இது கைபேசிக் காலம்
மனம் விட்டுப் பேசும் உறவுகள்
விரல் தொட்டுப் பேசி
விலகி நிற்கும் காலம்
உள்ளங்கையில் உலகைக் காட்டும்
இணையதளம்
உள்ளங்களின் உறவாடலை
வாய்(ஸ்)க்குள் சுருக்கி விட்ட காலம்
முகநூலில் ஏராளமாய்
நட்புகள் இருப்பதில் பெருமை
அண்டை வீட்டில் பாரா முகமாய்
நட்புறவில் வெறுமை
பெற்றோர் உற்றார்
உறவினர் முதல்
அறிமுகமற்றோர்
அண்டை வீட்டார் வரை
நலம் நாடி வாழ்வதுவும்
இபாதத் எனும் இறை அடிமைத்தனம்
தொலைவில் இருக்கும்
உறவினரைப் போல்
அருகில் வசிக்கும் அண்டை வீட்டாரும்
ஆதரவுக்குரிய உறவுகள்
அதுவே நம் ஈமானின்
ஆதார உறவுகள்
வசிக்கும் இல்லங்களில்
வாழும் தெருக்களில்
உழைக்கும் அலுவலகங்களில்
உலா வரும் பொது வெளியில்
மக்களிடம் நன்னடத்தை
மாநபியின் வழிமுறை ஆகும்
அண்டை வீட்டார் பட்டினியில்
நம் இறை நம்பிக்கை
தொலைந்து போய்விட வேண்டாம்
‘முசல்லா’ வில் தொழுது பெற்ற
நன்மைகளை
‘முஹல்லா’வாசிகளுக்கு
தொல்லை தந்து இழக்க வேண்டாம்
நம் வீட்டுக் குப்பைகளால்
அண்டை வீட்டை மாசுபடுத்தி
நாம் செய்த நற்செயல்களை
நாமே மாசுபடுத்த வேண்டாம்
இரு வீடுகளுக்கு மத்தியில்
மதில் சுவர்கள் இருக்கலாம்
அது தீண்டாமைச் சுவர்களாய்
மாற வேண்டாம்
அறியாதவருக்கும் ஸலாம் உரைக்க
அறிவுறுத்தியது மார்க்கம்
இன்று அரிதாகிப் போனது
சமூகத்தில் அந்த வழக்கம்
உலக வாழ்வில்
அண்டை அயலாருடன்
உறவும் பகையும்
மறுமை வாழ்வில்
வெற்றி தோல்வியின்
பாதையாய் அமையும்
பயணத்தில் அருகிலிருப்பவர்
அந்நியரல்ல
நம் ஆதிப் பெற்றோரின்
பிள்ளைகள்
சாலைகளில் சமிக்ஞை விளக்குகளை
சிலர் மதிக்காமல் செல்லும்போது
நாம் ஒரு கட்டுப்பாடுள்ள முஸ்லிம்
என்பதை மறக்க வேண்டாம்
மதமும் இனமும் மொழியும் நாடும்
மனிதநேயத்திற்கு எல்லைகள் அல்ல
அனைவரும் இறைவனின் படைப்புகள்
என்பதால் எவரும் நமக்கு அந்நியர் அல்ல.ச