"இந்திய மக்கள்' மீது "இந்தியப் பிரதமர்' தொடுத்த மிகப்பெரும் பொருளாதாரத் தாக்குதல் இந்திரா காந்தி ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட மோசமானது. சாமான்ய மக்கள் மீதான ஒரு போர்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை. கறுப்புப்பண மீட்பு, கள்ளப்பண ஒழிப்பு, பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சி என்ற காரணங்களைச் சொல்லி இந்த பயங்கரத் தாக்குதலை பாஜக அரசு எளிய மனிதர்கள் மீது தொடுத்துள்ளது. பண முடக்கத்தால் சற்றேறக் குறைய நூறுபேர் இறந்தார்கள். சிறு வணிகர்கள் பெரும் இழப்பைச் சந்தித்தார்கள். நாட்டின் ஒழுங்கும், இயல் பும் சிதைந்தன. வங்கிகளில் காத்திருப்பதிலேயே பெரும் பொழுதுகள் கழிந்தன.
அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட பணமின்றி மக்கள் பட்ட துயரங்களைச் சொல்லிமாளாது. ஏ.டி.எம். வாசல்களில் நீண்ட வரிசையில் நிர்பந்தமாய் மக்கள் நிறுத்தப்பட்டார்கள். வியப்பு என்னவெனில் இந்த கொடும் யுத்தத்திற்கு எதிராக பெரும் குரல் எங்கிருந்தும் எழவில்லை. இங்கொன்றும், அங்கொன்றும் சிலச் சில போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும் மக்கள் திரள் போராட்டமாய் வெடிக்கவில்லை. எதிர்ப்புகளைக் கூட மனதிற்குள் கரித்துக் கொட்டினார்களே தவிர அவை உக்கிரமாய் வெடித்துக் கிளம்பவில்லை. தங்களின் காயங்களை கார்ட்டூன்களாகவும், மீம்ஸ்களாகவும் பதியத் தெரிந்த இளைய தலைமுறைக்கு அதனை பெரும் போராட்டமாக மாற்றத் தெரியவில்லை. உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த மக்களின் குமுறல்களை பெரும் வேள்விக்குத் தயார்படுத்தும் தலைவர்கள் இல்லை. உண்மைகளைப் பதிந்து, வலிகளைப் பேசி, நியாயத்தின் குரலாக எழவேண்டிய ஊடகங்கள் கருநாகங்களுக்கு மகுடி வாசித்தன.

எதிர்ப்பும், போராட்டகுணமும் மழுங் கிப்போன மக்களைப் பார்த்து இந்தியப் பிரதமருக்கு உண்மையில் வருத்தம் ஏற்பட்டிருக்கும். அவர் எதிர்பார்த்த எதிர்ப்பலை கூட எழாமல் பிணங்களைப் போல் வாழும் மக்களைக் கண்டு அவர் உள்ளூர ஏமாற்றம் அடைந்திருப்பார். படித்தவர்கள், இளைஞர்கள், பெண்ணிய வாதிகள், இயக்கவாதிகள், திராவிர இயக்கங்கள், அரசியல் தளங்கள், எதிர்கட்சிகள், சமூகப் போராளிகள், கொள்கைச் சமுதாயத்தினர் என எங்கிருந்தும் கிளர்ச்சி எழவில்லை. இவர்களை விட இழிவானவர்கள் மத்தியதர வர்க்கத்தினர். அவர்கள் "பிரதமரின் இந்த முயற்சிக்கு' வரவேற்புரை வழங் கிக் கொண்டிருந்தார்கள். சினிமாக்காரர்கள் பட்டுக்கம்பளம் விரித்தார்கள். கார்ப்பரேட்டுகள் பெருமகிழ்வில் திளைத்திருந்தார்கள். அவர்கள் அப்படித்தான். ஆனால் பொதுமக்களுக்கு என்னவாயிற்று? "
நமக்கு ஒரு கண் போனா லும் பரவாயில்லை, மற்றவருக்கு இரண்டு கண் போகவேண்டும். நாம் பாதிப்புக்கு உள்ளானாலும் பரவாயில்லை, உல்லாசத்தில் திளைத்த பணக்கார முதலைகளும் பாதிக்கப்படவேண்டும்' என்ற மனநிலைதான் என்ற ஒரு கருத்து முன்வைக்கப் படுகிறது. இந்தக் கூறு உண்மையானால் இந்த வகை மக்கள் குரூர மனம் கொண்டவர்கள். யார் பாதிப் புக்கு உள்ளானாலும் நீதியின் பக்கம் நின்று குரல் கொடுப்பதுதான் மக்கள் அறம். கறுப்புப்பண மீட்பு, கள்ளப்பண ஒழிப்பு, பயங்கரவாதத்தடுப்பு ஆகிய காரணங்களைச் சொல்லி "தேச நலன்' முன்வைக்கப்பட்டதை ஒரு காரணமாக பாஜக வட்டாரங்கள் சொல்லி வருகின்றன. இந்தச் சூழ்ச்சி மயக்கத்தில் பொதுமக்கள் தங்களின் "தேசபக்தியைச்' சோதித்துக் கொள்ள விரும்பினாலும் அது குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துபவர்கள் எங்கே போனார்கள்?
பெரும் பாதிப்புக்கு உள்ளானபோதும் கிளர்ந்து எழாத இந்த மக்கள் முட்டாள்கள் அல்லர். ஆபத்தானவர்கள். சோதனைகளைச் சகித்துக் கொள்வது என்பது வேறு, தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக வாய்திறவாதிருப்பது என்பது வேறு. மக்களின் போராட்டகுணம் மழுங்கிப்போனால், அந்தச் சமூகம் ஒரு பேரழிவிற்குத் தன்னை தயார்படுத்திவிட்டது என்பதுதான் பொருள். இந்தியா ஜனநாயக நாடா? இல்லை எதேச்சதிகார நாடா?
என்ற கேள்வி துரத்திக் கொண்டே இருக்கிறது. மன்னராட்சியில் கூட இப் படி 86 விழுக்காடு புழக்கத்தில் உள்ள பணத்தை மதிப்பு இழக்கச் செய்யமுடியாது. அப்படிச் செய்தால் அங்கும் ஏதாவது ஒன்று நிக்ழ்ந்திருக்கும். தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்ட எதேச்சதிகார ஆட்சியின் கீழ் வாழ்ந்த மக்களை விட இந்த மௌனத்தில் உறைந்து கிடக்கும் ஜனநாயகவாதிகள் மோசமானவர்கள். அபாயகரமானவர்கள். மக்களின் இந்த மௌனமும், எதிர்ப்பற்ற மனநிலையும், இனவாத ஆதரவும் இந்தியாவை எத்தகைய பாதாளத்திற்கும் தள்ளிவிடக் கூடியவை. இனி இந்த வகையான இந்திய மக்களின் மீதான எவ்வகை ஆதிக்கத்தையும் செலுத்த அதிகாரத்தின் கொடும் கைகள் இன்னும் வீரியமாய் எழும். அழிக்கும். தங்கள் ஆட்சியாளர்கள் எப்படிப்பட்டவராயினும் பரவாயில்லை. எங்களுக்குத் தேவை விழுவதற்குக் கால்கள், வாழ்த்துப்பா பாடுவதற்கு ஒரு பெயர், எவரும் எங்களை ஆளலாம்.
எங்களை வழிநடத்தலாம் என்ற தமிழ் மனநிலை ஆட்டு மந்தையைவிடவும் கீழிறங்கி இருக்கும் இச்சூழலில் பரண் சொல்லும் மூதாட்டிக்காக நம் மனம் உள்ளபடியே ஏங்குகிறது. அந்த மூதாட்டியின் ரௌத்திரம் கொண்ட மக்களை ஆள்வதற்கு நல்ல ஆட்சியாளார்கள் தேவை. இந்த ஆட்டு மந்தைகளை ஆள்வதற்கு சின்னம்மாக்களும், பொய் மன்னர்களுமே போதுமானவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?