்த ஹார்ஸ் வி பந்த், சிவம் ஷெராவத் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். ஆப்கன்  வெளியுறவு  அமைச்சரின் இந்திய வருகை பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய பின்னடைவாகும் என்று ஙீ தளத்தில் சமூக ஆய்வாளர் பிரம்மா செல்லனி கூறியுள்ளார். இந்த வருகை இந்திய தாலிபான் உறவுகளில் ஒரு மறுசீரமைப்பைக் குறிக்கிறது. இரு நாடுகளும் தங்கள் நாடுகளின் முன்னேற்றமான நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்தனர் என்றார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவையெல்லாம் சாத்தியமே இல்லை என்ற நிலை இருந்தது. 2021ஆம் ஆண்டு மே, ஜுன் மாதங்களில் அமெரிக்கப்  படைகள்  ஆப்கானிஸ் தானில் இருந்து பின்வாங்குவதற்கான காலக்கெடு  நிர்ணயிக்கப்பட்ட  பிறகு, இந்தியக் கொள்கை வட்டாரங்களில் அச்சம் நிலவியது.

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தாலிபான்கள் காபூலை கைப்பற்றியதால், இந்தியா ஆப்கானில் தூதரகங்களை மூடி மாணவர்கள், நோயாளிகள், வணிகர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவருக்கும் விசா வழங்குவதையும் நிறுத்தியது. ஏற்கனவே வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான விசாக்களை ஒரே ஆணையில் ரத்து செய்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டிற்குள் தாலிபான்கள் மீதான இந்தியாவின் பார்வை மாறியது.

ஆப்கனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதை மேற்பார்வையிட ஒரு தொழில்நுட்பக் குழுவை இந்தியா அனுப்பியது. செல்வாக்குமிக்க ஆப்கன் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்தியா விசா வழங்கத் தொடங்கியது. இதுபோன்ற தொடக்கங்கள் இருநாடுகளிடையே நம்பிக்கையை துளிர்விடச் செய்தது.

கடந்த நவம்பர் மாதத்தில் டெல்லியில் ஒரு தூதரை நியமிக்கவும் மும்பையிலும், சில மாதங்களுக்குப் பிறகு ஹைதராபாத்திலும் தூதரகங்களை திறக்கவும் இந்தியா அனுமதித்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் இரு நாடுகளும் தங்கள் உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்வதில் ஈடுபட்டன. இந்த ஆண்டு ஆப்கன் வெளியுறவு அமைச்சர் மௌலானா முத்தகி, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரிடையே துபாயில் ஏற்பட்ட சந்திப்பு மேலும் நம்பிக்கை அளித்தது.

2001ஆம் ஆண்டு அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராகப் போராடும் மற்ற பிரிவுகளை இந்தியா, ரஷ்யா, ஈரானுடன் இணைந்து ஆதரித்தது. தாலிபான்களின் முதல் ஆட்சியின் போதும்(1996-2001) அவர்களது இரண்டாவது ஆட்சியின் தொடக்க காலத்திலும் பாகிஸ்தான் தாலிபான் உறவுகள் சிறப்பாக இருந்தன. அந்த உறவுகள் சீர்கெடத் தொடங்கியது இந்தியாவிற்குப்  பயனுள்ளதாக  அமைந் தது. மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல ஆப்கானிஸ்தான் பாதைகள் இந்தியாவிற்கு மிக முக்கியமானதாகும். குறிப்பாக சரக்கு போக்குவரத்துகளில்  ஆப்கானிஸ்தான் பாதைகள் ஏராளமான நேரங்களையும், எரிபொருளையும் இந்தியாவிற்கு மிச்சப்படுத்துகின்றன.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் உட் பட பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் ஆப்கானிஸ்தானை எதிரி நாடு என்று பகிரங்கமாக அழைத்தனர். ஆப்கானிஸ்தான் பாகிஸ் தான் இடையே நடந்த தாக்குதல்கள், ஏற்பட்ட உயிரிழப்புகள்  மேலும்  இரு  நாடுகளுக் கிடையேயான  உறவுகளைச்  சிக்கலாக்கிஉள்ளது. இது இந்தியாவிற்கு மேலும் ஒரு முன்னேற்றமான நிலையாகும். சீனா, பாகிஸ்தான் செல்வாக்கை எதிர்க்கும் வகையில் ஈரான், மத்திய ஆசியாவில் இந்தியாவின் தொடர்பை அதிகரிக்க தாலிபான்களின் அரசு உதவும் என்று இந்தியா நம்புகிறது.

2025 அக்டோபர் 10 அன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரும் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மௌலானா அமீர் கான் முத்தகியும் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். இருதரப்பினரும் இருநாடுகள் சார்ந்த முக்கியப் பிரச்னைகளையும், பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்தனர். ஆப்கானிஸ்தான் மக்களுடனான பாரம்பரிய, கலாச்சார உறவுகளை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கிடையே நீண்டகால நட்பை அமைச்சர் வலியுறுத்தினார்.  ஆப்கானிஸ்தõன்  மக்களின்  எண் ணங்கள்,  வளர்ச்சி,  தேவைகளை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்ற உறுதிப்பாட்டைத் தெரிவித்தார். பிராந்திய நாடுகளில் இருந்து வெளிப்படும்  அனைத்து பயங்கரவாதச் செயல்களையும் இரு அமைச்சர்களும் கண்டித்தனர். பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை, பரஸ்பர நம்பிக்கைகளை மேம்படுத்துவதன் அவசியத்தை இருவரும் எடுத்துக் கூறினார்கள். இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகளை ஆப்கானிஸ்தான் புரிந்து கொண்டதை இந்திய வெளியுறவு அமைச்சர் பாராட்டினார்.

ஆப்கன் அரசாங்கம் எந்த ஒரு குழுவையோ,  அல்லது  தனிநபரையோ  இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட அனுமதிக்காது என ஆப்கன் அமைச்சர் உறுதிபடக் கூறியது  இந்தியாவிற்கு நிம்மதியை அளித்தது. ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார், குணார் மாகாணங்களில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய அமைச்சர் இரங்கல் தெரிவித்தார்.

பேரழிவிற்கு முதலில் பதில் அளித்த இந்தியாவின்  பங்கையும், நிவாரணப் பொருள்களை வழங்கியதற்கும் நன்றிகளை மௌலானா முத்தகி தெரிவித்தார். ஆப்கானின் வளர்ச்சி, ஒத்துழைப்புத் திட்டங்களில், குறிப்பாக சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் சுகாதார ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, தலசீமியா மையம், நவீன நோயறிதல் மையம், காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் சுகாதார நிறுவனத்தில்(ஐஎஐஇஏ) வெப்ப அமைப்பை மாற்றுவது உள்பட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கூடுதலாக ஆப்கானிஸ்தானில் பக்ராமி மாவட்டத்தில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை,  காபூலில்  ஒரு  புற்றுநோயியல் மையம், புற்றுநோய் தொடர் சிகிச்சைக்கான மையம், பாக்டிகா கோஸ்ட், பாக்டிகா மாகாணங்களில் ஐந்து மகப்பேறு சுகாதார மருத்துவமனைகள் ஆகியவற்றை இந்தியா  கட்டும்.  ஆப்கானியர்களுக்கு 75 செயற்கைக் கால்கள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளன.  இது ஆப்கானிய அரசாங்கத்தாலும், உலக சமூகத்தாலும் பரவலாகப் பாராட்டப்பட்டது.

இந்தியா மருத்துவ உதவிகளையும், உயர் தர சிகிச்சைகளையும் தொடர்ந்து வழங்கும். இந்தியா ஆப்கன் மக்களுக்கு இருபது ஆம்புலன்ஸ்களை வழங்கும். திறன் மேம்பாட்டுத் துறையில் ஐஇஇகீ உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ஆப்கானிஸ்தான்  மாணவர்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. ஐஇஇகீ, பிற உதவித் திட்டங்களின் கீழ் ஆப்கானிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிய பகுதிகளில் கட்டிடங்களை மறுகட்டமைப்பதில் ஆப்கானிஸ்தான் அரசிற்கு உதவ இந்தியா விருப்பம் தெரிவித்து
உள்ளது. உணவு தானியங்கள், சமூக ஆதரவுப் பொருட்கள், எழுது பொருள்கள், பேரிடர் நிவாரணப் பொருட்கள், பூச்சிக் கொல்லிகள் வழங்கும் திட்டங்களை இருதரப்பினரும் மதிப்பாய்வு செய்தனர். அத்தகைய உதவிகளும் தொடர்வதை இந்திய அமைச்சர் உறுதிப்படுத்தினார்.  கலாச்சாரத்  தொடர்புகளை மேம்படுத்துவதில் குறிப்பாக விளையாட்டில், கிரிக் கெட்டில்  ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இருதரப்பினரும் ஆலோசித்தனர்.

இந்தியா ஆப்கானிஸ்தான் விமான சரக்கு போக்குவரத்து வழித்தடம் தொடங்கப்பட்டதை இருதரப்பினரும்  வரவேற்றனர். இது இருதரப்பு வணிகத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஆப்கானிஸ் தானின் சுரங்கத் துறையில் முதலீடு செய்ய ஆப்கானிஸ்தான் தரப்பு இந்திய நிறுவனங்களுக்கு  அழைப்புக்  கொடுத்துள்ளது. ஹெராட்டில்  இந்தியா  ஆப்கானிஸ்தான் நட்பு அணை(சல்மா அணை) கட்டுமானம், பராமரிப்பில் உதவுவதை ஆப்கன் அமைச்சர் வெகுவாகப் பாராட்டினர்.

நீர் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்தவும், ஆப்கானிஸ்தானில் எரிசக்தி தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், விவசாய வளர்ச்சிக்கு நீர்மின் திட்டங்களில் ஒத்துழைக்கவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன. இருதரப்புகளும் தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், தொடர்ந்து ஈடுபாட்டுடன் தொடரவும்  ஒப்புக்கொண்டன.  சபஹார் துறைமுகத்தின் மூலம் வணிகத்தை அதிகரிக்கவும் பேசப்பட்டது.

2025 அக்டோபர் 11ஆம் தேதி ஆப்கன் வெளியுறவு அமைச்சர் மௌலானா அமீர்கான் முத்தகி, உத்திரப்பிரதேசம் சகாரன்பூரிலுள்ள தேவ்பந்த் மதரஸாவில் ஒரு கருத்தரங்க நிகழ்விற்கு வருகை தந்தார். மௌலானா முத்தகிக்கு ஆயிரக்கணக்கான மாணவர்களும், ஆலிம்களும் அன்பான வரவேற்பை அளித்தனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் பொது உரையை ரத்து செய்தனர்.

தனது  பயணத்தில்  ஜமிய்யத் உலமாயே ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதனி உட்பட முக்கிய அறிஞர்களை மௌலானா முத்தகி சந்தித்தார். வரவேற்புக்கு நன்றி தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தான் இந்திய உறவு மேலும் மேம்படும் என்று நம்பிக்கையையும்  தெரிவித்தார். மௌலானா  அமீர்கான் முத்தகி தாலிபான்களின் ஒரு முக்கிய தலைவராவார். தாலிபான்களின் முதல் அமைச்சரவையில் கல்வி, தகவல், கலாச்சாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்து தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.

மௌலானா முத்தகி கம்யூனிஸ புரட்சி யினால்  ஆப்கனிலிருந்து  குடிபெயர்ந்து தனது  குடும்பத்துடன்  பாகிஸ்தான்சென்று அங்கு அகதிகளுக்கான மதரஸாவில் அரபு இலக்கணம், தர்க்கம், சொல்லாட்சி, நீதித்துறை, ஹதீஸ், குர்ஆனியப் பாடங்களைப் பயின்றார். பாகிஸ்தானில் தாருல் உலூம் ஹக்கானியாவில் இஸ்லாமிய உயர்கல்வியைப் பயின்றார். இந்தியாவில் தேவ்பந்த் மதரஸாவில் மௌலானா அவர்கள் பயின்றதாகக் கூறப்பட்டாலும், அதற்கு சரியான தரவுகள் கிடைக்கவில்லை.

அவரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டாலும், பிறகு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்த்து விட்டு, அவரின் இந்திய வருகை இருநாடுகளின் உறவில் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வும் மறுமலர்ச்சியுமாகும்.

ஆப்கானிய வெளியுறவு அமைச்சரின் வருகை வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல அது  தெற்காசியாவின்  மிகப்பெரிய அரசியல்  பொருளாதார  நிகழ்வாகும். ஆப்கானின் கனிம வளங்கள், குறிப்பாக லித்தியம் மிகப்பெரிய வளமாக இன்று மதிக்கப்படுகிறது. இந்தியா வருவதற்குச் சில நாள்களுக்கு முன்பு மௌலானா முத்தகி கனிம, எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய இந்தியாவை அழைத்துள்ளோம் என்றார். இன்றைக்கு லித்தியம் என்பது பேட்டரிகள், கணினி எலக்ட்ரானிக் பொருட்களில் முக்கிய மூலப்பொருளாக இருப்பதால் இன்றைய எலக்ட்ரானிக் யுகத்தில் இது மிகப்பெரிய பொருளாதார வாய்ப்பாகும். இந்த லித்திய வளத்திற்காக மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் பாகிஸ்தானை நோக்கிச் செல்லும் நிலையில், ஆப்கானிஸ்தானோடு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வது இந்தியாவிற்கு மிக அவசியமாகிப்போனது.

அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, ஆப்கனில் கனிம வளங்கள் 83 இலட்சம் கோடிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.இவற்றில் லித்தியம், தாமிரம், கோபால்ட், தங்கம், இரும்பு ஆகிய மண்கூறுகள் அடங்கும். குறிப்பாக கஸ்னி, ஹெரால்ட், லோகர் மாகாணங்களில் லித்தியம், தாமிரத்தின் பெரிய இருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இது 21ஆம் நூற்றாண்டில் ‘வெள்ளை எண்ணெய்’ என்றழைக்கப்படும் லித்தியத்திற்கான மையமாக மாறியுள்ளது.

2021ஆம் ஆண்டு தாலிபான்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ரஷ்யா, சீனா, ஈரான் ஆகியவை ஆப்கனில் ஆதிக்கம் செலுத்த முயலுகின்றன. சீன நிறுவனமான ஜின்ஜியாங் என்ற மத்திய ஆசிய பெட்ரோலியம், எரிவாயு நிறுவனம், ஆப்கானிஸ்தானில் அமுதர்யா பேஸினில் எண்ணெய் எடுப்பதற்காக 540 மில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்க எரிசக்தி துறை 2023 அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் நிலையான நிர்வாகமும், முதலீட்டு கட்டமைப்புகளும் உருவானால், ஆப்கானிஸ்தான் லித்தியம் விநியோகச் சங்கலியின் உலக மையமாக மாறும் என்பது ஆப்கனுக்கு மிகப்பெரிய பொருளாதார வலுவாகும்.

இந்தியா லித்தியத்தை 95% இறக்குமதி செய்கிறது. இப்போது ஆப்கானிஸ்தான் இந்தியா மீது ‘நடைமுறை முதலீட்டு அணுகுமுறையை’ கையாள்கிறது. இது இந்தியாவிற்கு ஒரு புதிய பொருளாதாரச் சந்தையை திறக்கிறது. சபஹார் துறைமுகம், சர்வதேச வடக்கு தெற்கு வழித்தடம் மூலம் ஆப்கானுக்கான வழித்தடங்களை இந்தியா முடுக்கி விட்டுள்ளது. சீனா ஆப்கானிஸ்தானில் நிறைய முதலீடுகளைச் செய்துவரும் நிலையில், இந்தியா ஆப்கானிஸ்தானோடு மிக நெருக்கமான உறவுகளைப் பேணுவது ‘கனிம ராஜதந்திரமாக’ மாறக்கூடும்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்