மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இந்த நாடு நாய்களுக்கானதா ?
புதுமடம் ஜாஃபர் அலீ, 1-15 அக்டோபர் 2025


நாய்க் காதலர்கள், மேட்டுக்குடி உயர்தரக் கார்களில் பவனி வருபவர்கள், ஆண்டில் இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே இந்தியாவில் இருப்பவர்கள், பங்களாக்களில் தனிமையில் வசிப்பவர்கள், நாய்களை நம்பி உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நடத்துபவர்கள், வெளிநாடுகளில் இருந்து நாய் இறக்குமதி செய்பவர்கள் என இந்தத் தொழிலில் ரூபாய் 3600 கோடியைத் தாண்டி வர்த்தகம் செய்யும் கார்ப்பரேட்டுகள், தெரு நாய்களால் எந்தப் பாதிப்பும் இல்லாதவர்கள், தெருக்களில் நடக்காதவர்கள், கடவுளின் திருப்தியைப் பெறுவதற்கும், புண்ணியத்தை அள்ளிக் கொள்வதற்கும் நாய்களுக்கு உணவளிக்கிறோம் என்று சொல்பவர்கள், மனிதர்களைக் குறித்து அக்கறையற்றவர்கள் இவர்கள்தாம் நாய் ஆதரவாளர்கள்.


சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான ஆட்டோ ஓட்டுநர் முஹம்மது நஸ்ருதீன். கடந்த ஜூலை 28ஆம் தேதி மீர்சாஹிப் பேட்டை மார்க்கெட் பகுதியில் தெரு நாய் ஒன்று நஸ்ருதீனைக் கடித்தது. உடனே ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசி போட்டதுடன் தொடர் சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 13ஆம் தேதி இறந்து விட்டார்.

செப்டம்பர் 14ஆம் தேதி அதே ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற வயதான பெண்மணியை அவரது பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் கடித்து உள்ளது. இது தொடர்பாகக் காவல்துறையில் அவர் புகார் அளித்துள்ளார்.

2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் மட்டும் 3.60 இலட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரேபிஸ் பாதிப்பால் 22 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாய்க் கடியைத் தடுப்பதற்கும், நாய்களின் இனப்பெருக்கத்தைக்  கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 1.5 கோடி நாய்கள் இருப்பதா கவும் ஆண்டுக்கு 37 இலட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாகவும் அரசு ஆவ ணங்கள் தெரிவிக்கின்றன. நாள்தோறும், 10,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படு வதாகவும், ஆண்டுதோறும் இலட்சத்திற்கும் மேற்பட்டோர்  நாய்த்  தொற்றுநோய் தொடர்பாக இறப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தரவுகள் முழுமையாக இல்லை. பல மாநிலங்களில் இது தொடர்பான புள்ளி விவரங்கள் சரியாக இல்லை. அரசு கொடுக்கும் புள்ளி விவரத்திற்கும் மேலாகத்தான் பாதிப்புகள் இருக்கும் என்று தெரு நாய்களால் பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.

நாய்ப் பயன்பாடு

மனிதன் காட்டுக்குச் சென்று வேட்டையாடும் போது துணைக்கு பாதுகாப்புக்காக  மனிதர்களால் முறைப்படுத்தப்பட்டு நாய் அழைத்துச் செல்லப்பட்டது. காட்டுக்குள் மறைந்திருக்கும் மிருகங்களை உணர்ந்து மோப்ப சக்தியினால் எச்சரிக்கை செய்யும் என்பதால் நாய் வேட்டைக்கு உதவியது. அதன் பிறகு தோட்டங்களில்  நாய்கள்  காவல் காக்கப் பயன்படுத்தப்பட்டது.  காவல்துறையினருக்கு குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு மோப்ப நாய்கள் உதவிகள் தேவைப்பட்டன. தற்போது நவீன தொழில்நுட்பத்தால் இந்தத் தேவையும் குறைந்து கொண்டிருக்கிறது.

தெருநாய்கள் பெருக்கத்திற்குக் காரணம்

நகரமயமானதினால்  வேட்டைக்கு, தோட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நாய் இன்று தெருவில் விடப்படுகிறது. இதுதான் இன்று தெரு நாய் பிரச்னையாக உருவெடுத்து இந்தியாவின் தலையாயப் பிரச் னையாக மாறி விட்டது. உலகத்தில் வேறு எங்கும் தெருவில் நாய்களைப் பார்க்க முடியாது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையான அனுமதி பெற்று மிகவும் பொறுப்புடன் வளர்க்கப்படுகிறது. சில சமயங்களில் உரிமையாளர்களால் கைவிடப்படும் நாய்களை அரசு தனது பராமரிப்பில் எடுத்துக் கொள்கிறது. இதுதான் உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. தெரு நாய்கள் என்ற சொல்லாடல் இந்தியாவில் மட்டுமே உள்ளது.

நாய்கள் வசிக்கும் இடம்

இறைச்சி, மீன் கடைகள் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதிகள், சென்னை போன்ற நகரங்களில் விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் குறுகலான தெருக்கள், குப்பைத் தொட்டிகள் அதிகம் உள்ள பகுதியில் தான் நாய்கள் அதிகமாக உள்ளது.

நாய்க்கடியினால் பாதிக்கப்படுபவர்கள்

உணவு டெலிவரி செய்பவர்கள் சென்னையில்  மட்டும்  கடந்த ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உணவு விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவிக்கிறது. முதியவர்கள், குழந்தைகள், அதிகாலை எழுந்து காய்கறி வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் சிறு வியா பாரிகள், பேப்பர், பால் போன்றவற்றை வீடு வீடாகக் கொண்டு செல்பவர்கள், காலையில் நடைபயிற்சியில் ஈடுபடுவோர் ஆகியோர் தெருநாய்களால் பெரும் தொல்லைக்கு ஆளாகின்றனர்.

இவற்றையெல்லாம்  தாண்டி  எந்தப் புள்ளி விவரமும் இல்லாமல் ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. அது அரசுக்குத் தெரியுமா என்று கூடத் தெரியாது. அவர்கள்தான் போதை மனிதர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர், வயது முதிர்ந்த அநாதைகள், தெரு வோரச் சிறுவர்கள். அவர்களை நாய் கடித்தாலும் அவர்களால் சொல்ல முடியாது. அதற்கான சிகிச்சையும் அவர்களுக்குக் கிடையாது. என்ன காரணத்துக்காக நாம் இறக்கிறோம் என்பதைக் கூட அறியாமல் அவர்கள் இறக்கின்றார்கள்.

நாய்களால் ஏற்படும் பிரச்னைகள்

நாய்க்கடியினால்  விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின்றன. சாலையின் குறுக்கே நாய்கள் ஓடி வந்து வாகனத்தில் சிக்கிக்கொள்வதால் பல விபத்துகள் நேரிடுகின்றன. இதனால் பல உயிர்கள் பலியாகியுள்ளன. விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தங்கள் வாழ்வை இழந்தவர்கள் ஏராளம். விபத்தினால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கும் பலர் ஆளாகியுள்ளனர். நாயின் வாயிலிருந்து வழியும் எச்சில் கிருமிகளைப் பரப்பி நோய்த் தொற்றை ஏற்படுத்துகிறது. தெருக்களில் நாய்களின் கழிவுகளால் தூய்மைப் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் அது குடிநீருடன் கலந்து மிகப் பெரிய சுகாதாரக் கேட்டை விளைவிக்கின்றன.

நாய் ஆதரவாளர்கள்

நாய்க் காதலர்கள், மேட்டுக்குடி உயர்தரக் கார்களில் பவனி வருபவர்கள், ஆண்டில் இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே இந்தியாவில் இருப்பவர்கள், பங்களாக்களில் தனிமையில் வசிப்பவர்கள், நாய்களை நம்பி உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நடத்துபவர்கள், வெளிநாடுகளில் இருந்து நாய் இறக்குமதி செய்பவர்கள் என இந்தத் தொழிலில் ரூபாய் 3600 கோடியைத் தாண்டி வர்த்தகம் செய்யும் கார்ப்பரேட்டுகள், தெரு நாய்களால் எந்தப் பாதிப்பும் இல்லாதவர்கள், தெருக்களில் நடக்காதவர்கள், கடவுளின் திருப்தியைப் பெறுவதற்கும், புண்ணியத்தை அள்ளிக் கொள்வதற்கும் நாய்களுக்கு உணவளிக்கிறோம் என்று சொல்பவர்கள், மனிதர்களைக் குறித்து அக்கறையற்றவர்கள் இவர்கள்தாம் நாய் ஆதரவாளர்கள். இவர்கள்தான் பிரபல வழக்கறிஞர்களுக்குக் கோடியாய் அள்ளிக் கொடுத்து நாய்களைக் காப்பாற்றி வருகின்றார்கள்.

இந்தியாவில்  பெரும்பான்மையான

சாமானியர்கள் இப்பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர். சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தொடர்ந்து போராடினாலும் நாய்களை ஒழிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மிகவும் சொற்பமான எண்ணிக்கை உடையவர்கள் நாய்க்கு ஆதராவாக இருந்தாலும் அவர்கள் செல்வாக்கு  மிக்கவர்கள்  என்பதால் எளிதில் அவர்கள் முட்டுக்கட்டை போட்டு விடுகின்றனர்.

நாய்த் தடுப்புச் சட்டம்

உலகின்  பெரும்பாலான  நாடுகளில் விலங்குகளைக் கையாளுவதற்கான தனி சட்ட விதிமுறைகள், தனி அலுவலகம் அதற் கான பதிவு உள்ளன. கயிற்றில் கட்டப்பட்ட நாய்களுக்கு அவற்றின் காப்பாளர்களே பொறுப்பு, அவ்வாறு இல்லாத பட்சத்தில் நாய்களிடமிருந்து  மக்களைக்  காக்கும் பொறுப்பு.  அரசிடம்தான்  என்றெல்லாம் விதிகள் இருக்கிறன. விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம், (PCA) நாய்கள் பிறப்புக் கட்டுப்பாடு விதிகள் 2001 ஆகியவை தெரு நாய்களின் எண்ணிக்கையைக்  கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக இச்சட்டத்தில் பெரிதாக இல்லை.

நாய்கள் பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள் 2022இல்  முன்மொழியப்பட்டிருக்கும் வரைவு விதிகள், கருத்தடை தடுப்பூசி செலுத்துவதில் நடைமுறை மாற்றங்களை மட்டுமே முன்வைக்கின்றன. குணப்படுத்த முடியாத, நோய் வாய்ப்பட்ட, உயிருக்கு ஆபத்தான நாய்களை மட்டுமே கருணைக் கொலை செய்ய சட்டம் அனுமதிக்கிறது; இதைத்தான் தற்போதுள்ள விதிகளும் அனுமதிக்கின்றன. இந்த விதிகள் இரண்டுமே கவனிக்கப்படாத தெரு நாய்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், பிரச்னையின் தீவிரத்திற்கேற்ப அதற்கான செயல் திட்டங்கள் பெரிய அளவில் இல்லை.

நாய்களுக்கு மைக்ரோ சிப்

தமிழ்நாடு அரசு தெருநாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை  எடுத்து  வருகிறது.  சென்னை மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள் மூலம் கடந்த மாதத்தில் 46,122 வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 2021 முதல் இதுவரை 1.34 இலட்சம் நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசியும், 71,475 நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாய்களைப் பிடித்து விடுவிப்பதை உறுதி செய்வதற்காக கிகீ குறியீடு காலர்கள், மைக்ரோசிப் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பாக 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. தெருநாய் தொல்லைகள் தொடர்பான புகார்களை 1913 என்ற உதவி எண்ணிலும், மாநகராட்சியின் 9445061913 என்ற வாட்ஸ்அப் வாயிலாகவும் புகார் அளிக்கலாம்.

தீர்வு என்ன?

தெரு நாய்களுக்கு உணவளிப்போரைத் தண்டிக்க வேண்டும். இறைச்சிக் கடைகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் போன்றவை உணவு, இறைச்சியின் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். தெரு நாய்களுக்குக் கருத்தடை தடுப்பூசி, கண்காணிப்புகளை அதிகப்படுத்த வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அதற்கõன வைப்புத் தொகை கட்டி அனுமதி பெற வேண்டும். அவர்களுக்கு நாய் தேவை இல்லை என்றால் அடுத்த ஏரியாவில் தெருவில் விட்டுவிடுகிறார்கள். அப்படி விடப்படுகின்ற நாய்கள் அரசு வைப்புத் தொகையில் இருந்து பராமரிக்க வேண்டும். நாய் வளர்ப்போர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கடுமையான வழிமுறைகளை அரசு பரிசீலிக்க வேண்டும். தெரு நாய்களால் மனித உயிர்கள் பலியாவதை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்