மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கவிதை

அது ஒரு தபால்க் காலம்
ஜ. ஜாஹிர் உசேன், அக்டோபர் 16-31, 2025


  

சின்னச் சின்ன ஆசைகளாய்
தபால்கள் தந்த
மகிழ்ச்சிகள் ஆயிரம்

கடிதங்களுக்காகத் தவமாய்
காத்திருந்த நாள்கள்

பள்ளிப் பருவத்தில்
ஆண்டு விடுமுறையில்
பள்ளிக்கூட முடிவுகளுக்காக
தபால்காரரை எதிர்பார்த்து
கால் கடுக்க தெருவில்
நின்ற நாள்கள் அவை

போஸ்ட் கார்டில்
பாஸா ஃபெயிலா தெரிந்து
மகிழ்ந்த நாள்கள்
போஸ்ட்மேனுக்கு சாக்லேட்
வாங்கிக் கொடுத்து
கைகுலுக்கிய நாள்கள்

இடப் பற்றாக்குறையால்
மடிக்கும் இடத்தில் கூட
நுணுக்கி நுணுக்கி
எழுதியது கிழியாமல்
இன்லேண்ட் லெட்டரை
பிரிப்பதே ஒரு கலை

திருமண நாள்கள்
பண்டிகை நாள்கள்
பிறந்த நாள்கள்
வாழ்த்து அட்டைகளால்
காலம் காலமாய்
பத்திரப்படுத்தப்பட்ட
வைப்புப் பெட்டகங்கள்

வெளிநாடு வாழ் நண்பர்களுக்கே
தெரியும் தபாலின் அருமை
தொப்புள் கொடி உறவாய்
தொடர்பு சாதனமாய்
தபால் ஒன்றே

மாதம் மாதம் அனுப்பவும்
மாதம் மாதம் பெறவும்
தாமதமானால் ஏற்படும்
தவிப்பும் ஏக்கமும்
சொல்லி மாளாதவை

கம்பெனி டிரைவருக்காய்
வழிமேல் விழி வைத்து
கவலையோடு காத்திருந்து
கொடுக்கப்படும் கடிதத்தை
பிரித்து படித்து பூரித்து
இறக்கைக் கட்டி பறந்த
நாள்கள் தான் எத்தனை?

பணம் அனுப்பும் ட்ராஃப்டும்
அதை நினைத்து நினைத்து
மனம் மகிழ்ந்து போவதும்
மனைவியின் கடித அன்பும்
மொத்தத்தில் குடும்பம் நடத்தியதே
தபால்களில் தான்

குடும்ப நினைவு வந்தால்
எழுதப்பட்ட தபால்களை
மீண்டும் மீண்டும் படித்து
மனதைத் தேற்றி
அழுது தீர்த்த நாள்கள்

தானாய் தனியாய்
சிரித்துக் குதூகலித்த நாள்கள்
நீங்கா நினைவுகளில்
மயங்கித் திளைத்த நாள்கள்
சுகமான சுமைகளாய்
தபால்களுக்காய் காத்திருந்த
மாயமான நாள்கள்
இந்தத் தலைமுறைக்கு
வாய்க்காத கொடுப்பினை

இன்று மெயில் என்றால் ஈமெயில்
வாழ்த்து என்றால் வாட்ஸ்அப்
டக்கென ட்விட்டர்
இன்ஸ்டண்ட்டாக இன்ஸ்டாக்ராம்
பட்டென பட்டனைத் தட்டி
செய்திப் பரிமாற்றம்

அறிவில் சிறந்து விளங்கி
அறிவியல் வளர்ந்த காலம்
தவமாய்க் கிடக்கும் தபால்கள்
அழிவில் நிற்கும் காலம்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்