மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

SIR: ஏன் இந்த நெருக்கடியும் குழப்பங்களும்?
கப்ளிசேட் , 1-15 டிசம்பர் 2025


வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடைமுறைகளை(SIR) தேர்தல் ஆணையம் முதலில் பீகாரில் அறிவித்தது. பீகார் சட்டமன்றத் தேர்தலின் நெருக்கத்தில் சரியான கால அவகாசமும், BLOக்களுக்கு முறையான பயிற்சிகளும் அளிக்காமல் அவசரகதியில் இந்தத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் செய்து முடித்து தேர்தலும் முடிந்து விட்டது. பீகாரில் ஏராளமான குழப்பங்களோடு நடந்துமுடிந்த SIR நடைமுறைகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்கள் செய்தன. பீகாரில் 63 இலட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

ஆட்சேபணைகளைத் தெரிவித்து, புதிய ஆவணங்களை கொடுத்த 23 இலட்சம் பேர் மீண்டும் பட்டியலில் இணைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நடைமுறைகள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தலித், சிறு பான்மை மக்களை நீக்க குறிவைக்கப்பட்டு நடத்தப்பட்டதாகவும், ஆளும் பாஜக தங்களின் ஆதரவு வாக்காளர்களைப் பல போலி முகவரிகள் மூலம் வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டே இந்த SIR நடைமுறைகள் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகக் குற்றம்சாட்டுகின்றன.

SIR ஒன்றும் புதிதல்ல. இது தேர்தல்களுக்கு முந்தைய வழக்கமான நடைமுறைதான் என்று தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின் SIR(Special Intensive Revision) ஆபத்துகளைப் புரிந்து கொண்டால், இதை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக ஆதரிப்பவர்களுக்கு மனசாட்சியே இல்லை என்று முடிவு செய்து அவர்களை எளிதாகப் புறக்கணித்து விடலாம்.

SSR(Special summary Revision)என்ற ஒரு நடைமுறை தேர்தல் ஆணையத்தால், ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் 18 வயது பூர்த்தியானவர்களை இணைக்க, இறந்தவர்களை நீக்க, முகவரி மாற்றம், ஏதும் குளறுபடிகள் இருந்தால் சரி செய்ய நடத்தப்படும் ஒரு நடைமுறையாகும்.  ஆனால் SIR என்பது புதிதாக வாக்காளர் பட்டியலையே தயாரிப்பதாகும். பழைய வாக்காளர் பட்டியல்களை தேர்தல் ஆணையம் ஊணூஞுஞுத்ஞு செய்து விட்டது. அதை இனி பயன்படுத்த முடியாது.

இப்போது  தயாரிக்கப்படும் வாக்காளர்  பட்டியலே  இனி தொடரும். இதில் 2002, 2005 சிறப்புத்  திருத்த  வாக்காளர் பட்டியலை ஓர் அடையாளமாக (Bench mark) தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2002ஆம் ஆண்டு 197 தொகுதிகளுக்கும், 2005ஆம் ஆண்டு 37 தொகுதிகளுக்கும் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் சுருக்கமாக சென்னை என்று வைத்துக் கொள்ளலõம்) நடைபெற்ற திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலையும் அடையாளமாக அறிவித்துள்ளது.

2002 - 2005 வாக்காளர் பட்டியலில் வாக்காளராக இடம் பெற்று இருந்தால், அதன் விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ள உறவினர் விவரங்களைப் புதிய படிவத்தில் பதிய வேண்டும். இதற்கு ஆவணம் ஏதும் கொடுக்கத் தேவையில்லை. புதிய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றை ஒட்டி வாக்காளரோ அல்லது அவரின் உறவினரோ கையெழுத்துப்  போட்டுக்  கொடுத்து விடலாம்.

BLO மட்டத்தில் பெரும்பாலும் தெரிந்தவர்கள் இருப்பதால் பிரச்னைகள் இல்லை. அவர்களே போன் செய்து படிவங்களை நிரப்பி வாங்கிக் கொள்கிறார்கள். பிறகு அவர்களுக்கு உள்ளீடு செய்ய அளிக்கப்பட்டு இருக்கிற செயலியை(APP) பயன்படுத்தி படிவங்களை அதில் உள்ளீடு (Upload)செய்து விடுகிறார்கள். இதனை ஆய்வு செய்யும் தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரி ERO (Electoral Registration Officer) இந்த உள்ளீடுகளை உறுதி செய்வார் என்று கூறப்படுகிறது.

டிசம்பர் 9 அன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறவில்லை எனில் DEO (District Electoral officer) இடம் உங்கள் முதல் ஆட்சேபணைகளைத்  தெரிவிக்கலாம். இங்கும் இணைக்க முடியவில்லை எனில், CEO (Chief Electoral officer) இடம் இரண்டாவது ஆட்சேபணைகளைத் தெரிவிக்கலாம்.

2002 - 2005 வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவத்தின் மேல் பகுதியில் கேட்கப்பட்டுள்ள தற்போதைய தகவல்களை மட்டும் அளித்து விட்டால் போதுமானது.   அவர்களின் பெயர்கள் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. டிசம்பர் 9ஆம் தேதிக்குப் பிறகு அவர்களுக்கு ஒரு ÷நாட்டீஸ் அனுப்புவார்கள். தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஒன்றையோ இரண்டையோ சமர்ப்பித்தால், ஆதாரத்தை ஏற்றுக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறாவிட்டால், ஆதாரங்களைச் சமர்ப்பிக்க மீண்டும் கால அவகாசம் தந்து வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்வார்களா என்பதைப் பற்றிய தெளிவான அறிவிப்பு ஏதும் இல்லை. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் ஊடுருவல்காரர்கள் என்று அவர்கள் வெளிப்படையாகப் பேசுவதால் மக்கள் அச்சமும், பதட்டமும் அடைகிறார்கள். ஏறக்குறைய இதனை குடியுரிமைப் பிரச்னையாக மாற்றி ஒரு மறைமுக NRCஐ நிறைவேற்றத் துடிக்கிறார்களோ என்ற ஐயமும், அச்சமும் மக்களிடையே காணப்படுகிறது.

டிசம்பர் 9ஆம் தேதிக்குப்பிறகு புதிதாகச் சேரும் வாக்காளர்கள் படிவம் 6, வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர் நீக்கப் படிவம் 7, முகவரி மாற்றங்கள், திருத்தங்களுக்கான படிவம் 8 பூர்த்தி செய்து அவர்கள் கேட்கும் ஆவணங்களை இணைத்துக் கொடுத்தால் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று விடும். அவர்கள் கேட்கும் ஆதாரங்கள் எதுவுமே எளிய மக்களிடம் புழக்கத்தில் இல்லாதது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் ரேஷன் கார்டு, ஆதார்கார்டு (அது எந்த அளவு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரியவில்லை) இவற்றை விட்டு விட்டு எதை எதையோ ஆதாரமாகக் கேட்டு இருக்கிறார்கள்.

மொத்தத்தில் எளிய மக்களை, பாஜகவிற்கு வாக்களிக்காத மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். சாதாரண எளிய மக்கள் விடுபட்டால், மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைக்க அலைய முடியுமா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆவணங்களைச் சரியாக வைத்திருக்கிற மேல்மட்ட மக்களுக்கு இவை எளிதான நடைமுறைகளாக இருக்கலாம்.

கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா என்று பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது. கர்நாடகாவில் இதனை வெளிப்படுத்திய ராகுல் காந்தி, இப்போது ஹரியானாவில் நடந்த முறைகேடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுபோல பல மாநிலங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை ஆதாரத்துடன் வெளியிடுவோம் என்று  ராகுல்  காந்தி  அறிவித்துள்ளார்.

நீதிமன்றங்கள்  தேர்தல்  ஆணையத்தை நேரடியாகக் கேள்வி கேட்டு குற்றம் சுமத்த முடியாது. தேர்தல் ஆணையர்களைத் தண்டிக்கவும் முடியாது என்று சட்டத்தைத் திருத்திவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

மக்களால் முழுவதும் தோற்கடிக்கப்பட்ட பாஜக இதுபோன்ற பித்தலாட்டங்கள் செய்தே வெற்றி பெற்று இருப்பதாக எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகின்றன. மக்களின் வாக்குரிமையைப் பறித்து, மக்களை ஊடுருவல்காரர்களாக மாற்றத் துடிக்கும் SIRஐ ஆதரித்து ஒரு வரலாற்றுத் தவறைச் செய்தால், மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அரசியல் லாபங்களுக்காக மக்களை அடகு வைத்தால் அவற்றை மக்கள் புரிந்து கொள்ளும்போது, தவறிழைத்தவர்களைத் துரத்தி அடிப்பார்கள்.

வாக்காளர் பட்டியல் தயாரித்தல், திருத்தம் செய்வது குறித்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 21 கூறுகிறது. ஒரு மாநிலத்தின் மக்களவை அல்லது சட்டமன்றத்திற்கான ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்கும் அல்லது இடைத் தேர்தலுக்கும் முன்பு அத்தொகுதிக்கும் ஒரு சுருக்கமான திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. விரைவான நகரமயமாக்கல், இடப்பெயர்வு காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் பெரிய அளவில் சேர்த்தல் நீக்கல்கள் நடந்துள்ளதாக 2025 ஜுன் 24 தேதியிட்ட உத்தரவில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் குடிமக்கள் மட்டுமே சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்த நாடு முழுவதும் சிறப்புத் திருத்தத்தை SIR மேற்கொள்ள ஆணையம் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

பீகாரில் 2003இல் SIR நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. 2003க்குப் பிறகு பீகாரில் வாக்காளர் பட்டியலில் பதியப்பட்ட வாக்காளர்கள் தங்களுக்கும், தங்கள் பெற்றோருக்கும் பிறந்த தேதி, பிறந்த இடத்திற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியது. 192021 ஆண்டு கால தொழிலாளர் கணக்கெடுப்பில், மக்கள் தொகையில் சுமார் 11% பேர் வேலைவாய்ப்பு தொடர்பான காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் கிட்டத்தட்ட பல கோடி வாக்காளர்கள் தங்கள் பிறந்த மாநிலங்களிலும், வெளி மாநிலங்களிலும் புலம்பெயர்ந்தவர்களாக உள்ளனர்.

சிலர் சில மாதங்களில் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி விடுகின்றனர். அவர்கள் தங்கள் குடும்பங்கள், சொத்துகள் இருக்கும் இடங்களில் வாக்குரிமையைப் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்று புலம்பெயர்பவர்களை, அவர்களின் அசல் வசிப்பிடத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது ஜனநாயகச்  செயல்முறைகளைச்  சீர்குலைக்கும். தற்காலிக பணியிடங்களில் அவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய விரும்பாததால், அவர்கள் தங்களின் வாக்கு உரிமையை இழக்க நேரிடும்.

உச்ச நீதிமன்றத்தில் SIRக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த மனுதாரர்கள், இந்த நடைமுறை தனிநபர் குடியுரிமையைச் சரி பார்க்கும் வழிமுறையாகத் தேர்தல் ஆணையம் மாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்கள். பீகாரில் 2003க்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பதிந்தவர்கள் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடத்தை நிறுவுவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய உத்தரவு, வாக்காளர்ளுக்கு மட்டுமல்ல, அதைச் சரிபார்க்கும் ஆஃOக்களுக்கும் கடினமான பணியாகும். எந்த ஒரு நபரின் குடியுரிமையை நிறுவச் சொல்ல தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. பீகாரில் 2003க்குப் பிறகு பதியப்பட்ட சுமார் 3 கோடி வாக்காளர்களின் விவரங்களை மிகக் குறுகிய காலத்தில் ஆவணங்கள் சரிபார்ப்பு பணியைச் செய்ய கட்டளையிட்டது உள்நோக்கம் உடையது.

தகுதியுடைய வாக்காளர்கள் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது இயலாத நிலையிலோ, அவர்களை நீக்கக்கூடாது. 1960 கீஉகீ விதி 8, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்காக வாக்காளர் பதிவு அலுவலர் ஒரு தொகுதியில் வசிப்பவர்களிடமிருந்து தகவல்களைக் கோரும் போது, அத்தகைய நபர்கள் தங்கள் திறனுக்கு ஏற்றவாறு (தங்களிடம் எளிதாக உள்ள) ஆவணங்களைச் சமர்ப்பித்தாலே போதுமானது என்று கூறுகிறது.

ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆவணங்களைச் சமர்ப்பிக்க இயலாத காரணத்தால், தகுதியுள்ள எந்தக் குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருக்கும் முறையில் தேர்தல் ஆணையம் தனது செயல்முறைகளை வடிவமைக்க வேண்டும். வாக்காளர் செல்லுபடியாகும் ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆவணங்களை வழங்க முடியாவிட்டால், ஆதார் கார்டு, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஆவணங்களாகப் பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் 2025 ஜுலை 10இல் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களிலும், புதுச்சேரி உட்பட 3 யூனியன் பிரதேசங்களிலும் SIR பணி தொடங்கப்பட்டுள்ளது. பீகாரில் SIR பணி தொடங்கப்பட்ட போதே உச்சநீதிமன்றத்தில் பல அமைப்புகள் சார்பாக வழக்குத் தொடரப்பட்டது.  வாக்காளர்  பட்டியலில் வாக்காளர் சேர்ப்பு, நீக்குவதில் அரசியல் அமைப்பின் விதிகளைத் தேர்தல் ஆணையம் கண்டிப்பாகக்  கடைப்பிடிக்கும்  என்று தேர்தல் ஆணையம் உறுதியாகத் தெரிவித்து உள்ளது.

அரசியலமைப்புப் பிரிவு 326, 18 வயது நிரம்பிய எவரும் வாக்களிக்கத் தகுதியானவர் என்று கூறுகிறது. வாக்களிக்கத் தகுதியற்றவர்களாக பிரிவு 16, மனநிலை சரியில்லாதவர், இந்தியக் குடிமகனாக இல்லாதவர்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கள், தேர்தல் தொடர்பான எந்த ஒரு சட்டத்தின் கீழும் தண்டிக்கப்பட்டவர்களைக் கூறுகிறது. தமிழ்நாட்டில் SIR பணிகள் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி முடிவடையும் என்றும் இது 5 கட்டங்களாக நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் பணியை மேற்கொள்ளும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLO) அக்டோபர் 27 முதல் நவம்பர் 3 வரை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. வீடுதோறும் படிவங்களை வழங்கும் பணியும் கணக்கெடுக்கும் பணியும் 04.11.25 முதல் 04.12.25 வரை நடைபெறும்.

இந்த நடைமுறையின் போது BLOக்கள் ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் படிவங்களை வழங்கி அதனைப் பூர்த்தி செய்து பெற்றுக்கொள்ள மூன்று முறை வருவார்கள். படிவம் பூர்த்தி செய்வதில் ஏற்படும் ஐயங்களை அவர்கள் தீர்த்து வைப்பார்கள். ஒவ்வொரு படிவத்திலும் அந்தப் பகுதியின் ஆஃOவின் பெயரும் அவர்களின் அலைப்பேசி எண்ணும் அச்சிடப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் 09.12.25 அன்று வெளியிடப்படும். 09.12.25 முதல் 08.01.26 வரை பெயர் சேர்த்தல், ஆட்சேபணை பணிகள் நடைபெறும். 09.12.25 முதல் 31.01.26 வரை விசாரணை, சரிபார்த்தல் பணிகள் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் 07.02.26 அன்று தேர்தல் ஆணையத்தõல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் SIR செயல்முறைகளை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளன. 2002-2005 வாக்காளர் பட்டியல் விவரங்கள், வாக்காளர்களின் புதிய விவரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்திடமே தரவுகளாக இருக்கும் போது, படிவத்தை அச்சிட்டுக் கொடுத்து சரிபார்ப்பு செய்து  கொண்டாலே  போதுமானதாக இருக்க, மக்களை இவ்வளவு பதற்றத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்த வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், எல்லோரும் தவறாமல் படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுத்து வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்