‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அது தொடர்பான ஒரு சிறப்பு விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்றுள்ளது. இந்தச் சிறப்பு விவாதத்திற்கான முன்மொழிவை அரசே மேற்கொண்டது. இந்த விவாதத்தின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் மீது குறிப்பாக முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு மீது கடும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். இந்தப் பாடலை முழுமையாகப் பாடவிடாமல் அதன் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாட ஜவஹர்லால் நேரு முடிவெடுத்தார் என்பதே அவர்களது குற்றச்சாட்டு.
நாடு விடுதலை அடைந்த போது, தேசிய கீதமாக எந்தப் பாடலைத் தேர்ந்தெடுப்பது என்ற விவாதம் நடைபெற்றது. வங்காளக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் ‘ஜன கண மன’, மகாகவி அல்லாமா இக்பாலின் ‘சாரே சஹான்சே அச்சா’, வங்கக் கவி பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் ‘வந்தே மாதரம்’ ஆகிய மூன்று பாடல்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முதல் சுற்றிலேயே அல்லாமா இக்பாலின் பாடல் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமிருந்த இரண்டு பாடல்களில் ஜன கண மன தேசிய கீதமாகவும், வந்தே மாதரம் தேசியப் பாடலாகவும் அறிவிக்கப்பட்டது. 24.1.1950 அன்று இதற்கான அறிவிப்பு வெளியானது.
வந்தே மாதரம் பாடலை தொடக்கத்திலிருந்தே முஸ்லிம்கள் எதிர்த்து வந்தனர். இந்தப் பாடலில் உள்ள ‘தாயே உன்னை வணங்குகிறேன்’ என்ற வரிகளை முஸ்லிம்கள் ஏற்கவில்லை. எல்லாம் வல்ல அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்காத முஸ்லிம்கள் தாயை வணங்குகிறோம் என்பதை ஏற்க மறுத்தனர். நாட்டை நேசிப்பது வேறு; வணங்குவது என்பது வேறு; முஸ்லிம்களாகிய நாங்கள் நாட்டை நேசிக்கிறோம். ஆனால் அதை வணங்க மாட்டோம் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்தனர். மேலும் இந்தப் பாடலின் இறுதி மூன்று பத்திகளில் இந்திய நாட்டை பெண் தெய்வங்களான காளியோடும், லட்சுமியோடும் ஒப்பிட்டு வரிகள் உள்ளன. இதனையும் முஸ்லிம்கள் ஆட்சேபித்தனர்.
வங்கக் கவிஞர் பக்கிம் சந்திர சாட்டர்ஜி 1876ஆம் ஆண்டு இந்தப் பாடலை எழுதினார். 1882ஆம் ஆண்டு ஆனந்த மடம் என்ற நாவலை அவர் எழுதிய போது இந்தப் பாடலையும் அதில் இணைத்தார். இந்த நாவல் முழுவதும் முஸ்லிம் விரோதக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. முஸ்லிம்கள் நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டிவர்கள் என்பதே இந்த நாவலின் மையக் கருத்தாகும். இந்த நாவலின் கதாநாயகன் பெயர் பவாநந்தன். சனாதன பிராமண னான இவன், ‘நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம்; ஆனால் நமது கடவுள்களின் எதிரிகளான முஸ்லிம்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும்’ என அறைகூவல் விடுத்து இந்து சமய மக்களை அணி திரட்டுகிறான். அவன் மகேந்திரன் என்பவனைச் சந்தித்து தனது படையில் சேருமாறு அழைப்பு விடுக்கும் போது அவன் ‘எதற்காக முஸ்லிம்களை எதிர்க்க வேண்டும்’ என வினா எழுப்புகிறான். அதற்குக் கதாநாயகன் ‘நமது மதம் போச்சு; நமது வருணாசிரம தர்மம் போச்சு; இப்போது நம் உயிருக்கும் ஆபத்து வந்து விட்டது.
இந்த முஸ்லிம்களை விரட்டா விட்டால் இந்து மதத்தைக் காப்பாற்ற முடியாது’ என பதிலளிக்கிறான். இதனை நிறைவேற்ற முடியுமா என அவன் மீண்டும் கேட்க, அதற்குக் கதாநாயகன் ‘ஏழு கோடி தொண்டைகள் முழங்கும் போது, பதினான்கு கோடி கைகள் வாளேந்தி நிற்கும் போது பாரத மாதா பலவீனமாக இருக்கிறாள் என நீ நினைக்கிறாயா?’ என்று எதிர்வினை தொடுக்கிறான். மகேந்திரன் மீண்டும் இதுவெல்லாம் சாத்தியமாகுமா என்று கேட்க, கதாநாயகன் அவனை ஆனந்த மடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள விஷ்ணு சிலையின் மடியில் உள்ள ஒரு தேவி சிலையைக் காட்டி ‘அவள் தான் பாரத மாதா. நாமெல்லாம் பாரத தேவியின் புத்திரர்கள்’ என்று கூறுகின்றான்.
அடுத்து ஒளிமயமாகக் காட்சியளித்த ஜெகத் தாத்ரி சிலையைக் காட்டி, ‘நமது பாரத மாதா இப்படித்தான் ஜெகஜோதியாக இருந்தாள். இப்போது நிர்வாணமாகக் காட்சியளிக்கிறாள் என்று கூறி விட்டு பின்னர் பத்து கைகளையுடைய துர்கா தேவியைக் காட்டி, நமது எதிரிகளான முஸ்லிம்கள் முற்றாக ஒழிக்கப்பட்டால்தான் நமது அன்னை பாரத தேவி கண் கொள்ளாக் காட்சி தருவாள்’ என்று கூறுகின்றான். இந்த விளக்கங்களைக் கேட்டு திருப்தியுற்ற மகேந்திரன் கதாநாயகனின் படையில் சேர்கிறான்.
இப்படிப் பரப்புரை செய்தே கதாநாயகன் ஆள் திரட்டுகிறான். ஆயிரக்கணக்கானோர் அவன் பின்னால் அணி திரளுகிறார்கள். இப்படிச் சேர்ந்தவர்களைப் பல அணிகளாகப் பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்புகிறான். அப்படிச் சென்றவர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களின் வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். சொத்துகளைக் கொள்ளையடிக்கிறார்கள். பொருள்கள் கிடைக்கக் கிடைக்க மேலும் பலர் அவன் படையில் சேர்கிறார்கள். முஸ்லிம்களைத் தாக்குகின்ற போது ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடி குதூகலிக்கிறார்கள். இப்படிப் போகிறது அந்த நாவலின் கதை. வந்தே மாதரம் பாடல் வரிகள் முஸ்லிம்களின் மீது வெறுப்பை உமிழ்வதற்காகப் புனையப்பட்டவையே என்பதில் ஐயமில்லை. இதில் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1876ஆம் ஆண்டு தனிப் பாடலாக இதனை இயற்றிய கவிஞர் பக்கிம் சந்திர சாட்டர்ஜி, 1882ஆம் ஆண்டு தான் எழுதிய ஆனந்த மடம் நாவலில் இணைத்துக் கொள்கிறார்.
இன்னொரு புகழ் பெற்ற வங்கக் கவிஞரான நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் இந்தப் பாடலை 1896ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பாடினார். பின்னர் இந்தப் பாடல் காங்கிரஸ் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பாடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியில் முஸ்லிம்கள் பெருமளவு இருந்தனர். அவர்கள் மதவெறுப்பைத் தூண்டும் வந்தே மாதரம் பாடலை நாங்கள் எப்படிப் பாட முடியும் என ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும் காங்கிரஸ் தலைவர்கள் இந்த எதிர்ப்புகளைப் புறம் தள்ளி தொடர்ந்து தங்களது கட்சியின் பாடலாக இதனைப் பாடி வந்தனர்.
எனினும் தொடர்ந்து இந்தப் பாடலுக்கு எதிர்ப்பு இருந்ததால், இது குறித்து விவாதித்து ஒரு சுமுகமான நிலையை உருவாக்க காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் 28.10.1937 அன்று நடைபெற்றது. பாபு ராஜேந்திர பிரசாத் கேட்டுக் கொண்டதாலேயே இந்தச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பண்டித ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அபுல் கலாம் ஆஸாத், ஆச்சார்யா கிருபாளனி, ஜி.பி.பந்த், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கவிஞர் ரவீந் திரநாத் தாகூரின் கருத்துகளை நேரு பதிவு செய்தார். அதில் 'The Core of Vande Mataram is a hymn to goddess Durga;that there can be no debate about it. Of course,Bankim Chandra Chatterjee does show Durga to be inseparably united with the Bengal in the end. But no mussalman can be expected to worship ten handed diety as swadesh (Native Land). Thenovel Ananthamath is a work of literature and so the songs is appropritate in it. But Parliament is a place of all religious groups and so the song cannot be appropriate.
(வந்தே மாதரம் துர்கா தேவியைப் பற்றிய ஒரு கீதமாகும். இது குறித்து எந்த விதமான விவாதமும் இருக்க முடியாது. பக்கிம் சந்திர சாட்டர்ஜி வங்காளமும், துர்கா தேவியும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்துள்ளனர் என்று காட்ட முயல்கின்றார். எந்த ஒரு முஸல்மானும் நாட்டுப்பற்று உணர்வுடன், பத்துக் கைகள் கொண்ட துர்கா தேவியை தாய்நாடாகக் கருதி வழிபடுவான் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனந்தமடம் நாவல் ஓர் இலக்கியம். அதற்கு வேண்டுமானால் இந்தப் பாடல் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் அனைத்து மதங்களையும் சார்ந்துள்ளவர்கள் அங்கம் வகிக்கின்ற நாடாளுமன்றத்தில் இந்தப் பாடல் பொருத்தமான தாக இருக்க முடியாது.)
1896ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் முதன்முறையாக இந்தப் பாடலைப் பாடிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரே அனைத்து சமய மக்களும் பாடுவதற்குரிய பாடல் இதுவல்ல என்று கருத்து தெரிவித்தது மிகவும் முக்கியமானதாகும். அவரின் கருத்தையும், பிற உறுப்பினர்களின் கருத்தையும் பரிசீலித்த காங்கிரஸ் செயற்குழு, வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடலாம் பிற பத்திகளைப் பாட வேண்டியதில்லை என்று முடிவெடுத்தது.
ஏனெனில் பிற பத்திகளில் துர்கா தேவி, லட்சுமி குறித்த வரிகள் இருக்கின்றன. அத னைப் பாடும்படி முஸ்லிம்களைக் கட்டாயப் படுத்த முடியாது என்பதே இதற்குக் காரணமாகும். தேச விடுதலைப் போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களையும் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். அதற்கு இது போன்ற பாடல் தடையாக இருக்கக் கூடாது எனக் கருதியே அவர்கள் இந்த முடிவை எடுத்தனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நிலைப்பாடும் இதுவாகவே இருந்தது. நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள அவரது அண்ணனின் பேரன் சுகாதா போஸ் வந்தே மாதரம் பாடல் அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்லும் ஒரு தேசியக் கட்சியின் பாடலாக இருப்பதற்குப் பொருத்தமற்றது’ என்று கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார். (நூல் : அமர நாயகன் காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு) மகாத்மா காந்தி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவரும் இதற்கு ஒப்புதல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே சர்தார் பட்டேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களும் கலந்து பேசி எடுத்த இந்த முடிவிற்குப் பண்டித ஜவஹர்லால் நேரு தான் காரணம் எனப் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குற்றம் சாட்டுவதில் எள்ளளவும் உண்மையில்லை. நேரு மீது அவதூறு கற்பிக் கவே அவர்கள் இந்த விவாதத்தினைப் பயன்படுத்திக் கொண்டனர்.
பண்டித நேரு மீதான அவர்களது வெறுப்பு இன்னமும் தீரவில்லை. அவர் சமயச் சார்பற்ற கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதே பாஜக தலைவர்களின் வெறுப்புக்கும், கோபத்திற்கும் காரணமாகும். அதுவும் இந்திய விடுதலைப் போராட்டங்களில் எந்தவிதமான பங்களிப்பும் செய்யாத ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் நேரு குறித்து கூறுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. ஒரு விடுதலைப் போராட்ட வீரரைக் கூட தங்கள் அமைப்புகளிலிருந்து அவர்களால் அடையாளம் காட்ட முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த சர்தார் வல்ல பாய் படேலைத்தான் கடன் வாங்கி அவர்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டாடுகிறார்கள்.
1937ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளின் தமிழாக்கத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.
தாயே வணங்குகிறோம்
இனிய நீர் இன்சுவைக் கனிகள்
தென் திசைக் காற்றின் தெள்ளிய தன்மை
மரதகப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்! தாயே வணங்குகிறோம்
வெண்ணிலவின் ஒளியில் பூத்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும்
நறுமலர் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே! வரமருள்பவளே!
தாயே வணங்குகிறோம்.
இந்த இரு பத்திகளிலும் ‘தாயே வணங்குகிறோம்’ என்ற வரிகளைப் பாடுவதில் முஸ்லிம்களுக்கு உடன்பாடு இல்லை. படைத்த அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன். அவன் படைத்த படைப்பினங்கள் எதுவும் (பூமி, சூரியன் உட்பட) எதுவும் வணக்கத்திற்குரியதல்ல என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். சகோதர இந்து சமயத்தைச் சார்ந்த மக்கள் இந்த முழுப் பாடலையும் பாடுவதில் நமக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனால் முஸ்லிம்களையோ கிறித்தவர்களையோ பாடும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. அதிலும் குறிப்பாக அனைத்து சமய மக்களும் இருக்கின்ற கல்வி நிலையங்கள், பொது நிகழ்ச்சிகள், சட்டசபை, நாடாளுமன்றங்களில் இந்தப் பாடலைப் பாடுமாறு வலியுறுத்துவது ஏற்கத்தக்கதல்ல.
வந்தே மாதரம் பாடலைப் பொறுத்தஅளவில் நூறாண்டுகளுக்கு முன்னர் எடுத்த அதே நிலைப்பாட்டிலேயே இந்திய முஸ்லிம்கள் இருக்கின்றனர் என்பதே யதார்த்த நிலையாகும்.