மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஃப்ளோட்டிலா ஃபலஸ்தீன் நோக்கி படகுகளின் பயணம்
ரியாஸ் மொய்தீன்.கெ , அக்டோபர் 16-31, 2025


இஸ்ரேலிய இராணுவம் ஃபலஸ்தீனை முற்றுகையிட்டு அத்தியாவசியப் பொருட்களான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கி செயற்கைப் பட்டினியை உருவாக்கி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று வருகின்றது. இச்சூழலில் இஸ்ரேல் அரங்கேற்றி வரும் இனப்படுகொலைக்கு எதிராகவும் ஃபலஸ்தீன மக்களுக்காகவும் உலகம் முழுவதும் ஆதரவுக் குரல் பெருகி வருகின்றன.

அண்மையில் உலகெங்கிலும் உள்ள 44 நாடுகளில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய படகுகளில் பல தன்னார்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் இஸ்ரேலிய முற்றுகையை உடைத்து உணவு, அத்தியாவசிய உதவிகளை வழங்க 2025 ஆகஸ்ட் 31 அன்று ஸ்பெயினிலிருந்து குளோபல் சுமுத் புளோட்டிலா என்ற பெயரில் படகுகளில் புறப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் 2025 அக்டோபர் 1, 2ஆம் தேதிகளில் சர்வதேசக் கடலில் இஸ்ரேல் சிறைபிடித்து தடுப்புக் காவலில் வைத்த அறமற்ற செயலுக்கு உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுகின்றன. சிறை பிடிக்கப்பட்டவர்களில் சிலர் இரண்டு நாள்களில் அவர்கள் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

காஸா ஃப்ளோட்டிலாவும் அதன் முந்தைய வரலாறும்

காஸா 2.3 மில்லியன் மக்கள் தொகையுடன் அடர்த்தியான மக்கள் இருப்பைக் கொண்ட ஃபலஸ்தீனின் ஒரு பகுதியாகும். 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹமாஸ் அமைப்பு வெற்றி பெற்றது முதல் காஸாவிற்கு வான்வெளி, பிராந்திய நீர் நிலைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் இஸ்ரேல் கடும் கட்டுப்பாடுகளையும் நெருக்கடிகளையும் கொடுத்து வருகிறது. ஏறத்தாழ 18 ஆண்டுகளாக காஸா முற்றுகையிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

காஸா ஃப்ளோட்டிலாவிற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 2008 முதல் இன்று வரை பலமுறை படகுகளின் மூலம் ஃபலஸ்தீன முற்றுகையை முறியடிக்க முயற்சிக்கப்பட் டுள்ளது.

ஃபளோட்டிலா 2008

2008ஆம் ஆண்டில் ஃப்ரீ காஸா இயக்கம் லிபர்ட்டி, ஃப்ரீ காஸா என்னும் இரண்டு படகுகளில் 44 ஆர்வலர்களுடன் நிவாரண, மருத்துவ, உணவுப் பொருட்களுடன் நூற்றாண்டில் முதல் முறையாக இஸ்ரேலின் முற்றுகையை முறியடித்து வெற்றிகரமாக காஸாவைச் சென்றடைந்தனர்.

ஃபளோட்டிலா 2009

2008ஆம் ஆண்டைப் போலவே 2009ஆம் ஆண்டு பல படகுகளில் காஸா முற்றுகையை முறியடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஹியூமேனிட்டி, ஸ்பிரிட் ஆஃப் ஹியூமேனிட்டி ஆகிய படகுகள் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இம்முறை இஸ்ரேல் திட்டமிட்ட இடைமறிப்புகளைச் செய்து சமூகச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்து நாடு கடத்தின. ஃப்ளோட்டிலா இஸ்ரேலின் இந்த அணுகுமுறையை உலகிற்குக் காட்டிய அதே வேளையில் காஸாவில் நிலவும் மனிதாபிமான சூழலையும் உலகிற்குச் சென்றடையச்செய்தது. 2009ஆம் ஆண்டு இஸ்ரேல் செய்த செயல் முறையை அடுத்தடுத்து நடைபெற்ற முயற்சிகளில் இஸ்ரேல் பயன்படுத்தியது.

2010 காஸா சுதந்திர ஃப்ளோட்டிலா

துருக்கிய தன்னார்வத் தொண்டு நிறுவனமான மனிதாபிமான நிவாரண அறக்கட்டளைக்கு(ஐஏஏ) சொந்தமான மேவி மர்மரா படகில் மனிதாபிமான உதவிகளுடன் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட பயணிகள் காஸா நோக்கிப் பயணித்தனர். 2010 மே 31 அன்று சர்வதேசக் கடலில் இஸ்ரேலிய ராணுவத்தால் அவர்கள் தாக்கப்பட்டனர். அதில் பத்து நபர்கள் கொல்லப்பட்டு பலர் படுகாயம் அடைந்தனர். சர்வதேச விதிகளை மீறிய இந்தச் செயல் இஸ்ரேலுக்குச் சர்வதேச அளவில் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் பெற்றுத் தந்தது. 2013ஆம் ஆண்டு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நடந்த தவறுக்காக துருக்கி மக்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

2011 சுதந்திர ஃப்ளோட்டிலா 2

2010 ஃப்ளோட்டிலாவின் தொடர்ச்சியாக 2011ஆம் ஆண்டு சுதந்திர ஃப்ளோட்டிலா 2 தொடங்கப்பட்டது. இந்தப் பயணத்தில் 10 படகுகளில் 300க்கும் மேற்பட்ட பயணிகள் காஸாவை நோக்கிப் பயணித்தனர்.

இஸ்ரேலின் தொடர் இராஜதந்திர அழுத்தத்தால் பல படகுகள் அவர்கள் நாடுகளிலிருந்து புறப்படுவதற்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டது. இதில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த டிக்னைட் அல் கராமா என்னும் படகு காஸாவிற்கு மிக அருகில் அதாவது 40 கி.மீ தொலைவில் சர்வதேசக் கடலில் இருக்கும் பொழுது இஸ்ரேலிய ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு அஷ்டோத் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

2015 சுதந்திர ஃப்ளோட்டிலா 3

சுதந்திர ஃப்ளோட்டிலா கூட்டமைப்பால் (FFC) சர்வதேச ஆர்வலர்களுடன் காஸா முற்றுøகயை முறியடிப்பதற்கான மூன்றாவது முக்கிய முயற்சியாக நான்கு படகுகளில் சுதந்திர ஃப்ளோட்டிலா 3 தொடங்கப்பட்டது.

இதில் அரபு இஸ்ரேலிய சட்டமன்ற உறுப்பினர் பாஸல் கட்டாஸ், துனிசியாவின் முன்னாள் ஜனாதிபதி மொன்செஃப் மர்சூகி, ஒரு ஐரோப்பிய சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல ஃபலஸ்தீன ஆதரவாளர்கள் பங்கேற்றனர். ஸ்வீடனின் கோதன்பர்க்கைச் சேர்ந்த மரியான் என்னும் படகு ஸ்வீடன் கொடியுடன் முன்னின்று நடத்தியது.

2015 ஜூன் 29 அன்று, காஸா கடற்கரையிலிருந்து சுமார் 100 கடல் மைல் தொலை வில் சர்வதேச நீரில், இஸ்ரேலிய கடற்படையினர் மரியானை வழிமறித்தனர். இஸ்ரேலியப் படையினர் கப்பலில் ஏறி அதை அஷ்டோத் துறைமுகத்திற்குத்  திருப்பி  விட்டனர். கப்பலில் இருந்த ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டனர். சில குழு உறுப்பினர்கள் ஆறு நாள்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

2018 ஃபலஸ்தீனுக்கான எதிர்கால ஃப்ளோட்டிலா

FFCயின் தொடர் முயற்சியின் விளைவாக ஃபலஸ்தீனுக்கான எதிர்கால ஃப்ளோட்டிலா என்னும் 2018 காஸா சுதந்திர ஃப்ளோட்டிலா தொடங்கப்பட்டது.
இந்தப் பயணத்தில் அல் அவ்தா (தி ரிட்டர்ன்), ஃப்ரீடம் ஆகிய இரண்டு முக்கியப் படகுகளும் மைரீட், ஃபாலஸ்டைன் ஆகிய இரண்டு துணைப் படகுகளும் காஸா நோக்கிப் புறப்பட்டன. ஆனால் 2018 ஜூலை 29, ஆகஸ்ட் 3 ஆகிய நாள்களில் அல் அவ்தா, ஃப்ரீடம் ஆகிய இரண்டு படகுகளும் சர்வதேசக் கடல் பகுதியில் இஸ்ரேலியக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டன. கப்பலில் இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். சிலர் இஸ்ரேலியப் படைகளால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

2025 முற்றுகையை உடைக்கும் ‘மனசாட்சி’

மீண்டும் FFC காஸாவின் முதல் மீனவப் பெண்மணி மேட்லீன் குலாப்பின் பெயரிடப்பட்ட மேட்லீன் படகு ஃப்ளோட்டிலா, 2025 ஜூன் 1ஆம் நாள் சிசிலியின் கட்டானியாவிலிருந்து தொடங்கியது. அதில் 12 பயணிகள் உட்பட காலநிலை ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹாசன், அல் ஜசீரா பத்திரிகையாளர் உமர் ஃபயாத், பிற ஆர்வலர்களும் அடங்குவர்.

ஜூன் 9 அன்று, காஸா மீதான முற்றுகையை முறியடிக்க முயன்ற போது, மத்திய தரைக் கடலில் சர்வதேச நீரில் மேட்லீன் கப்பலை இஸ்ரேலியப் படைகள் கைப்பற்றின. அதில் சுதந்திர ஃப்ளோட்டிலா கூட்டணியைச் சேர்ந்த 12 ஆர்வலர்கள் சர்வதேச நீரில் கடத்தப்பட்டு இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

சுமித் ஃப்ளோட்டிலா

2025 ஆகஸ்ட் 31 அன்று ஸ்பெயினிலிருந்து  புறப்பட்ட  குளோபல்  சுமுத் ஃப்ளோட்டிலா, வரலாற்றில் இன்று வரை காஸாவிற்குச் செல்லும் மிகப்பெரிய கடல் பயணமாகும். இது 2025 ஜூலையில் சுதந்திர ஃப்ளோட்டிலா கூட்டணி, காஸாவிற்கான உலகளாவிய இயக்கம், மக்ரெப் சுமுத் ஃப்ளோட்டிலா, சுமுத் நுசாந்தாரா ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்தது. 50க்கும் மேற்பட்ட படகுகளில் 44 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நபர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

சர்வதேச விதிகளை மீறும் இஸ்ரேல்

கடலோர நாடுகள் தங்கள் கரைக்கு மிக அருகில் உள்ள கடல் பகுதிகளைக் கட்டுப்படுத்துகின்றன.  அவை  பிராந்திய  நீர் நிலைகள்  என்று அழைக்கப்படுகின்றன.  அவை கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்கள் (22 கி.மீ) நீண்டுள்ளன. இந்த மண்டலத்தில், ஒரு நாட்டிற்கு அதன் நிலத்தைப் போலவே முழு இறையாண்மை உள்ளது.

அதற்கு அப்பாலும் கூட நீர், கடல் தளம் உட்பட 200 கடல் மைல்கள் (370 கிமீ) வரை கடல் உரிமைகளை அந்த நாடு கொண்டுள்ளது. இந்தப் பகுதி பிரத்யேக பொருளாதார மண்டலம் (EEZ) என்று அழைக்கப்படுகிறது. EEZ இல் நாடுகள் மீன் பிடித்தல், சுரங்கம், துளையிடுதல், பிற எரிசக்தித் திட்டங்கள் போன்ற நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தலாம். அதே நேரத்தில் மற்ற நாடுகள் அந்தக் கடல்வழியைப் பயன்படுத்துவதை அனுமதிக்க வேண்டும்.

ஒரு நாட்டின் பிராந்திய நீர் நிலைகள், பொருளாதார மண்டலங்களின் உரிமையைத் தாண்டி சர்வதேச நீர்நிலைகள் 64 விழுக்காடு உள்ளன. அவை சர்வதேச ஒப்பந்தங்களால் நிர்வகிக்கப்படுகிறது. அதனை ஒரு நாட்டால் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் 2010 முதல் பல ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கப்பல்கள் காஸா முற்றுகையைத் தகர்க்க முயற்சித்தன. அவை அனைத்தும் சர்வதேசக் கடலில் வைத்தே இஸ்ரேலால் இடைமறிக்கப்பட்டன அல்லது தாக்கப்பட்டன.

இதில் மிகவும் கொடியது 2010 மே 31 அன்று இஸ்ரேலுக்கு உரிமையே இல்லாத சர்வதேசக் கடல் பகுதியில் இருந்த மாவி மர்மராவை  இஸ்ரேலிய  இராணுவம் சுற்றிவளைத்து 10 சமூக ஆர்வலர்களைக் கொன்றது. இது உலகளாவிய சீற்றத்தைத் தூண்டியதுடன் இஸ்ரேல் துருக்கி உறவைக் கடுமையாகப் பாதித்தது.

‘சுதந்திர கடற்படை சர்வதேச நீரில் சுதந்திரமாகச் செல்லும் உரிமையைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் அதன் வழித்தடச் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது. இது சர்வதேசச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது’ என்று ஐ.நா நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சுமுத் புளோட்டிலா சர்வதேச நீர்நிலைகள் வழியாகவும், ஃபலஸ்தீன பிராந்திய நீர்நிலைகளிலும் பயணித்து வந்தது. அங்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும், பயணிப்பதற்கும்  சட்டப்பூர்வ  உரிமை உள்ளது எனக் கூறினர்.

ஆழ்கடல் சட்டங்கள் சொல்வது என்ன?

ஆழ்கடல் சட்டங்கள் 1982ஆம் ஆண்டு ஐ.நா கடல் சட்டம் தொடர்பான மாநாட்டால் (UNCLOS) நிர்வகிக்கப்படுகின்றன. அனைத்து நாடுகளும்  ஆழ்கடல்களில்  கப்பல்கள் சுதந்திரமாகச்  செல்லவும்,  விமானங்கள் சுதந்திரமாகப் பறக்கவும் முடியும் என்று அது கூறுகிறது. கடலுக்கு அடியில் கேபிள்கள், குழாய்களை அமைப்பதற்கும், மீன்பிடித்தல், அறிவியல் ஆராய்ச்சி, தீவுகளை நிர்மாணிப்பதற்கும் அனுமதிக்கிறது. இவை மூன்றும் சர்வதேச ஒப்பந்தங்கள், சட்டங்களுக்கு உட்பட்டவை.

கடற்கொள்ளை, பிற அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கப்பல்களைத் தவிர, ஆழ்கடலில் இருக்கும் கப் பல்கள் அவை பறக்கும் கொடியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணியின் கூற்றுப்படி, இந்தப் பயணம் சட்டபூர்வமானது மட்டுமல்லாமல், சர்வதேச சட்டக் கருவிகளின் விரிவான தொகுப்பின் கீழ் பாதுகாக்கப்படுகிறது என்பதும் இதில் அடங்கும் எனக் கூறினர்.

இஸ்ரேலின் அநீதிக்கு எதிராக ஒன்று திரளும் மக்கள்

உலகெங்கிலும்  இருக்கும்  மக்கள் சுமித் ஃப்ளோட்டிலா தொடங்கியது முதல் அதன் ஒவ்வொரு நகர்வையும் கவனிப்பது மட்டுமின்றி படகுகளில் இருந்து நேரடி வீடியோவை இணையதளத்தில் பார்த்து வருகின்றனர். ஆதலால் காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டு சென்ற ஆர்வலர்களை இஸ்ரேல் சட்டவிரோதமாகத் தடுத்து கைது செய்தது உலக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

பார்சிலோனாவில்  சுமார்  15000 மக்கள் ஃபலஸ்தீன ஆதரவு முழக்கங்களை எழுப்பியபடி அணிவகுத்துச் சென்றனர். கடலில் தடுத்து நிறுத்தப்பட்டு நாடு கடத்தப் பட்டதில் முன்னாள் பார்சிலோனா மேயர் அடா கோலா வும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்தின் டப்ளினில் உள்ள அயர்லாந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே நூற் றுக்கணக்கான ஃபலஸ்தீன ஆதரவாளர்கள்  கூடினர். மிரியம் மெக்னலியின் மகள் சுமித்  ஃப்ளோட்டிலாவில் பயணிக்கிறார். ‘என் மகளுக்காக நான் மிகவும் கவலைப்படுகிறேன், ஆனால் அவளைப் பற்றியும் அவள் செய்வதைப் பற்றியும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கடுமையான ஆபத்தை எதிர்கொண்டு மனிதகுலத்திற்காக அவள் எழுந்து நிற்கிறாள்’ என்று மெக்னல் கூறினார்.

பாரீசில்  ஆயிரக்கணக்கான  மக்கள் டெலா ரிபப்ளிக்கில் கூடினர். அதேபோல் இஸ்ரேலுக்கு இராணுவ உதிரி பாகங்களை விற்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆயுத உற்பத்தி செய்யும் யூரோ லிங்க் செல்லும் வழியை மறித்ததால் மார்சேய் பகுதியில் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஃப்ளோட்டிலாவிற்கு ஆதரவாக இத்தாலியின் முக்கிய தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். இது முக்கிய நகரங்களுக்கும் பரவின. ரோமில் 10,000 பேர் ‘இனப்படுகொலை நடத்தும் இயந்திரம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட  வேண்டும்  அதற்காக நாங்கள் அனைத்தையும் தடுக்கத் தயாராக இருக்கிறோம்’ என்று முழங்கினர். பெர்லின், தி ஹேக், துனிஸ், பிரேசிலியா, பியூனஸ் அயர்ஸ், சிட்னி, இஸ்தான்புல் ஆகிய நாடுகளில் மக்கள் பெருந்திரளாக இஸ்ரேலிய தூதரகத்திற்கு  எதிராகப் போராட்டங்களை நடத்தினர்.

2008இல் இரண்டு படகுகளில் தொடங்கிய ஃப்ளோட்டிலா இன்று 40 படகுகளாக மாறி உள்ளது. 2010இல் இஸ்ரேல் பத்து நபர்களைக் கொலை செய்த பின்பும் துளியும் அச்சமின்றி அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான  மக்கள் தொடர்ச்சியாக ஃப்ளோட்டிலாவில் காஸா நோக்கி பய ணிக்க முன் வருகின்றனர்.

பல  ஆண்டுகளாகக் காஸாவை  முற்றுகையிட்டு ஒரு திறந்தவெளிச் சிறை சாலையாக இஸ்ரேல் வைத்திருப்பதை அதிகார பலத்துடன் ஊடகங்களிலிருந்தும் உலக மக்களிடமிருந்தும் மறைத்து வைத்திருந்த இஸ்ரேலின் முகத்திரை தொடர்ச்சியாக கிழிக்கப்பட்டு வருகிறது.

இஸ்ரேலால் பரப்பப்பட்ட கட்டுக் கதை களைக் கடந்து முஸ்லிம்களாலும் மிகச் சில சமூக ஆர்வலர்களாலும் மட்டுமே பேசப் பட்டு வந்த ஃபலஸ்தீனப் பிரச்னை இப்பொழுது உலக மக்களால் பேசப்பட்டு வருகிறது. ஃப்ளோட்டிலா ஃபலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டு சேர்த்ததோ இல்லையோ உலக மக்களுக்கு ஃபலஸ்தீன மக்களின் வலிகளையும் இஸ்ரேலின் கொடூர முகத்தையும் கொண்டு சேர்த்துள்ளது.

சர்வதேச அமைப்புகளும் உலக நாடுகளும் இஸ்ரேல் செய்து வரும் இனப்படுகொலையை வேடிக்கை பார்க்கும் நிலையில் பொதுமக்களாகிய நாம் ஏதும் செய்ய இயலாது என்பதை உடைத்து சிறிய அளவிலோ பெரிய அளவிலோ ஃபலஸ்தீனுக்காக நாம் செய்யும் ஒரு செயல் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்பதை ஃப்ளோட்டிலா உறுதியாக்கி உள்ளது.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்