
திருமணங்கள்
பெருநாள்
கந்தூரியென
எங்கும் ஒலித்த
நாகூர் ஹனீஃபாவின்
கம்பீரக் குரலை
இப்போது கேட்க நேரிடும் பொழுதில்
குழந்தைப் பருவம்
மீண்டெழுகிறது
‘அதிகாலை நேரம் சுபுஹுக்குப் பின்னே
அண்ணல் நபி வரும்போது..' பாடல்
சாயாக் கடையிலிருந்து
புத்தம் புதிய காலைப் பொழுதைக்
கொண்டுவந்து தரும்
‘வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே' என
எல்லாக் கல்யாணங்களிலும்
மணமக்களை ஹனீஃபா
வாழ்த்திக் கொண்டிருப்பார்
கந்தூரியின் குதூகலம்
‘தீன்குலப் பெண்ணே' தொடங்கி
‘பாலைவனம் தாண்டிப் போகலாமே நாம்' எனத்
தொடரும் கீதங்கள்
வீதியெங்கும் நிறைத்திருக்கும்
‘ஹஜ்ஜுப் பெருநாள் வந்த சரித்திரம்
கேளுங்கள்' என்று பெருநாளை
அலங்கரிக்கும் குரல்
‘காணக்கண் கோடி வேண்டும் கஅபாவை
ஹஜ்ஜுக் காட்சிக்கிணையாக
உலகில் எதுவும் இல்லை' என்று
திவ்ய தலம் காணலுக்கான
ஏக்கம் பிறப்பிக்கச் செய்யும்
வெளிநாட்டிலிருந்து வீடுதிரும்பும் மாமா
பெட்டி உடைத்து புது டேப்ரிக்கார்டரில்
‘அருள் மணக்குது அறம் மணக்குது'
என்ற சுகந்தத்தைப் பரப்பிவிடுவார்
தேர்தல் காலம் வந்தாலே
இந்த உதயசூரியன்
ஓடி வந்து விடுவான்
வெளிநாட்டிலிருந்து
உம்ரா பயணத்திற்காக
தாயிஃப் சென்ற பொழுதில்
‘தாயிஃப் நகரத்து வீதியிலே
எங்கள் தாஹா ரசூல் நபி நடக்கையிலே'
என்ற குரல் இதயத்திலிருந்து
பீறிட்டெழுந்து உயிர் சிலிர்க்க வைக்கும்
மதீனாவைச் சென்றடைந்ததும்
‘புஷ்பங்களின் மகரந்தமாம்
மதீனப் புழுதியில் நான் உருள வேண்டும்
புரளவேண்டுமென்று' கேட்டுப் பழகிய குரல்
செருப்பு கழட்டி மண்மிதிக்கச் சொல்லி
பேரார்வத்தை ஏற்படுத்தும்
இறைவனிடம் கையேந்தச் சொன்ன குரல்
‘அல்லா ஒருவனே துணை நமக்கு' என்று
ஏகத்துவம் முழங்கிய குரல்
‘உங்கள் திருமுகம் எப்படி இருக்குமோ
யா ரசூலல்லாஹ்' என நபி நேசம் கூட்டிய குரல்
‘மௌத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமோ'
என வாழ்வின் நிலையாமை சொன்ன குரல்
‘நீங்கள் கைக்கூலி வாங்குவது முறைதானா?
மார்க்க நெறிதானா?' என்று கண்டித்த குரல்
‘ஐந்து கடமைகளின் தத்துவங்கள்' சொன்ன குரல்
‘பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை' கூறிய குரல்
‘ஃபாத்திமா வாழ்ந்த முறை' கற்பித்த குரல்
‘தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு' எனத் தூதனுப்பி
வெள்ளிப் பனிமலை உருகுதுபோல்
உள்ளம் உருக வைத்து நம் வாழ்வு முழுவதும்
கலந்து நிரம்பிய நூற்றாண்டின் குரலை
எப்படி மீட்டெடுக்கப் போகிறோம்?
-நாகூர் இ.எம்.ஹனீஃபா
நூற்றாண்டு மலரில் இடம்பெற்ற கவிதை