மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை இஸ்லாம்

அமானிதம்: சமூகங்களை வலுப்படுத்தும் காரணி
ரஹ்மத் நிஷானா, 16-31 மார்ச் 2023


உலகின் இன்றியமையாத தேவையாக இருப்பது நம்பிக்கைதான். எங்கு பார்த்தாலும் வெறுப்பும், மோசடியும் நிலவும் சமூகச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தனிநபர் தொடர்புகள், சமூகத் தொடர்புகள் என எங்கும் முழுமையான நம்பிக்கை உணர்வு இல்லை.

வெற்றிகரமான அரசியலுக்கும், அமைதியான சமூகச் சூழலுக்கும் அடிப்படையாக விளங்குவது நம்பிக்கையே. ஆம்! மனிதர்கள் ஒருவரையொருவர் நம்புவதுதான் வாழ்க்கை. இத்தகைய நம்பிக்கை இல்லையென்றால் வாழ்க்கைப் பயணம் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்காது. இதனால்தான் இஸ்லாம் `அமானிதம்' குறித்து வலியுறுத்திப் பேசுகிறது.

`அமானத்' ஓர் அரபு வார்த்தையாகும். அகராதியின் விளக்கப்படி அமைதி, பாதுகாப்பு, நம்பிக்கை போன்ற பொருள்களை உள்ளடக்கியுள்ளது. உள்ளச்சத்துடன் செயல்படுவதற்கு தூண்டுதலை அளிக்கும் தலையாயக் காரணியாகத் திகழ்வது அமானிதம்தான். மார்க்கம், வாழ்க்கை, குடும்பம், கொடுக்கல் வாங்கல், பொறுப்புகள் அனைத்திலும் இந்த அமானிதத்தின் தாக்கம் அதிகம் எனலாம். அமானத் திருக்குர்ஆனில் பல இடங்களில் வலியுறுத்தப்பட்ட ஒன்று.

திருக்குர்ஆனில் அமானிதம்

`நீங்கள் பயணத்திலிருந்தால் மேலும் (ஒப்பந்தப் பத்திரம் எழுதுவதற்கு) எந்தவொரு எழுத்தரும் உங்களுக்குக் கிடைக்கவில்லையாயின் அடகுப் பொருளைப் பெற்றுக்கொண்டு நீங்கள் கொடுக்கல்வாங்கல் செய்து கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றொருவரை நம்பி ஏதேனும் பொருளை ஒப்படைத்தால் (அமானிதப்) பொருளைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இன்னும் தன் அதிபதியான அல்லாஹ்வுக்கே அவர் அஞ்சிக் கொள்ளட்டும்! மேலும் சாட்சியத்தை நீங்கள் மறைத்து விடாதீர்கள். யாரேனும் சாட்சியத்தை மறைத்தால் அவருடைய இதயம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்கின்ற அனைத்தையும் நன்கறிபவனாயிருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 2:283)

`(முஸ்லிம்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். அடைக்கலப் பொருள்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள்; நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால் நீதத்துடன் தீர்ப்பு வழங்குங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்களுக்கு வழங்குகின்ற அறிவுரை மிக உன்னதமானதாகும். திண்ணமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 4:58)

`நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (அறிந்தும் புரிந்தும்) வஞ்சனை செய்யாதீர்கள்; அறிந்து கொண்டே உங்களுடைய அமானிதங்களில் நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்.' (திருக்குர்ஆன் 8:27)

`இன்னும் அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களையும் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் பேணிக் காக்கக்கூடியவராய் இருக்கின்றார்கள்.' (திருக்குர்ஆன் 23:8)

மேற்கூறப்பட்டுள்ள வசனங்களில் அமானத் என்பது நபிமார்களின், இஸ்லாமிய செயல்வீரர்களின் அடிப்படைத் தகுதி என்பதாக வர்ணிக்கிறது. இது போன்று வியாபாரம், ஒப்பந்தம் என தனிமனித, சமூகத் தொடர்புகளுக்கு அமானத் அடிப்படைப் பண்பாக எடுத்துரைக்கிறது. அதுமட்டுமின்றி பொறுப்புகள், பதவிகள் என்பது நம்பிக்கையின் அடித்தளத்தில் ஒருவருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதன் காரணத்தால்தான் அமானத்தின் வரையறையில் பொறுப்புகளையும் பதவிகளையும் திருக்குர்ஆன் உள்ளடக்கியிருக்கிறது.

மேலும் சில வசனங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றது. `இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுங்கள்' (திருக்குர்ஆன் 5:1)

`மேலும், ஒப்பந்தத்தை முறையாகப் பேணி வாழுங்கள். ஏனெனில், ஒப்பந்தம் குறித்து நீங்கள் விசாரணை செய்யப்பட்டே தீருவீர்கள்!' (திருக்குர்ஆன் 17:34)

மேற்சொல்லப்பட்டுள்ள வசனங்களில் திருக்குர்ஆன் நம்பிக்கையை இரண்டு நிலைகளிலிருந்து விளக்குவதைத் தெளிவாகப் புரிய முடிகிறது.

முதலாவதாக, நம்பிக்கை என்பது அடியானுக்கும் படைப்பாளனுக்கும் இடையே உள்ளது. எனவே இந்த முழுப் பிரபஞ்சமும், பிரபஞ்சத்தில் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அமானத் ஆகும். மனிதன் அதனை நிறைவேற்றும் கலீஃபா(பிரதிநிதி) ஆவான். எனவே மனிதர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமானிதத்தை முழுமையாக நிறைவேற்றுவது அவசியமாகும். அமானிதத்தை நிறைவேற்றும் வேளைகளில் எவ்விதக் குற்றங்களும் துரோகங்களும் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதையும் திருக்குர்ஆன் தெளிவுபட எடுத்துரைக்கிறது.

இரண்டாவதாக, அமானத் என்பது மனிதர்களுக்கு இடையிலான விவகாரங்களுடன் உணர்வுப்பூர்வமான தொடர்பு கொண்டது. இருதரப்பிலிருந்தும் நம்பிக்கை, நேர்மையின் அடிப்படையில் விவகாரங்கள் அமைந்தால் மட்டுமே மனிதர்களுக்கு மத்தியில் அமைதியும் திருப்தியும் நிலவும்.

அமானிதமும் தூதரின் வழிமுறையும்

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அமானிதம் குறித்து அதிகமாக வலியுறுத்தியுள்ளார்கள். நபிகளாரின் ஸுன்னா அடைக்கலப் பொருள்கள் மீதான நம்பிக்கையை ஒரு வெற்றிகரமான தனிநபருக்கும், சமூகத்திற்கும் அடித்தளமாக எடுத்துரைக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் நபித்துவம் கிடைப்பதற்கு முன்னரே `அல் அமீன்' எனும் நம்பத்தகுந்த மனிதராக இருந்தார்கள். அமானத் என்பது ஓர் இறைநம்பிக்கையாளருக்கும் இறைநம்பிக்கையாளர் அல்லாதவருக்கும், உண்மையான முஸ்லிமுக்கும் நயவஞ்சகமான முஸ்லிமுக்கும் இடையில் அளவுகோலை நிர்ணயிப்பது என்று இறைத்தூதரின் வழிமுறை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: `நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. அவை: 1. பேசினால் பொய்யே பேசுவான் 2. வாக்குறுதி கொடுத்தால் மீறுவான் 3. நம்பினால் மோசடி செய்வான்.' நம்பிக்கைத் துரோகத்தை அல்லாஹ் எந்தச் சூழ்நிலையிலும் மன்னிக்க மாட்டான். உயிர்த்தியாகிகள் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டிருந்தாலும்கூட இறைவன் மன்னிக்க மாட்டான் என நபிமொழிகள் எடுத்துரைக்கின்றன.

நம்பிக்கை எனும் பண்பு இல்லாதவரின் ஈமான் ஏற்றுக்கொள்ளப்படாது என மற்றொரு நபிமொழி அறிவிக்கின்றது. இமாம்கள் அதிகம் வலியுறுத்திய விஷயம் அமானிதம்தான். காரணம் அழகான வலிமையான அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கும் அமானிதம் அத்தியாவசியம்.

எந்தவொரு சமூகத்தின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் அடிப்படையாய் விளங்குவது பிற சமூகங்களிடம் நட்புறவை வளர்ப்பதுதான். இதனையே நாம் சமூக நம்பிக்கை என்கிறோம். இது சமூகவியல் துறை அறிஞர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. `நம்பிக்கை என்பது ஒரு சமூகச் சொத்து. அது ஒழிக்கப்பட்டால் சமூகங்களும் அழிந்து போகும்' என்று புகழ்பெற்ற சமூகவியலாளர் சிஸ்ஸெலா போக் கூறுகின்றார்.

பிற சமூகங்களின் நம்பிக்கையைப் பெறுவது ஒற்றுமைக்கு மட்டுமின்றி அரசியல் எழுச்சிக்கும், பொருளாதார ரீதியாக ஆற்றல் பெறுவதற்கும் மிகவும் அடிப்படையானது. நபிகளார்(ஸல்) அவர்கள் மதீனாவில் ஆரம்பக் கட்டத்தில் கட்டமைத்தது சமூக நம்பிக்கையையே. அதனைத் தொடர்ந்து நேர்வழி பெற்ற கலீஃபாக்களும் சமூக நம்பிக்கையைப் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளனர்.

அமானத் என்பது குர்ஆனும் நபிவழியும் அதிகம் வலியுறுத்திய விஷயம். அதன் விளைவுகள் சமூகத்தில் மிகப் பரவலாக உள்ளது. இத்தகைய கண்ணோட்டமில்லாமல் வெற்றிகரமான தனிநபரையோ, சமூகத்தையோ உருவாக்க முடியாது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்