மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கதை

வாப்பா எங்கு படித்து இருப்பார்?
ஆரூர் புதியவன், 1-15 டிசம்பர் 2025


முக்கியச் சாலையையும் அதை ஒட்டிய சிறு வீதியையும் இணைக்கும் முச்சந்தியில் அப்துல்லாவின் பிரியாணிக் கடை திறக்கப்பட்டது. திறக்கப்பட்டது என்று சொல்வதை விட, நிறுத்தப்பட்டது என்பதே பொருத்தம். ஆம். அது ஒரு தள்ளுவண்டி. 3 தேக்சாக்களில் மூன்று வகை பிரியாணிகள். அந்த பிரியாணியின் வாசனை அந்த வீதியின் வாசனையை மாற்றி இருந்தது.

பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பது பழமொழி. அப்துல்லாவின் பிரியாணிக் கடைக்கும் விளம்பரம் தேவைப்படவில்லை. பிரியாணியின் வாசம் வாடிக்கையாளர்களை இழுத்தது, அதன் சுவையோ மீண்டும் மீண்டும் அழைத்தது. பிரியாணிக்கு அப்துல்லா நிர்ணயித்த விலை, கட்டிடத் தொழிலாளிகளையும் காரில் அவ்வழியே சென்றோரையும் கடை வாசலில் ஓரணியில் நிறுத்தியது.

கடை தொடங்கி ஒரு வாரத்தில் அப்துல்லாவின் மகன் முபாரக் கல்லூரி விடுமுறையில் வந்தவன், ‘ஒரு நாள் கடையை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் ஓய்வெடுங்கள்’ என்றான் வாப்பாவிடம்.

சமைக்கும் இடத்தில் பிரியாணியின் பக்குவம் மாறிவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அப்துல்லா, பிரியாணி தேக்ஸாக்களை வண்டியில் ஏற்றி, வியாபாரப் பொறுப்பை பட்டத்து இளவரசன் முபாரக்கிற்குக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

‘மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி சரி! பீஃப் பிரியாணி எந்த தைரியத்தில் போட்டீர்கள்’ என்றார் அப்துல்லாவின்  இணைபிரியாத தோழர் செந்தில்.

அவர் அப்துல்லா போடும் பீஃப் பிரியாணிக்குப் பரம ரசிகரும் கூட!

பீஃப் பிரியாணி விற்பனை அவருக்குப் பதில் சொன்னது.

உடல் உழைப்புத் தொழிலாளிகளுக்கு, முதன்மைத் தேர்வாக இருந்த பீஃப் பிரியாணி தான் முதலில் விற்றது. கட்டிடத் தொழிலாளிகள் பலர் விரும்பி வந்து வாங்கினர். தமிழ் தெரியாததும் கூட தொழிலாளிகளுக்குத் தடையாக இல்லை. பசிக்கு மொழி ஏது?

பகல் 11 மணிக்கு அந்த முச்சந்திக்கு நட்சத்திர உணவகங்களின்  சுவையை  மிஞ்சும் அப்துல்லா பிரியாணி வண்டி வந்து நின்றது.

வண்டிக்கு எதிரே பிரம்மாண் டமாய் நின்ற அபித் ஷா அப்பார்ட்மெண்டின் காவலர், பிரியாணி வண்டிக்கு வந்தார். முபாரக்கைப் பார்த்து புன்முறுவலித்தார்.

‘தம்பி, அப்படியே ஒரு ரேட் சொல்லுங்க. வாங்கிக்கிறேன். ரெடி கேஷ்’ என்றார். உரிய விலையை விட கொஞ்சம் சேர்த்தே சொன்னான் முபாரக்.

பார்சல்  கட்டுற  வேலை, பிரியாணிச்  சட்டியைத்  தட்டித் தட்டி, தட்டில் கொட்டித் தருகின்ற வேலை, ஒவ்வொரு ஆளுக்கும் சில்லறை எடுத்துத் தருகின்ற வேலை, நைசாக நழுவும் சிலரைக் கண்காணிக்கிற வேலை, உச்சி வெயிலில் வரும் சீருடைப் பணி யாளர்களுக்கு ஸ்டேஷனுக்கும் சேர்த்து பொட்டலம் மடிக்கிற வேலை, எல்லாம் அன்று மிச்சமாகிவிட்டது.

வியப்பிலும் கூடுதல் வியப்பு என்னவென்றால் அபித் ஷா அப்பார்ட்மெண்டின் காவலாளி முபாரக் கூடுதலாகச் சொன்ன தொகையை விட மிகக் கூடுதலாய் பணம் கொடுத்து, ‘தினமும் நீயே வா’ என்றான்.

முபாரக்கிற்கு முகம் எல்லாம் புன்னகை. உதவிக்கு வரும் இரு பணியாளர்களுக்கு அன்று கூடுதல் தொகையை ஊதியம் ஆகக் கொடுத்துவிட்டு உற்சாகமாக வீடு திரும்பினான்.

அப்துல்லா பார்த்தார். ‘என்னப்பா கடை போடலையா’முபாரக் சிரித்துக் கொண்டே, ‘கடை போட்டாச்சு, வியாபாரம் முடிச்சாச்சு, பிபிஏ படிக்கிறேன்ல, பிசினஸ்ல திறமையைக் காட்ட வேணாமா’ என்று நடந்ததை மகிழ்ச்சியாக வர்ணித்தான். கூடுதல் தொகைக்கும் கூடுதலாக லாபம் பெற்று வந்த அந்த சாதனையைச் சொல்லி தனக்குத் தானே கைதட்டிக் கொண்டான்.

அப்துல்லா முகம் வாடியது. ‘என்ன காரியம் செய்து விட்டாய்’ என்று பதறினார்.

‘நம்மை நம்பி பசியோடு வரும் ஏழைகள், தொழிலாளிகள் ஏமாந்து போவார்களே’ என்று வருந்தினார்.

‘அபித் ஷா அப்பார்ட்மெண் டில் குடியிருக்கும் கோடீஸ்வரர்கள் சமைக்க அலுப்புப்பட்டவர்கள். எல்லார்  வீட்டிலும் மாடுலர்  கிச்சன் உண்டு.  ஆனால் சமைக்க மாட்டார்கள். ஸ்விக்கி;  ஙூணிட்ணிtணி உள்ளிட்டவற்றில் ஆன்லைன் ஆர்டர் செய்து உண்டு வாழ் பவர்கள்.  அந்த ஆன்லைன் ஆசாமிகள் என்னை அணுகிய போது கூட மறுத்துவிட்டேன்.

அவர்கள் இதைவிட அதிகப் பணம் தரத் தயாராக இருந்தனர். அபித் ஷா அப்பார்ட்மெண்ட் காவலாளி ஜெய்ஷா ஒரு சூழ்ச்சிக்காரன். அங்கு வாழும் சோம்பேறிகளுக்குப் பல மடங்கு விலை வைத்து கொள்ளை லாபம் அடிப்பதற்காகவே உனக்கு அதிகப் பணம் கொடுத்துள்ளான்’ என்றார்.

‘யாருக்கு விற்றால் என்ன வாப்பா? வியாபாரம் தானே முக்கியம்’ என்றான் முபாரக்.

‘வியாபாரம் முக்கியம் தான். வியாபாரத்தில் அறம் அதைவிட முக்கியம். வியாபாரம் ஒரு தொழிலாக மட்டுமல்லாமல் ஒரு தொண்டாகவும் அமைய வேண்டும். வணிகத்தில்  கலப்படம்  செய்யாதீர்கள்’ என்றார் நபிகள் நாயகம்.

‘நம் கடையை நாடிவரும் ஏழைத் தொழிலாளர்கள் சமைக்க வழி இல்லாதவர்கள். கடுமையாக உழைப்பவர்கள். அவர்களுக்கு நாம் மலிவான விலையில் கொடுக்கும் பிரியாணி, நமக்கு வியாபாரம். அவர்களின் உழைப்புக்கு  அது  மிகவும்  தேவையானது.

அடுக்ககக் கோடீஸ்வரர்களுக்கு நம் கடை இல்லை என்றால் ஏராளமான நட்சத்திர உணவகங்கள் உள்ளன. இந்த ஏழைகள், எங்கு போவார்கள்?’ என்று துடித்தார்.

முபாரக்கை  அந்தத் துடிப்பு  வயப்படுத்தியது. இவன் படிக்கும் வணிகவியல் படிப்பில் இல்லாத துடிப்பு அது. இந்தப் படிப்பை வாப்பா எங்கு படித்து இருப்பார்  என்று முபாரக் யோசித்தான். பள்ளிவாசலில் இருந்து பாங்கோசை கேட்டது.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்