மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கதை

ஆசை
நாகூர் புதியவன், அக்டோபர் 16-31, 2025


புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி காரை ஓட்டிக் கொண்டிருந்தான் ஆசைத்தம்பி. அவனுடைய மனைவி ஐஸ்வர்யா பின் சீட்டில் அமர்ந்து ரோட்டில் கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். முன் சீட்டில் 6 வயது மகன் கார்த்திக் ரோட்டில் போகும் ஒவ்வொரு காரையும் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

‘என்னங்க காரை நிறுத்துங்க’ என்றாள் ஐஸ்வர்யா. காரை நிறுத்தி விட்டு ‘ஏன் என்னாச்சசு?’ என்றான் ஆசைத்தம்பி.

‘அங்க பாருங்க புதுசா கடை திறந்திருக்காங்க! தள்ளுபடி வேற போட்டிருக்காங்க. புது டிசைன் புடவை ஏதும் வந்திருக்கான்னு பார்த்துட்டு வரேன்..’

‘போன வாரம் தானடி உன் ஃப்ரண்டு கல்யாணம்னு 5000 ரூபாய்க்குப் புடவை எடுத்த...! மறுபடியுமா?’

‘இல்லங்க சும்மா பார்த்துட்டு வரனே. இதுக்குனு மறுபடியும் வரவா போறோம். புது டிசைன் ஏதாவது வந்திருக்கானு பார்த்துட்டு வரேன். அடுத்த மாசம் தீபாவளி வருதுல்ல..!’ என்று கீழே இறங்கினாள் ஐஸ்வர்யா. வேறு வழியில்லாமல் அலுத்துக்கொண்டே காரை நிறுத்தினான் ஆசைத்தம்பி.

‘வர வர உன் ஆசைக்கு அளவே இல்லாமப் போச்சு. மாசம் மாசம் நீ வாங்குற புடவைக்காகவே தனியா சம்பாதிக்கணும் போல’ என முணுமுணுத்தான். மூவரும் கடையை நோக்கிச் சென்றார்கள். அந்த ஜவுளிக் கடை வாசலில் ஒருவர் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அந்தக் கடையைக் கடக்கும்போது அந்தக் கடையில் உள்ள வித்தியாசமான விளையாட்டுக் கார் ஒன்று கார்த்திக்கை ஈர்க்கிறது.

‘ஐ! சூப்பர் காரு..’ என உடனே அந்தக் காரை எடுக்க முற்பட்டான் கார்த்திக். ஐஸ்வர்யா அவனைத் தடுத்தாள்.

‘அம்மா..... சூப்பரா இருக்கு, ஆசையா இருக்கு வாங்கிக் கொடும்மா’ என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

‘டேய்.... வீட்ல எவ்ளோ காரு இருக்கு, இது வேற எதுக்குடா’ என அலட்டினாள் ஐஸ்வர்யா.

‘ப்ளீஸ் மா’ என்று லேசாகக் கெஞ்சியவனாக அந்தக் காரைப் பார்த்துக்கொண்டே இருக்க, கையைப்பிடித்து கடைக்குள் கூட்டிச் சென்றாள் ஐஸ்வர்யா.
ஆசைத்தம்பி தனது அலைப்பேசியில் பேசிக்கொண்டு நடந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தான். நேரம் கடந்து கொண்டிருந்தது. பொறுமை இழந்தான் ஆசைத் தம்பி.

‘இன்னும் என்ன செய்ற? எனக்கு வேலையிருக்கு. லஞ்ச் வேற சாப்பிடணும். எப்படியும் வீட்டுக்குப் போனா உடனே நீ சமைக்கப் போறதில்லை... மேனேஜர் வேற கால் மேல கால் பண்ணிக்கிட்டே இருக்கார்’ என்றான்.

‘சரிங்க... ஹோட்டல்ல சாப்பிடுவோம். இந்த டிசைன் சூப்பரா இருக்கு. ப்ளீஸ் எடுத்துக்கவா ஆசையா இருக்குங்க. இப்ப விட்டா வித்துப் போய்டுங்க’ என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் ஐஸ்வர்யா.
மனைவியின் கெஞ்சல் குரலைக் கணவ னால் மறுக்க முடியுமா? புடவை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். இடையில் சாப்பிட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தார்கள். ஐஸ்வர்யா காரை விட்டு இறங்கினாள். முன் சீட்டிலிருந்து வேகமாக இறங்கி ஓடிய கார்த்திக்கின் கையில் இருந்த காரைக் கண்டு கணவனைக் கோபமாகப் பார்த்தாள்.

‘ஏங்க எப்பங்க வாங்கிக் கொடுத்தீங்க?
நீங்க தான் அவனக் கெடுக்குறீங்க!’ என்றாள் ஐஸ்வர்யா.

‘அவனுக்கு டிசைன் ரொம்பப் பிடிச் சிப் போயிடுச்சாம். அப்புறம் வித்துப் போயிட்டா? அது தான் வாங்கிக் கொடுத்தேன்’ என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு அலுவலகத்திற்குத் தாமதமாகி விட்டது என்று சொல்லிக் கொண்டே கிளம்பினான் ஆசைத் தம்பி. ஐஸ்வர்யா  வீட்டிலுள்ள  பீரோவில் புதிய புடவையை வைத்தாள். ஆசைத்தம்பி சொன்னதுபோல ஜவுளிக் கடை வைக்கும் அளவிற்குப் புடவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கார்த்திக் புதிய காரை சேர்த்து ஐந்து காரையும் வரிசையாக அடுக்கி வைத்து அழகு பார்த்தான்.

‘அம்மா... பசிக்குதுமா.. ஏதாவது சாப்பாடு இருந்தா குடுங்கமா’ என்று வாசலிலிருந்து குரல் வர ஐஸ்வர்யா வெளியே வந்தாள்.

‘இன்னிக்கு சமைக்கலமா..’ என்றாள் ஐஸ்வர்யா.

‘பழைய உடை இருந்தா கொடுங்கமா’ என்று சொல்லிக் கொண்டே இருந்த ஒரு புடவையும் கிழிந்துவிட்டது என்று தனது முந்தானையைக் காண்பித்தாள். தனது அறையில் இருக்கும் பழைய துணிமணிகளைத் தேடி எடுத்துக் கொடுக்க உள்ளே சென்றாள் ஐஸ்வர்யா.

வாசலில் யாசித்துக் கொண்டிருக்கும் அந்த அம்மாவின் அருகில் நின்ற சிறுவன் கார்த்திக் கையிலிருந்த காரை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே இருந்தான். கார்த்திக் அந்தச் சிறுவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.

‘உம் பேரு என்னா?’

‘ராஜா’

‘உங்கிட்ட கார் இருக்கா?’

‘ஊஹூம்’ என்று அந்தச் சிறுவன் ஏக்கத்துடன் தலையசைத்தான்.

‘ஒரு கார் கூடவா இல்ல.. அப்ப நீ எப்படி வௌயாடுவ?’ என்று கேட்டுக் கொண்டே கையிலிருந்து புதுக் காரை அந்தச் சிறுவனிடம் நீட்டினான். அந்தச் சிறுவன் வேண்டாம் என தலையசைக்க அந்தச் சிறுவனின் தாய், ‘வேண்டாம் தங்கம்.. எங்களுக்குப் பசிச்ச வயித்துக்கு சோறு கெடச்சாலே போதும்’ என்றாள். கார்த்திக் வலிந்து அந்தச் சிறுவனின் கையில் காரைத் திணித்தான்.

‘வெச்சுக்க..  வெளையாடு..!’  என்று கொடுப்பதை பழைய புடவையுடன் வந்த ஐஸ்வர்யா பார்த்துத் திகைத்தாள்.

‘டேய்! புதுக்கார ஏன்டா குடுக்குற..?’

‘என்கிட்ட நிறைய கார் இருக்குமா. அவன் கிட்ட ஒரு கார் கூட இல்லமா. எனக்கு வாங்கிக் கொடுக்க அப்பா இருக்காங்க.. அவனுக்கு யாருமா இருக்கா..? பாவம்மா..’ என்று கார்த்திக் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்த ஐஸ்வர்யா பழைய புடவையுடன் வீட்டிற்குள் சென்று இன்று எடுத்த புதிய புடவையுடன் வந்து கொண்டிருந்தாள். கார்த்திக்கின் முகம் புன்னகையால் நிறைந்திருந்தது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்