பதைபதைக்கிறது நெஞ்சம்....! நமது கல்வி நிலையங்களிலிருந்து வெளிவரும் செய்திகளையும், அங்கிருந்து வெளிக்கிளம்பும் மாணாக்கரையும் பார்க்கும்போது உண்மையில் உள்ளம் கலங்குகிறது. எத்தகைய மாணவர்களை நமது கல்விக்கூடங்கள் உற்பத்தி செய்து சமுதாயத்திற்கு வழங்குகின்றன? பணம்.. பணம்... பணம் என்ற பணத்தாசை பிடித்தாட்டும் கல்வியாளர்கள் இலஞ்சம், ஊழல் என்று பணம்பறிக்கும் ஆயுதமாகவே கல்வியைப் பயன்படுத்துகின்றனர். பணம் கொழிக்கும் துறை யாகக் கல்வியைப் பார்க்கும் மனோ நிலைதான் கல்விக்காக பணத்தைக் கொட்டிக் கொடுக்கத் தூண்டுகிறது. குழந்தை கருவுற்ற உடனேயே பள்ளிக்கட்டணத்தைச் செலுத்தி வரிசையில் நிற்கும் பேரவ லம் அதனாலேயே நிகழ்கிறது. எல்.கே.ஜி வகுப்புக்கே இலட்சக்கணக்கில் கொட்டிக் கொடுப்பதன் பின்னணி என்ன?
இன்று விதைத்தால் நாளை அறுவடை செய்யலாம் என்பதுதானே...! எல்.கே.ஜியில் இடம் பிடிப்பதற்காக கல்வி நிலையத்திற்கு டென்னிஸ் கோட் கட்டிக் கொடுத்திருக்கிறார் ஒருவர். சமுதாயத்தைச் செதுக்கும் ஆற்றல் மிக்கவர்கள் ஒருபோதும் கல்வி நிலையங்களிலிருந்து வெளிவரப் போவதில்லை. ஏனென்றால் அதற்கான திட்டமே இன்றைய கல்வி முறையில் இல்லை. மனப்பாடம் செய்யும் இயந்திரங்களுக்கான பயிற்சியளிக்கும் கூடத்திலிருந்து சம்பாதிக்கும் இயந்திரங்கள்தானே வெளியாகும். இன்றைய கல்வித்திட்டத்தை நாம் ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும். அந்த ஆய்வை நம் பிள்ளைகளின் கைகளில் திணிக்கப்பட்டிருக்கின்ற தெர்மெக்கோல்களிலிருந்து தொடங்க வேண்டும். பால் மனம் மாறாத பிஞ்சுகளுக்குக் கொடுக்கப்படும் செயல்முறைகளைப் பாருங்கள். விதைகளினால் வண்ணம் தீட்டப்பட்ட வயல்வெளியை ஒட்டுவதில் தொடங்கி மின் மோட்டார்களை உரு வாக்கும் செயல்முறைகள் வரை உற்று நோக்குங்கள். நம் குழந்தைகளால் இயல்கின்ற காரியமா அது?
அதைப் பெற்றோர்களால்கூட செய்ய இயலாது. அதனைத் தயாரித்துத் தருகின்ற கடைகள் பல்கிப் பெருகிவிட்டன. ஒரு பள்ளியில் இமாமாக பணிபுரியும் நண்பரைச் சந்தித்தபோது அவர் பெரும் கவலையுடன் இருந்தார். என்னவென்று வினவியபோது "இந்த மாதச் சம்பளம் முழுவதும் என் இரு குழந்தைகளின் செயல்முறைக்காகவே செலவாகிவிட்டது. அதை நம்மால் செய்ய முடியாது. கடைகளில்தான் வாங்க வேண்டும். தாமதமானால் பிள்ளைகளுக்கு பள்ளிகள் தரும் தண்டனைகளோ கொடுமையானது' என்று கலங்குகிறார். இந்தப் புள்ளியிலிருந்து தொடங்கினால் கல்வி எப்படி சந்தைப் படுத்தப்படுகிறது என்பதை விளங் கிக் கொள்ள முடியும். எப்படியாவது படித்து பட்டம் பெற வேண்டும் என்ற வேட்கையை வெறி யாய் மனதில் ஊன்றுகிறது இந்தக் கல்விமுறை. அதற்கு பெற்றோர்களும், சமூகமும் தங்களாலான பெரும் ஒத்துழைப்பை வாரி வழங்குகின்றன.
படித்தால்தான் வாழ்க்கை இல்லையெனில் செத்துப் போக வேண்டும் என்ற எண்ணம்தான் பள்ளித் தேர்வு முடிவுகளின்போது மாணவர்களுக்குத் தூக்குக் கயிற்றைத் தருகிறது. நீட் தேர்வின்போது தங்கள் ஆடைகளைக் கத்தரித்து, உள்ளாடைகளை கழற்றச் சொன்னபோதும்கூட எவ்வித எதிர்ப்புமின்றி மாணவர்கள் பணிந்துபோனதற்குக் காரணம் எப்படி யாவது படித்து வெளியேற வேண்டும். கல்விக்காக எதை வேண்டுமானாலும் இழப்பதற்கு இன்றைய சமூகம் தயாராகிவிட்டதன் வெளிப்பாடுதான் நீட் தேர்வின்போது நடந்த அவலங்களும், எதிர்ப்புக் குரலின்றி அடிமைப்பட்டுப்போனதும்! வணிகத்தை மையப்படுத்திய இந்தக் கல்வி முறையில் அறநெறிகள் போதிக்கப்படாததனால்தான் வகுப்பறைகளில் கொலைகள் நிகழ்கின்றன. சக மாணவர்களாலேயே மாணவிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

ஆசிரியர்களால் மாணவிகள் வேட்டையாடப்படுகிறார்கள். கல்லூரி வளாகங்களில் படுகொலைகள் நிகழ்கின்றன. பல்கலைக்கழகங்களில் வகுப்புவெறியர்கள் வெறியாட்டம்போடுகிறார்கள். மாணவர்களைக் கடத்துகிறார்கள். அழுகி நாறும் அவலமாய் கல்வி வளாகங்களில் தூக்கிட்டுச் சாகும் மாணவர்களின் பிணங்கள் தொங்குகின்றன. இந்த நிலை எப்போது மாறும்? இதனை மாற்றப் போவது யார்? இதுதான் இன்று நம்முன் எழுகின்ற கேள்வி. இதே வினாவுடன் 32 ஆண்டுகளுக்கு முன்பு சமரசம் இதழ் வெளியானது. அதற்கான விடை இன்றுவரை கிடைக்கவில்லை. இனியும் கிடைப் பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. பரணிலிருந்து எடுத்துவைத்த அந்த சமரசம் இதழ் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. அந்தப் பொறுப்பும், கடமைஉணர்வும் மாணவர்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது.
அதிலும் குறிப்பாக ஒழுக்க விழுமங்களுக்காகவும், உயரிய வாழ்வின் நோக்கத்தை அடைவதற்காகவும் பாடுபடுகின்ற இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பிற்கு இருக்கிறது. அதற்கான செயல்திட்டத்தை வடிவமைத்து அத்தகைய சிந்தனை உருவாக்கத்தைத் தொடர் இயக்கமாக நிகழ்த்திக் காட்ட வேண்டும். மாற்றம் வேண்டும் என்று குரல் கொடுப்பதனால் மட்டுமே மாற்றம் நிகழ்ந்துவிடப் போவதில்லை. கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஒருங்கிணைந்து புதிய கல்விப்பாதையை வகுக்க முன்வர வேண்டும். இல்லையெனில் கறைபடியும் கல்வித் திட்டத்திற்கு நாமும் உறுதுணை புரிந்தவர் களாகி விடுவோம்.