சண்டை இல்லாத அண்டை வீடு சாத்தியமா என்னும் வினாவிற்கு விடை அளிக்கும் வகையில் சமரசம் 2025 நவம்பர் 1630 இதழில் வெளியான கட்டுரைகள் அமைந்து இருந்தன. இது தொடர்பாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மத்தியத் தலைமையகம் சமூக, தேசிய அமைதிக்குப் பல செயல் திட்டங்களைச் (பக்கம் 26) செய்து வருவது அறிந்து மகிழ்ந்தேன். பாராட்டுதற்கு உரியது.
புரிதல், பொறுமை, மரியாதை, அன்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை, கருணை போன்ற நற்குணங்கள் இருந்தால் யாருடனும் சேர்ந்து வாழ முடியும். அவ்வாறின்றி கோபம், கர்வம், தற்பெருமை, ஆசை, எதற்கெடுத்தாலும் கணக்குப் பார்த்தல் போன்ற தீய குணங்கள் இருந்தால் குடும்பங்களுக்குள்ளே கூடக் குழப்பங்கள் வரலாம் என சமரசம் இதழ் கட்டுரைகளில் கண்டேன்.
மேலே சொல்லப்பட்ட நற்குணங்கள் குறைந்தும், தீய குணங்கள் அதிகரித்தும் வருவதாகப் பொதுவாகச் சொல்லப்படுகிறது. இதில் பலருக்கும் பலவகையான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வேறுபாடுகளின் அளவில் இடம், காலத்தைப் பொறுத்து மாறுபாடுகளும் இருக்கலாம். ஆனால் பொதுவாக மக்களுக்குப் பணம், பொருள்கள் மேல் ஆசை கூடிய அளவிற்கு நல்லொழுக்கங்களின் மேலான நாட்டம் கூடவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். When economic development takes place, the first thing to be eroded is ethics என்பார்கள். ‘ஆசையே எல்லா வகைச் சீரழிவுகளுக்கும் காரணம்’ என்பது அன்றும், இன்றும், என்றும் பொருந்தும் கூற்றாகவே இருக்கிறது.
மனிதர்களின் மேல் தீவிரமாகத் திணிக்கப்படும் கருத்துருவாக்கங்களில் இருந்து தனி மனிதர்கள் விலகிச் செல்வது சற்று சிரமமாகவே உள்ளது. எது நாகரிகம், எது மேம்பாடு, எது சிறந்த வாழ்க்கைத்தரம், வழ்வியல் தரம் என்பன குறித்த கருத்துருவாக்கங்கள், பண்டங்கள், பணத்தை மையமாக வைத்தே உருவாக்கப்படும்போது, மனிதர்களும் மாறிவிடுகிறார்கள், மாறிவருகிறார்கள்.
மக்கள் இன்று குறுகிய மனப்பான்மை படைத்தவர்களாகி விட்டார்கள் என்கிற ஒரு பொதுவான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அது மட்டும் அல்ல. பொதுவாகவே இன்றைய சமூக உறவுகள் (கணவன் மனைவி, உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், அண்டை வீட்டினர் ஆகியோரிடையே) சீர்கெட்டு வருகின்றன என்ற ஒரு குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. சாதாரண பேச்சு வார்த்தைகள் கூட குறைந்துவிட்டன. இந்தச் சீர் கேடுகளுக்கு அரசியல், பொருளாதார, கலாச்சார அழுத்தங்கள்தான் காரணம் என வரலாற்று நிகழ்வுகள் காட்டுகின்றன.
முன்பு கிராமங்களும், தெருக்களும் சாதிவாரியாக, மதவாரியாக அமைந்து இருந்தன; நகரங்களில் கூட பல பகுதிகள் சாதி, மத வாரியாகப் பிரிந்து கிடந்தன; மக்கள் சாதி, மத வாரியாகத் தனித்தனி குழுக்களாகப் பிரிந்தே வாழ்ந்தனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பெரிய உறவு மதில்கள் எழுப்பப்பட்டு இருந்தன. ஆனால் இன்று அந்தப் பிரிவுகள், கட்டுப்பாடுகள், தடைகள் எல்லாம் சிறிது சிறிதாக உடைந்து வருகின்றன. ஒரே தெருவில், அடுக்குமாடிக் கட்டிடங்களுக்குள் பலவகைச் சாதி மதங்களைச் சேர்ந்தவர்கள் இப்போது குடியிருக்கின்றனர். ஆண்களும் பெண்களும் கல்வி நிலையங்கள், நூலகங்கள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் எனப் பல்வேறு பொது இடங்களில் பணி நிமித்தமாகக் காணப்படுகின்றனர்.
ஆண்களும் பெண்களும் சேர்ந்து குடும்பப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். இவை வரவேற்கத்தக்க மாற்றங்கள் எனலாம். ஆனால் அவர்களின் கலாச்சார வேறுபாடுகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் புரிதலில் உள்ள சிரமங்கள் அதிகரித்து விடுகின்றன. பேசினாலே ஏதேனும் பிரச்னை வந்துவிடுமோ (பணம், பொருள் கேட்பார்களோ, குடும்பத்திற்குள் குழப்பம் வந்துவிடுமோ) என்று பயம் கொள்ளும் அளவுக்கு நிலைமை போய்க்கொண்டு இருக்கிறது.
அப்படி இருப்பினும், அங்கே ஏதேனும் பிரச்னை என ஒன்று வந்து விட்டால், அவர்களுக்குள்ளே உள்ள வேறுபாடுகளை மறந்து, ஒருவருக்கொருவர் உதவுவதை எங்கும் இப்போதும் காண முடிகிறது. குறிப்பாக புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் வந்துவிட்டால், மனிதநேயம் மலர்வதை நாம் காண்கிறோம். எடுத்துக்காட்டாக வீடுகளில் மின்சாரம் இருந்தால், அவரவர் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குள் மூழ்கி விடுகிறார்கள்; மின்சாரம் நின்று விட்டால் வீட்டை விட்டு வெளியே வந்து, அண்டை வீட்டாரிடம் (நலமாக இருக்கிறீர்களா, உங்கள் வீட்டில் மின்சாரம் இருக்கிறதா என்று வினவி) பேச ஆரம்பிக்கிறார்கள்.
பொதுவாகவே பொருளாதார வளர்ச்சி வரும்போது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் கூடவே வந்துவிடுகின்றன; குழந்தைகளின் எண்ணிக்கையும் குடும்பங்களின் பன்முகத் தன்மையும் குழந்தைகளுக்குள்ளான உரையாடல்களும் குறைந்துவிடுகின்றன; ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் வந்து விடுகின்றன; வீடுகளுக்குள்ளேயே பேச்சு வார்த்தை குறைந்துவிடுகிறது; இயந்திரங்களின் பயன்பாடு வீடுகளுக்குள் கூடிவிடுகிறது; இயந்திரங்களை இயக்கவும், பழுது பார்க்கவும் அதிக நேரம் தேவைப்படுகிறது; புதிய தொலைதொடர்புச் சாதனங்கள் ஊடகங்களின் உதவியோடு தொலைதூரத்தில் இருக்கின்ற நண்பர்கள், உறவினர்களோடு உரையாட அதிகம் நேரம் தேவைப்படுகிறது.
அலைப்பேசியிலும் தொலைப்பேசியிலும் பேசியே பலர் காலத்தைத் தொலைப்பது மட்டும் இன்றி, சக்தியையும் இழந்துவிடுகின்றனர். அண்டை வீடுகளில் இருந்து கிடைத்த பலன்களை, சேவைகளை வழங்க இன்று பல வணிக நிறுவனங்கள் வீடுகளுக்கு மிக அருகிலேயே, கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்கின்றன. பணத்தைக் கொடுத்தால் எல்லாமே வழங்க வணிக நிறுவனங்கள் வந்துவிட்டன. அண்டை வீட்டு மக்களோடு உரையாடுவதற்கான வாய்ப்பும் தேவையும் குறைந்துவிடுகின்றன; உறவுகளும் நட்பும் தொலைந்து விடுகின்றன.
மேலிருந்து கீழாக இறக்கிவிடப்படுகிற அரசியல், பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் மக்களை மாற்றி வருகின்றன. அண்டை வீடுகளுக்கு இடையேயுள்ள பொருளாதார, சமூக வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் கண்ணுக்குத் தெரியாத சுவர்களாகி விடுகின்றன. விருப்பங்களில் உள்ள வேறுபாடுகள், பிரச்னைகளை உருவாக்கி விடுகின்றன. உதாரணத்திற்கு வெவ்வேறு மொழியறிந்த, உணவுப் பழக்கங்களை, கலாச்சாரங்களைக் கொண்ட அண்டை வீட்டார்களுக்குள் பல சமயங்களில் விருப்பப் பேதங்கள் காணப்படலாம். அவற்றைப் பொறுத்துப் போவதற்கு நல்ல புரிதல், சகிப்புத் தன்மை அவசியம். ஆனால் கடன் வாங்குவதிலும், பணம் சம்பாதிப்பதிலும், பொருள்களை, சொத்துகளை வாங்கிக் குவிப்பதிலும் கண்ணும் கருத்துமாய் இருக்கிறவர்கள் எப்போதுமே பரபரப்பாய், அவசர அவசரமாய் இயங்குவதால் அவர்களிடம் பொறுமை குறைந்துவிடுகிறது. வணிகப் (சொத்துகள் வாங்குதல், விற்றல், கடன் பற்றிய) பேச்சுகள் அன்றி, நட்புடனான உரையாடல்கள் குறைந்துவிடுகின்றன.
அண்டை வீட்டுப் பிரச்னைகளைப் பற்றிய ஆய்வுகள் நீண்டகாலமாகவே நடந்தேறி உள்ளன. A.C.Pigou என்பவர் 1920 ஆம் ஆண்டு எழுதிய The Economics of Welfare என்னும் ஆய்வு நூலில், அண்டை வீடுகளுக்குள் வரும் பிரச்னைகளை ஆராய்ந் துள்ளõர். உதாரணத்திற்கு ஒரு வீட்டில் கரியடுப்பைப் பயன்படுத்தினால், அங்கிருந்து வருகின்ற புகை அருகில் உள்ள வீடுகளுக்குச் செல்லும்; சில நோய்களும் வரலாம்; மருத்துவச் செலவும் அதிகரிக்கலாம். இதனை அவர் Spillover Costs என அழைக்கிறார்.
இச்சூழலில், பாதிக்கப்படுபவர் புகை வரõமல் இருக்க சுற்றுச் சுவரின் உயரத்தை அதிகரிக்கலாமா? அதற்கான செலவை யார் ஏற்றுக்கொள்வது? அப்படிச் செய்தால், கரியடுப்பைப் பயன்படுத்துபவர் வீட்டுக்குள் புகை அதிகமாகும் என்பதால், சுவரின் உயரத்தை அதிகரிக்க மறுப்புத் தெரிவிக்கலாம்; நீதிமன்றம் செல்லலாம். இதனைத் தொடர்ந்து, இதுபோன்ற இன்னும் பல கேள்விகள் எழுந்து அங்கே சுமூகமான உறவின்றிப் போகலாம்.
தம் சாக்கடைகளையும் குப்பைகளையும் பக்கத்து வீட்டுக்குத் தள்ளும் பயில்வான்கள் இப்போது மிகுந்துள்ளார்கள் அல்லவா? அங்கு நிலைமை எப்படி இருக்கும்? எனக்குப் பிடித்த பாடல்களை என் பக்கத்து வீட்டார் சத்தமாக வைத்துக் கேட்டால் (spillover benefits), பிரச்னை ஏதும் வராது; செலவில்லாமல் மகிழ்வாக இருப்பேன் (Free rider என்பார்கள்). அவ்வாறின்றேல் (உதாரணத்திற்கு, பிடிக்காத பாடல்களாக இருந்தால், spillover costs) புரிதல் இல்லாமல் இருந்தால், பிரச்னைகள் வரத்தானே செய்யும்.
ஒருவர் செலவு செய்து சிரமப்பட்டு பூச்செடிகள் வளர்த்தால், அங்கிருந்து அருகில் தேன்கூடு வைத்திருப்பவருக்கு எந்தவிதச் செலவும் இன்றி தேனீக்கள் தேனைக் கொண்டுவந்து சேர்க்கும் (spillover benefits). தேன்கூடு வைத்திருப்பவர் அந்தத் தேனை விற்றுப் பணம் சம்பாதிக்கலாம்; தேன் விற் பனை மூலம் வருமானம் பெறுபவர், பூச் செடிகள் வளர்ப்பவருக்கு செலவை ஈடுகட்ட ஏதேனும் (பண) உதவி செய்வாரா? அப்படிச் செய்தால் நன்று. இல்லை யெனில், அந்த அண்டை வீட்டார் உறவு எப்படி இருக்கும்? இதுபோன்ற பிரச்னைகளின் மீது மீண்டும் ஆய்வு செய்து, Ronald Harry Coase என்பவர் 1960 ஆம் ஆண்டு, The Problem of Social Cost என்னும் நூலை வெளிக்கொணர்ந்துள்ளார்.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான ஆசைகள், விருப்பங்கள், குணங்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றைப் புரிந்து, பொறுத்துப் போனால், அனைவருக்கும் நல்லது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு. ஆனால் நீண்ட காலமாகவே நிலப்பரப்புக்குள்ளும், இடங்களுக்குள்ளும், மக்களுக்குள்ளும் பல கேடு விளைவிக்கும் கோடுகளைப் போட்டு, சுவர்களை எழுப்பி மக்களைக் கூறுபோட்டு, பேதங்களை உருவாக்கி, வாக்குகள் பெற்று அரசியல் செய்ய விரும்புபவர்கள் பண, அரசியல் பலம் பொருந்தியவர்களாக இருக்கும்போது, பாவம் மக்கள் என்ன செய்யமுடியும்?